விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டாரா?

விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகா தேர்தலில் போட்டியிட்டதாக பரவும் தகவல் தவறானது.

Update: 2025-12-31 10:36 GMT

தமிழ்நாட்டில் மிக முக்கியமான பட்டியலினத் தலைவர்களில் திருமாவளவன் முதன்மையானவர். 1990களில் தலித் பேந்தர் ஆப் இந்தியாவின் தலைமைப் பொறுப்பில் இருந்த அவர், அதனை விடுதலை சிறுத்தைகள் கட்சியாக மாற்றினார். பல ஆண்டுகள் தேர்தலை புறக்கணித்தவர் 1999ம் ஆண்டு முதல் முறையாக தேர்தல் அரசியலில் இறங்கினார். தற்போது விசிகவுக்கு 2 மக்களவை உறுப்பினர்கள், 4 சட்டமன்ற உறுப்பினர்கள் பதவி உள்ளது. அத்துடன் மாநிலக் கட்சியாகவும் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

விசிக தலைவர் திருமாவளவன் பட்டியலின மக்கள் உள்பட தமிழ்நாட்டின் உரிமைப் பிரச்சனைகளுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து விசிக எதிர்கொள்ள உள்ளது. அதே சமயம் திருமாவளவன் தொடர்பாக பல்வேறு போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

பரவும் தகவல்

விசிக தலைவர் திருமாவளவன் 2001ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூர் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுதொடர்பான புகைப்படத்தை பகிர்ந்து திருமாவளவன் கர்நாடகாவைச் சேர்ந்தவர் என்றும் தகவல் பரப்பப்படுகிறது.

@___Arjun___04 என்ற எக்ஸ் பதிவர், “கர்நாடகாவில் இருந்து வந்த பண்டாரம் எப்படி எழுச்சித்தமிழர் ஆனான் ? யாராவது சிந்தித்தது உண்டா?” என்று திருமாவளவனை விமர்சனம் செய்திருந்தார்.

Archive 

இதேபோல பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் அதே தகவல் பகிரப்பட்டு இருந்தது.

Full View


உண்மை சரிபார்ப்பு

வைரல் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் திருமாவளவன் தமிழ்நாட்டில் உள்ள தொகுதியிலேயே போட்டியிட்டுள்ளார்.

திருமாவளவன் 2021ஆம் ஆண்டு எந்தத் தொகுதியில் போட்டியிட்டார் என்பது குறித்து கூகுளில் கீ வேர்டுகள் துணையுடன் சர்ச் செய்தோம். india votes என்ற இணையதளத்தில் 2001ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்த புள்ளிவிவரங்கள் வெளியிடப்பட்டு இருந்தன. அதில், “மங்களூர் (தனி) தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு 1855 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.


மேலும் நமது தேடலில் 2001ஆம் ஆண்டு தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளிவிவரங்கள் கிடைத்தன. அதிலும் மங்களூரு தொகுதியில் திருமாவளவன் போட்டியிட்ட ஆதாரங்கள் கிடைத்தன.


மேலும் நமது தேடலில் திருமாவளவன் தனது மங்களூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த செய்தி ஆதாரம் கிடைத்தது. டைம்ஸ் ஆப் இந்தியா 2004 பிப்ரவரி 3ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “மங்களூர் சட்டமன்ற உறுப்பினர் பதவியை திருமாவளவன் ராஜினாமா செய்தார். 2001 சட்டமன்றத் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் (தனி) தொகுதியில் இருந்து திமுக சின்னத்தில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


ஒன் இந்தியா தமிழ் வெளியிட்ட செய்தியிலும் அது கடலூர் மாவட்டம் மங்களூரு தொகுதி என்றே குறிப்பிடப்பட்டு உள்ளது.



 


மங்களூர் தொகுதி 2008ஆம் ஆண்டு நடந்த தொகுதி மறுசீரமைப்பில் நீக்கப்பட்டு அதில் இருந்த ஊர்கள் திட்டக்குடி சட்டமன்றத் தொகுதியுடன் இணைக்கப்பட்டது. இந்த ஆதாரங்கள் மூலமாக விசிக தலைவர் திருமாவளவன் தமிழ்நாட்டில்தான் போட்டியிட்டுள்ளார், கர்நாடகாவில் போட்டியிடவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவு

விசிக தலைவர் திருமாவளவன் 2001ல் கர்நாடகாவின் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டதாக பரவும் தகவல் தவறானது. உண்மையில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள மங்களூர் தொகுதியில் திமுக சின்னத்தில் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றிபெற்றார் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  விசிக தலைவர் திருமாவளவன் கர்நாடகாவின் மங்களூர் தொகுதியில் போட்டியிட்டார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News