தமிழ்நாடு அரசின் ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவமா? - உண்மை இதுதான்

குடியரசு தினத்தில் தமிழ்நாடு அரசு இயக்கிய ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக தவறான தகவல் பரப்பப்படுகிறது.

Update: 2026-01-28 14:57 GMT

நாடு முழுவதும் ஜனவரி 26ஆம் தேதி 77வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்து மரியாதை செய்தார். விழாவில் சிறப்பு விருந்தினர்களாக ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அந்தோனியோ கோஸ்டா, ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. ராணுவ சாகசங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு உள்பட 17 மாநிலங்களைச் சேர்ந்த அலங்கார ஊர்திகளும் அணிவகுப்பில் இடம்பெற்றன. தமிழ்நாட்டின் வீர விளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டு தொடர்பான அலங்கார ஊர்தி வாகனம் பலரின் கவனத்தையும் ஈர்த்தது.

பரவும் தகவல்

குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அரசின் அலங்கார ஊர்தியில் தமிழ் இடம்பெறாமல் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக கூற்றுடன் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வைரல் புகைப்படத்தை பகிர்ந்த kalgikumaru என்ற எக்ஸ் பதிவர், “தமிழ்நாடு ஊர்தி.. தமிழ் இல்லாமல் இந்தி.” என்று குறிப்பிட்டு இருந்தார். ஜனவரி 26ஆம் தேதி போடப்பட்ட இந்த பதிவு சுமார் 68 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருந்தது.

Archive 

இதேபோல தமிழ்நாடு ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவம் என பதிவு 1, பதிவு 2, பதிவு 2 சமூக வலைதளப் பக்கங்களில் பகிரப்பட்டு இருந்தது.


உண்மை சரிபார்ப்பு

வைரல் கூற்றின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மை என்னவெனில் மத்திய அரசு விதியின்படி முன்புறம் இந்தியும், பக்கவாட்டில் மாநில மொழிகளும் இடம்பெற வேண்டும். அந்த விதிப்படி பக்கவாட்டி தமிழ் எழுத்துக்கள் இருந்தன.

முதலில் தமிழ்நாடு அரசின் ஊர்தியில் தமிழ் எழுத்துக்கள் இருந்ததா என்பது குறித்து ஆய்வு செய்தோம். தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை எக்ஸ் பக்கத்தில், தமிழ்நாடு அலங்கார ஊர்தியின் புகைப்படத்தை பதிவு செய்திருந்தது. அதில், தமிழ்நாடு என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பது தெளிவாகத் தெரிந்தது. இதேபோல மத்திய அரசின் PIB in Tamil Nadu சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களிலும் தமிழ்நாடு என்று தமிழில் இருந்தது.



அலங்கார ஊர்தி தொடர்பான வீடியோவை MyGov India யூட்யூப் பக்கத்தில் பார்த்தோம். அதில் தமிழ்நாடு அலங்கார ஊர்தியில் பக்கவாட்டில் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு இருந்ததை பார்த்தோம். அத்துடன், அணிவகுத்து வந்த அனைத்து அலங்கார ஊர்திகளிலும் முன்பக்கத்தில் இந்தி வார்த்தைதான் இருக்கிறது என்பதை உறுதி செய்துகொண்டோம்.

Full View




மேலும் நமது தேடலில் அலங்கார ஊர்திகள் தொடர்பாக மத்திய அரசின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள விதிகள் குறித்த சுற்றறிக்கை அதன் இணையதளத்தில் நமக்கு கிடைத்தது. அதில், “மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களின் பெயர்கள் அலங்கார ஊர்திகளின் முன்பக்கத்தில் இந்தியிலும், பின்புறம் ஆங்கிலத்திலும் இடம்பெற வேண்டும். ஊர்தியின் பக்கவாட்டு பகுதிகளில் மாநில மொழியிலும் இடம்பெற வேண்டும்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.


இந்தி மட்டுமே தமிழ்நாடு ஊர்தியில் இடம்பெற்றுள்ளதாக தகவல் பரவியதை அடுத்து, தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமும் இதுதொடர்பாக விளக்கம் அளித்துள்ளது. அதில், “டெல்லி குடியரசு தின விழா அணிவகுப்பில் பங்கேற்கும் அலங்கார ஊர்தியில் மொழிகள் எங்கு இடம்பெற வேண்டும் என்ற விதிமுறைகள் ஒன்றிய பாதுகாப்பு அமைச்சகத்தால் விதிக்கப்படும். ஊர்தியின் முன்பக்கத்தில் இந்தியும், பின் பக்கத்தில் ஆங்கிலமும், ஊர்தியின் இருபுறங்களில் மாநில மொழிகள் இடம்பெறும்.

இவ்விதிமுறைபடி, தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற அலங்கார ஊர்தியின் இருபுறங்களிலும் தமிழ் மொழியில் தமிழ்நாடு என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால், தமிழ் மொழி இடம்பெறவில்லை என்றும், இந்திக்கு தமிழ்நாடு அரசு முக்கியத்துவம் கொடுத்ததாகத் தவறான தகவல் பரப்பப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவு

குடியரசு தின விழா அலங்கார ஊர்தியில் தமிழ்நாடு ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. உண்மையில் மத்திய அரசின் விதிப்படி முன்பக்கம் இந்தியிலும் பக்கவாட்டு பகுதிகளில் தமிழிலும் வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  குடியரசு தின விழா தமிழ்நாடு அரசு ஊர்தியில் இந்திக்கு முக்கியத்துவம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News