டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர்பலகை - உண்மை என்ன?

டாஸ்மாக் கடைக்கு இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளதாக பரவும் புகைப்படம் 2 ஆண்டுகள் பழையது.

Update: 2026-01-25 17:19 GMT

தமிழ்நாட்டில் இந்தி திணிப்புக்கு 1940களில் தொடங்கி தற்போது வரை கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. தமிழ், ஆங்கிலம் என இருமொழிக் கொள்கைதான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் 1960 களில் தமிழ்நாட்டில் நடந்தது இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டமாகும். அதே சமயம் நாங்கள் இந்திக்கு எதிரானவர்கள் இல்லை, இந்தி திணிப்புக்கே எதிரானவர்கள் என்று தமிழக அரசு தொடர்ந்து கூறி வருகிறது.

அண்மையில் கூட மும்மொழிக் கொள்கையை ஏற்றால்தான் கல்வி நிதியை ஒதுக்கீடு செய்வோம் என மத்திய அரசு டிமாண்ட் செய்துள்ளது. இந்த நேரத்தில் மொழிப் போராட்டம் குறித்து இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் பராசக்தி திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இதனால் இந்தி தொடர்பான விவாதம் மீண்டும் ஒருமுறை தமிழ்நாட்டில் எழுந்தது.

பரவும் தகவல்

இந்த நிலையில் பராசக்தி படம் வந்த பிறகு டாஸ்மாக் மதுபானக் கடைக்கு செல்லும் வழி என இந்தியில் பெயர் பலகையை தமிழ்நாடு அரசு வைத்துள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் தமிழ், ஆங்கிலத்துடன் இந்தியிலும் டாஸ்மாக் என எழுதப்பட்டுள்ளது.

@AugPic என்ற எக்ஸ் பதிவர், “பராசக்தி படம் பல்லிளித்த இடம். ஹிந்தி தெரியாது போடா என்று சொன்ன திராவிடத்தின் இன்றைய நிலை” என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Archive

@1961Ekmahes என்ற பதிவரோ, “இந்தி எதிர்ப்புன்னு சொல்லி மைல்கல்ல இருந்த இந்தி எழுத்தை எல்லாம் அழிச்சிட்டு இப்ப குடிக்க வர்ற வடக்கன் வழி தெரியாம போயிடக்கூடாதுன்னு டாஸ்மாக்கு இந்தியில போர்டு வச்சிங்க பாரு இதான்டா திராவிட மாடல்” என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.

Archive

இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு இருந்தது.


உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் உண்மைத்தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தபோது அது பழைய புகைப்படம் என்பதும், இந்தி தொடர்பான விவாதம் மீண்டும் எழுந்துள்ள நிலையில் பரப்பப்படுவதும் தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படத்தை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது நமக்கு 2024 ஜனவரி 18ம் தேதி ஏபிபி நாடு இணையதளம் வெளியிட்ட செய்தி கிடைத்தது. அதில், “நாமக்கல் மாவட்டம் முதலைப்பட்டி பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்கு தமிழ், ஆங்கிலம் மற்றும் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.

அப்பகுதியில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் அதிகளவில் இருந்து வருவதால், அவர்கள் எளிதாக அறிந்து கொள்ளும் வகையில் இந்தியில் மதுபானக்கடையின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. மூன்று மொழிகளில் பெயர் பலகை வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், தற்போது இந்த பலகை மாற்றப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.



டாஸ்மாக் கடை இந்தி பெயர் பலகை தொடர்பாக மதுவிலக்கு அமலாக்கத் துறை அமைச்சர் முத்துசாமி 2024 ஜனவரி 20ஆம் தேதி விளக்கம் அளித்துள்ளார். தினமணி வெளியிட்ட செய்தியில், “வட மாநிலத்தவா்கள் அதிகம் மதுக்கடைக்கு வருவதால், அவா்களின் வசதிக்காக ஊழியா்கள் ஹிந்தியில் பெயா் பலகை வைத்திருக்கலாம். தெரிந்தோ, தெரியாமலோ சட்டத்தை மீறினாலும் குற்றமே. டாஸ்மாக் மதுக்கடையில் ஹிந்தியில் பெயா் பலகை வைக்கப்பட்டது தொடா்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சா் சு.முத்துசாமி தெரிவித்தாா்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.


டாஸ்மாக் இந்தி பெயர் பலகை தமிழ்நாடு அரசின் சார்பில் வைக்கப்படவில்லை, தனியார் பார் உரிமையாளர் தான் வைத்துள்ளார் என்பதை புதிய தலைமுறை, நியூஸ் தமிழ் 24*7 ஆகியவை செய்தியாக வெளியிட்டுள்ளன.



இதுதொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகமும் ஜனவரி 21ஆம் தேதி, பரவுவது பழைய புகைப்படம், அது அப்போதே நீக்கப்பட்டுவிட்டது என்று விளக்கம் அளித்துள்ளது. அதில், “நாமக்கல் மாவட்டம், முதலைப்பட்டி அருகே உள்ள ஒரு டாஸ்மாக் கடையில் கடந்த 2024-ம் ஆண்டு புதியதாக மதுக்கூடம் திறக்கப்பட்டபோது இந்தப் பலகை வைக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் தெரிந்த உடனேயே அந்தப் பலகையை அகற்றப்பட்டுவிட்டது. தற்போது அந்த இடத்தில் அத்தகைய அறிவிப்புப் பலகைகள் ஏதும் இல்லை என்றும், பழைய புகைப்படத்தைத் தவறான தகவலுடன் பகிர வேண்டாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் மூலமாக அது தமிழ்நாடு அரசு வைத்த பெயர் பலகை அல்ல, தனியார் வைத்த பெயர் பலகையும் உடனடியாக அகற்றப்பட்டது தெரியவந்துள்ளது.

முடிவு

தமிழ்நாட்டில் டாஸ்மாக் கடைக்கு அண்மையில் இந்தியில் வழிகாட்டி பெயர் பலகை வைக்கப்பட்டதாக பரவும் புகைப்படம் இரண்டு வருடங்கள் பழமையானது. 2024ஆம் ஆண்டு ஜனவரி மாதமே அந்த பெயர் பலகை அகற்றப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது தகவல்களை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  டாஸ்மாக் கடைக்கு அண்மையில் இந்தியில் பெயர் பலகை வைக்கப்பட்டது
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News