இலங்கை அதிபர் துப்பாக்கி பாதுகாப்புடன் இந்து கோயிலில் வழிபாடு செய்தாரா?

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க இந்து கோயிலில் சட்டையின்றி வழிபாடு செய்ததாக பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது

Update: 2026-01-29 03:48 GMT

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக இலங்கையில் அதிகளவிலான தமிழ் மக்கள் வசித்து வருகிறார்கள். அதே சமயம் இலங்கையில் தமிழர்களுக்கு எந்தவிதமான அரசியல் உரிமைகளும் கிடைக்கவில்லை என கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது ஒருபுறம் இருக்க சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வரலாற்றில் இல்லாத அளவுக்கு பொருளாதார சரிவை சந்தித்தது. விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் ராஜபக்சே குடும்பத்திற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடினார்கள்.

இந்த சூழலில் 2024ஆம் ஆண்டு முதல் இலங்கை அதிபராக அனுர குமார திசநாயக்க பதவி வகித்து வருகிறார். இலங்கை அதிபர் பல்வேறு இடங்களுக்கு செல்வது, காலையில் எளிமையாக நடைபயிற்சி செல்வது என அவருடைய புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பரவும் புகைப்படம்

இலங்கை அதிபர் அனுர குமார திசநாயக்க இந்து கோயிலில் துப்பாக்கிப் பாதுகாப்புடன் வழிபாடு மேற்கொள்வதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் சட்டை இல்லாமல் இலங்கை அதிபர் வழிபட, சுற்றிலும் சட்டையின்றி துப்பாக்கியுடன் பாதுகாவலர்கள் நிற்கிறார்கள்.

@JKalyanaraman என்ற எக்ஸ் பதிவர், “இலங்கை அதிபர் என்று நினைக்கிறேன்.. திராவிடர்களுக்கு இந்த போட்டோவை பார்த்தால் பிடிக்காது” என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Archive : 

மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் புகைப்படம் வைரலாகப் பரவி வருகிறது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதிசெய்யப்பட்டது.

முதலில் இந்து கோயிலில் இலங்கை அதிபர் வழிபாடு செய்தாரா என்பது குறித்து தொடர்புடைய கீ வேர்டுகள் உதவியுடன் ஆய்வு செய்தோம். அதில், அம்மன் கோயிலுக்குச் சென்று அனுர குமார திசாநாயக்க வழிபாடு நடத்தியிருப்பதாக இலங்கை தமிழ் ஊடகமான வீரகேசரி 2026 ஜனவரி 16ஆம் தேதி செய்தி வெளியிட்டுள்ளது.


செய்தியில், “நயினாதீவுக்கு விமானம் மூலம் சென்ற அதிபர், நாக விகாரையில் சிறப்பு வழிபாடுகளில் கலந்துகொண்டு, விகாராதிபதியிடமும் ஆசிகளை பெற்றுக்கொண்டார்.அதனைத் தொடர்ந்து, நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலயத்துக்கும் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ada Derana Tamil என்ற ஊடகமும் இலங்கை அதிபர் கோயிலில் வழிபாடு நடத்திய புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. அதில் எங்கேயும் அவர் சட்டை இல்லாமல் இருப்பது போன்ற புகைப்படங்கள் இல்லை. மேலும் மேல் சட்டை அணிந்திருப்பதையும், அருகில் துப்பாக்கி ஏந்திய பாதுகாவலர்கள் யாரும் நிற்கவில்லை என்பதையும் உறுதி செய்துகொண்டோம்.


 



இதனை kuruvi.lk ,yarl com ஆகிய இணையதளங்களில் வெளியான செய்திகள் வாயிலாகவும் உறுதி செய்துகொண்டோம்.

வைரல் புகைப்படத்தை நாம் கூர்ந்து கவனித்தபோது, அதில் உள்ள அதிபர் முகத்தில் மாறுபாடுகள் இருப்பதை கண்டறிந்தோம். அத்துடன் புகைப்படத்தின் கீழ் பகுதியில் Gemini AI லோகோ இருந்ததை கண்டுபிடித்தோம். இதனால் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகித்தோம்.


இதனை உறுதி செய்ய வைரல் புகைப்படத்தை Hive Moderation என்ற ஏஐ சரிபார்ப்பு இணையதளத்தில் உள்ளிட்டோம். அதன் முடிவு வைரல் புகைப்படம் போலியாக இருப்பதற்கான வாய்ப்புகள் 99.9 சதவீதம் இருப்பதாக வந்தது. 



 


இந்த ஆதாரங்கள் வாயிலாக வைரலாகும் புகைப்படம் போலியானது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முடிவு

இந்து கோயிலில் சட்டையில்லாமல் துப்பாக்கி பாதுகாப்புடன் இலங்கை அதிபர் வழிபாடு என பரவும் புகைப்படம் போலியானது. ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு சமூக வலைதளங்களில் தவறான தகவலுடன் பகிரப்படுகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Tags:    

Similar News