திருவண்ணாமலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்ததா?

திருவண்ணாமலையில் போலீஸ் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்ததாக தவறான தகவலுடன் வீடியோ பரவி வருகிறது.

Update: 2026-01-10 07:51 GMT

தமிழ்நாட்டில் ஆட்சியில் இருக்கும் திமுகவும், மத்தியில் ஆட்சியில் உள்ள பாஜகவும் அரசியல் தாண்டி கொள்கை ரீதியாக கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றன. சனாதனம் தொடர்பாக உதயநிதி தெரிவித்த கருத்து சர்ச்சையான நிலையில், அதற்கு பாஜக தரப்பில் இருந்து கடும் கண்டனங்கள் குவிந்தன. அத்துடன், இந்துக்களுக்கு எதிராக திமுக அரசு உள்ளது எனவும் பாஜக குற்றம்சாட்டி வருகிறது.

இதனிடையே பாஜகவின் தாய் அமைப்பான ஆர்.எஸ்.எஸ் நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தில் கடந்த காலங்களில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று நிகழ்ச்சிகளை நடத்த வேண்டிய சூழல் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு ஏற்பட்டுள்ளது. அதற்கும் காவல் துறை கடும் நிபந்தனைகளை விதித்தே ஆர்.எஸ்.எஸ். பேரணிக்கு அனுமதி வழங்கியது.

பரவும் தகவல்


இந்த நிலையில் கோயில் நகரமான திருவண்ணாமலையில் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்னர் காவல்துறை கடும் பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடைபெற்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வீடியோவில் காவல்துறையின் வாகனங்கள் முன்னர் அணிவகுத்து செல்ல, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் அணிவகுத்துச் செல்வதை காண முடிந்தது.

@MeghUpdates என்ற எக்ஸ் கணக்கில், “நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு, திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ். பாதை அணிவகுப்பு மிகவும் பலத்த போலீஸ் பாதுகாப்பில்” என்று குறிப்பிட்டு இருந்தது. இந்த பதிவை 1.16 லட்சம் பேருக்கு ரீச் ஆன நிலையில், 9,300 பேர் லைக் செய்திருந்தனர்.

archive

இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோ ஷேர் செய்யப்பட்டு இருந்தது. குறிப்பாக வடமாநில சமூக ஊடகப் பயனர்கள் இந்த பதிவுகளை ஷேர் செய்திருப்பதை காண முடிந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல, மத்திய பிரதேசத்தில் நடந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

முதலில் தமிழ்நாட்டில் அண்மையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலங்கள் ஏதேனும் நடந்ததா என்று தேடியபோது அப்படி எதுவும் நடந்ததாக செய்தி ஊடக அறிக்கைப் பதிவுகள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. 2023ஆம் ஆண்டு திருவண்ணாமலை உள்ளிட்ட இடங்களில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்துள்ளது. ஆனால், அவை பகல் நேரத்தில் நடந்துள்ளன என்பதை தந்தி டிவி செய்தி வாயிலாக உறுதிப்படுத்தினோம்.

Full View

இதனையடுத்து, வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் வீடியோவின் குறிப்பிட்ட பகுதியை ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் ஆர்கனைசர் வீக்லி என்ற செய்தி நிறுவனம் தனது எக்ஸ் பக்கத்தில் அக்டோபர் 6,2025 அன்று வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம். அதில், “மத்தியப் பிரதேச மாநிலம் ரத்லமில் ஆர்எஸ்எஸ் பாதை சஞ்சாலன் என்ற மாபெரும் நிகழ்ச்சி நடைபெற்றது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.



இதேபோல டேனிக் பாஸ்கர் ஊடகமும் வைரல் வீடியோவுடன் ஒப்பிட்டுப் போகும் வீடியோவை அதே நாளில் பதிவிட்டு செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கத்தின் (ஆர்.எஸ்.எஸ்) நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ரத்லமில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணிவகுப்பு நடைபெற்றது. நகரத்தில் முதல் முறையாக, ஐந்து வெவ்வேறு இடங்களில் இருந்து தொடங்கிய இந்த அணிவகுப்பில் சுமார் 20,000 தன்னார்வலர்கள் கலந்து கொண்டு, சைலானா பேருந்து நிலையத்தில் ஒரு பெரிய கூட்டத்தில் உச்சத்தை அடைந்தனர்” என்று குறிப்பிடப்பட்டது.

இதே செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நியூஸ் 18 இந்தி, அமர்ஜுலா ஆகிய ஊடகங்களும் வீடியோவுடன் செய்தி வெளியிட்டு இருந்தன.


மேலும் ரத்லம் நகரில்தான் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்ததா என்பதை உறுதிப்படுத்த கூகுள் மேப் உதவியை நாடினோம். வைரல் வீடியோவில் உள்ள கட்டடத்தின் பெயரும், ரத்லம் நகரில் உள்ள கட்டடத்தின் பெயரும் ஒன்றாக இருப்பதை உறுதி செய்தோம். 


இந்த நிலையில் தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் வெளியிட்ட பதிவில், “மத்திய பிரதேசத்தில் நடந்த ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்: திருவண்ணாமலையில் நடந்ததாகப் பரவும் பொய்” என்று குறிப்பிட்டு விளக்கியுள்ளது.

இந்த ஆதாரங்களின் அடிப்படையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் நடந்தது தமிழ்நாட்டில் இல்லை, மத்திய பிரதேசத்தில் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு

தமிழ்நாட்டின் திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் அது மத்திய பிரதேசத்தில் ரத்லம் என்ற நகரில் நடந்த ஆர்.எஸ்.எஸ் ஊர்வலத்தில் எடுக்கப்பட்ட வீடியோ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிட வேண்டும் என TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  திருவண்ணாமலையில் ஆர்.எஸ்.எஸ் ஊர்வலம் போலீஸ் பாதுகாப்புடன் நடத்தப்பட்டது
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News