திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திருமா கூறினாரா?

திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திருமாவளவன் கூறியதாக பரவும் தகவல் தவறானது.

Update: 2026-01-30 03:22 GMT

ராமதாஸ் தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சியும், திருமாவளவன் தலைமையிலான விடுதலை சிறுத்தைகள் கட்சியும் 2011 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றன. 2012ம் ஆண்டு தருமபுரி கலவத்தையொட்டி பாமக - விசிக இடையே மோதல் உண்டான நிலையில், அதன்பிறகு இரு கட்சிகளும் ஒன்றாக இணைந்து பயணிக்கவில்லை. பாமக, பாஜக இடம்பெறும் கூட்டணியில் ஒருபோதும் இடம்பெற மாட்டோம் என விசிக தலைவர் திருமாவளவன் தொடர்ச்சியாக கூறி வருகிறது.

திமுக கூட்டணியில் விசிக கடந்த 8 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. வரும் சட்டமன்றத் தேர்தலிலும் திமுக கூட்டணியில் நீடிப்போம் என திருமாவளவன் கூறி வருகிறார். முதலமைச்சர் ஸ்டாலினும் அதனை உறுதிப்படுத்தி உள்ளார். அதே சமயம் பாமக என்பது அன்புமணி, ராமதாஸ் என இரு பிரிவுகளாக பிளவுற்றுள்ளது. பாஜக - அதிமுக கூட்டணியில் அன்புமணியின் பாமக இடம்பெற்றுள்ளது. ஆனால், ராமதாஸ் பாமக இன்னும் முடிவை அறிவிக்கவில்லை. திமுகவை ராமதாஸ் விமர்சிக்காத நிலையில், அக்கூட்டணியில் இடம்பெற வாய்ப்புகளும் உள்ளன. இதற்கு விசிக சம்மதிக்குமா என்ற கேள்வி இருந்து வருகிறது.

பரவும் தகவல்

இந்த நிலையில் விசிக தலைவர் திருமாவளவன், “திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலையிடாது; முதலமைச்சர் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம்” என்று பேசியதாக பாலிமர் செய்திகள் நியூஸ் கார்டு ஒன்றை வெளியிட்டது.

Full View

இந்த கார்டைப் பகிர்ந்த @SathishKum57422 என்ற எக்ஸ் பதிவர், “பாமக கூட்டணியில் விடுதலை சிறுத்தை கட்சி இடம்பெறாது என்று கூறினார் திருமா. ஆனால் முதலமைச்சர் எடுக்க முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று தெரிவித்திருப்பது பாமக நிறுவனர் ராமதாஸ் அவர்கள் தரப்பு திமுகவில் இணைய போகிறது என நினைக்கிறேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதேபோல திமுக கூட்டணியில் ராமதாஸின் பாமக இணைய திருமா சம்மதம் தெரிவித்ததாகவே நியூஸ் கார்டுகள் பகிரப்பட்டன. பதிவு 1, பதிவு 2, பதிவு 3,



உண்மை சரிபார்ப்பு

உண்மையில் திருமாவளவன் ராமதாஸ் பாமக கூட்டணிக்கு வருவதை ஏற்றுக்கொண்டாரா என TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு நடத்தியது. அதில், திருமாவளவன் அப்படி எந்த இடத்திலும் கூறவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முதலில் திருமாவளவன் கூட்டணி தொடர்பாக அளித்த பேட்டியை முழுவதுமாக பார்த்தோம். வைரலாகும் கூற்றுடன் பாலிமர் செய்திகள் காட்டுமன்னார் கோயிலில் திருமாவளவன் அளித்த பேட்டி வீடியோவை ஜன.27ஆம் தேதி வெளியிட்டுள்ளது. அதில், “சாதிய, மதவாத கட்சிகளோடு ஒருபோதும் நாங்கள் கூட்டணி வைத்துக்கொள்ள மாட்டோம். அந்த கட்சிகள் இடம்பெறும் கூட்டணியிலும் இடம்பெற மாட்டோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகள் இடம்பெற வேண்டும் என்று அக்கட்சி தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். விசிக கூட்டணி சேருங்கள் என்றோ, சேர்க்கக்கூடாது என்றோ சொல்வதற்கு எந்த உரிமையும் இல்லை” என்று திருமாவளவன் பேசுகிறார்.



இந்த பேட்டியின் முழு வீடியோவும் விசிகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான வெளிச்சம் சேனலில் வெளியாகியுள்ளது. அதிலும், ”ஏற்கனவே எடுத்த நிலைப்பாட்டில் உறுதியாக உள்ளோம். நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தால்தான் கட்சியினர் என் மீது வைத்துள்ள நம்பிக்கையை காப்பாற்ற முடியும்” என்றுதான் சொல்கிறார். ஆனால், பேட்டியின் எந்த இடத்திலும் முதல்வர் ஸ்டாலின் பேச்சுக்கு கட்டுப்படுகிறோம் என்று சொல்லவே இல்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

Full View

கூட்டணி தொடர்பாக திருமாவளவன் அண்மையில் பேசிய வீடியோக்களைப் பார்த்தோம். புதிய தலைமுறை யூட்யூப் சேனலில் திமுக கூட்டணியில் ராமதாஸ்?: திருமாவளவன் கொடுத்த ரியாக்ஷன் என்ற தலைப்பில் ஜனவரி 25ஆம் தேதி வீடியோ வெளியிடப்பட்டு இருந்தது. அதில், “பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்து வருகிறோம். இந்த இரு கட்சிகளும் சாதி, மதத்தின் பெயரால் வெறுப்பு அரசியலை முன்னெடுக்கும் கட்சிகளாக உள்ளன என்பதை சுட்டிக்காட்டி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறோம். பாமகவின் ஓர் அணி மோடி பாஜக - அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ளது. மற்றொரு அணியை திமுக கூட்டணியில் இணைத்துக்கொள்வது குறித்து திமுக தலைமைதான் முடிவு செய்ய வேண்டும். கூட்டணி தொடர்பாக 14 ஆண்டுகளுக்கு முன்பு எடுத்த முடிவில் எந்த மாற்றமும் இல்லை” என்று தெரிவித்தார்.

Full View




இதேபோல பாஜக, பாமக இருக்கும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என திருமாவளவன் கூறியது குறித்து தினமணி, விகடன் வெளியிட்ட செய்திகள் வாயிலாகவும் உறுதிப்படுத்தியுள்ளோம்.




 

இந்த ஆதாரங்கள் மூலமாக ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று திருமாவளவன் எந்த இடத்திலும் சொல்லவில்லை என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முடிவு

திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என்று திருமாவளவன் சொன்னதாக வெளியான கூற்று முற்றிலும் தவறானது. திருமாவளவன் எந்த இடத்திலும் அவ்வாறு கூறவில்லை. பாஜக, பாமக இடம்பெறும் கூட்டணியில் இடம்பெற மாட்டோம் என்று அவர் கூறியதுதான் உண்மை. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  திமுக கூட்டணியில் யாரை சேர்த்தாலும் ஸ்டாலின் முடிவுக்கு கட்டுப்படுவோம் என திருமாவளவன் பேச்சு
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News