ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்பனை கிடையாது என வியாபாரிகள் சங்கம் அறிவித்ததா

ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்பனை செய்யமாட்டாது என்ற விளம்பரம் வாரணாசிக்கு மட்டுமே பொருந்தும்.

Update: 2026-01-18 07:35 GMT

இந்திய மக்கள் தங்கத்தில் அதிகமான முதலீடுகளை செய்து வருகிறார்கள். குறிப்பாக தங்க நகைகள் வாங்குவதில் அதிக ஆர்வம் செலுத்துகின்றன. தங்க நகையை கவுரவத்தின் அடையாளமாக கருதும் பழக்கமும் இந்தியாவில் உள்ளது. அவசர பணத் தேவைகளுக்கு நகையை அடகு வைத்து பணம் பெறலாம் என்பதும், நகைகளின் மீதான முதலீடுகள் அதிகரிக்க முக்கிய காரணம்.

இந்தியா முழுக்க லட்சக்கணக்கான நகைக் கடைகளும் தங்க நகைகளை விற்பனை செய்து வருகின்றன. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துவிட்டாலும் கூட அதன் மீதான மோகம் குறையவில்லை. மக்கள் நகைகளை வாங்கிக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதே சமயம் நகைக்கடைகளில் திருடு போகும் சம்பவங்களும் நடக்கத்தான் செய்கின்றன. நூதன முறைகளில் விற்பனையாளரின் கவனத்தை திசைதிருப்பு நகை திருடும் சம்பவங்கள் நடந்துள்ளன.

பரவும் தகவல்

பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா, ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு நகைகளை விற்பனை செய்ய மாட்டோம் என நகை வியாபாரிகள் சங்கம் அறிவித்ததாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

k7 tAMIL News என்ற பேஸ்புக் பக்கத்தில், "பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா, பர்தா, ஹிஜாப் அணிந்து வரும் பெண்களுக்கு நகைகளை விற்பனை செய்ய மாட்டோம் - நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு" என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

Full View

இதேபோல தினகரன் சமூக வலைதளப் பக்கத்திலும் நகை விற்பனை கிடையாது என்ற நியூஸ் கார்டு வைரலானது.

Full View

இதே கருத்தை பதிவு 1 த்ரேட்ஸ் சமூக வலைதளத்திலும் வெளியிட்டு இருந்தனர். இதில் தினகரன் வெளியிட்ட நியூஸ் கார்டு பலரிடம் பரவி, அது இந்தியா முழுமைக்கான தடை என்று புரிந்துகொள்ளத் தொடங்கினர்.


உண்மை சரிபார்ப்பு

வைரலாகும் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அத்து வாரணாசிக்கு மட்டும் தொடர்புடைய செய்தி, நாடு முழுவதுக்குமானது அல்ல என்பது தெரியவந்தது.

முதலில் ஹிஜாப் அணிந்து வந்தால் நகை வாங்க முடியாது என்ற அறிவிப்பு தொடர்பாக கூகுளில் தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் சர்ச் செய்தோம். ஜனவரி 11 சமயம் தமிழ் இணையதளம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.


அதில், "வாரணாசியில் உள்ள உத்தரபிரதேச நகைக்கடை உரிமையாளர்கள் சங்கத்தின் (UPJA) உள்ளூர் பிரிவு பாதுகாப்பு காரணங்களுக்காக புர்கா , மாஸ்க், ஸ்கிரீன் மற்றும் ஹெல்மெட் அணிந்த வாடிக்கையாளர்களுக்கு நகை விற்பனை செய்வதை தடை செய்துள்ளது. சமீபத்தில் நடந்த திருட்டு மற்றும் மோசடி சம்பவங்களால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிடப்பட்டுள்ளது

இதேபோல தி இந்து ஆங்கில இணையதளம் ஜனவரி 10 செய்தி வெளியிட்டுள்ளது. அதில், "பல மாவட்டங்களில் நடந்த நகைத் திருட்டு, கொள்ளை மற்றும் மோசடி சம்பவங்களைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நகை உரிமையாளர் சங்கத்தினர் கூறினர்.முகத்தை மறைத்து வரும் வாடிக்கையாளர்களுக்கு நகைகளை நாங்கள் விற்க மாட்டோம்.முகம் மறைக்கப்பட்ட ஒருவர் குற்றம் செய்தால், அவர்களின் அடையாளத்தை உறுதிப்படுத்த முடியாது. இதற்காக, எங்கள் கடைகளின் முன் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளோம், அதில் முகமூடி, புர்கா , மாஸ்க் அல்லது முக்காடு அணிந்து கடைக்குள் நுழைவது தடைசெய்யப்பட்டுள்ளது என்று நகை வியாபாரிகள் சங்க மாவட்டத் தலைவர் கமல் சிங் தெரிவித்தார்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



 பாதுகாப்பு காரணங்களுக்காக வாரணாசி நகைக்கடைக்காரர்கள் புர்கா மற்றும் முகமூடி அணிந்த வாடிக்கையாளர்களுக்கு விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளனர் என்று மனி கண்ட்ரோல் இணையதளமும்,பிடிஐ இணையதளமும் செய்தி வெளியிட்டுள்ளன.


இதேபோல தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகமும் இதுகுறித்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது. அதில், "தமிழ்நாட்டில் நகைக்கடைகளில் ஹிஜாப் அணிந்து வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் தவறாகப் பகிரப்படுகிறது. உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள நகைக்கடைகளில் ஹிஜாபுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக செய்திகளில் வெளியாகி இருக்கிறது. தமிழ்நாட்டில் அல்ல. தவறான தகவலைப் பரப்பாதீர்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் மூலமாக தடை தமிழ்நாட்டில் விதிக்கப்படவில்லை என்பது தெளிவானது.

முடிவு

ஹிஜாப் அணிந்து வருபவர்களுக்கு நகை விற்பனை கிடையாது என பரவி வரும் தகவல் தவறானது. அது உத்தர பிரதேசத்தில் உள்ள வாரணாசி நகரத்திற்கு மட்டுமே பொருந்தும். மற்ற எந்த நகரங்களில் இதுபோன்ற தடை விதிக்கப்படவில்லை. ஆனால், இந்தியா முழுமைக்கு தடை விதிக்கப்பட்டது போல தவறான தகவல் பரப்பப்படுகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை Telugupost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  ஹிஜாப் அணிந்து வந்தால் நகை விற்பனை செய்யமாட்டாது என நகை வியாபாரிகள் சங்கம் அறிவிப்பு
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News