கடற்கரையில் கஞ்சா உலர வைத்து தூங்கிய நபர் - தமிழ்நாட்டில் நடந்ததா?
கேரளாவில் கஞ்சா உலரவைத்து தூங்கிய நபர் குறித்த வீடியோவைப் பகிர்ந்து அது தமிழ்நாட்டில் நடந்தது என குறிப்பிட்டு வருகிறார்கள்
தமிழ்நாட்டில் போதைப் பொருள் விற்பனை அதிகமாக உள்ளதென எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக போதை வஸ்துவான கஞ்சா சாதாரணமாகக் கிடைப்பதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. போதைப் பொருட்களை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தல்களும் எழுந்தன.
அதே சமயம் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை ஒழிக்க தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை காவல்துறை மூலமாக மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக ஆபரேஷன் கஞ்சா என்ற பெயரில் கஞ்சா ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. நாள்தோறும் கஞ்சா விற்பனையாளர்கள் கைது, கஞ்சா பறிமுதல் உள்ளிட்ட செய்திகளும் வெளியாகி வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் தமிழ்நாட்டில் கடற்கரை ஒன்றில் கஞ்சாவை காயவைத்துவிட்டு நபர் ஒருவர் எந்தவித தயக்கம் இன்றி நன்றாக உறங்குவதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்து திமுக அரசை விமர்சனம் செய்து வருகிறார்கள்.
@mNishanthTR என்ற பயனர் தனது எக்ஸ் பக்கத்தில், " கஞ்சாவை வெயில் காய(உலர) வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞன் 🙄. திராவிட மாடல் ஆட்சியின் சாதனை 👌" என்று விமர்சனம் செய்திருந்தார்.
கஞ்சாவை வெயில் காய(உலர) வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞன் 🙄
— கன்னியாகுமரி நிஷாந்த்✨ (@ImNishanthTR) January 17, 2026
'
'
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை 👌pic.twitter.com/RyLaakURdN
இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வைரல் வீடியோ பகிரப்பட்டு திமுக அரசு மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு இருந்தது.
கஞ்சாவை வெயில் காய(உலர) வைத்துக்கொண்டு உறங்கிய இளைஞன் 🙄
— R.MATHAN-SAY YES TO WOMEN SAFTEY & AIADMK (@bulletmathan2) January 18,
'
'
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை 👌 pic.twitter.com/p5lsYiPig9
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. அந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடந்தது அல்ல, கேரளாவில் நடந்துள்ளது.
முதலில் வைரலாகும் வீடியோவை முழுவதுமாக பார்த்தோம். பிகைண்ட்வுட்ஸ் வெளியிட்ட அந்த வீடியோவில், “இந்த சம்பவம் கேரள மாநிலம் கோழிக்கோழி கடற்கரையில்தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. 370 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்த கேரள போலீசார், வெள்ளாயில் பகுதியைச் சேர்ந்த முகமது ரஃபி என்பவரை கைது செய்தது” என்று வர்ணனையாளர் கூறுவதை காண முடிந்தது. ஆனால், தலைப்பில் மேலோட்டமாக கஞ்சாவை கடற்கரையில் காய வைத்த நபர் என்று மட்டும் குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதனை உறுதிப்படுத்துவதற்காக தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். இதுதொடர்பாக நமக்கு சில செய்தி இணைப்புகள் கிடைத்தன.
ப்ரீ ப்ரஸ் ஜர்னல் ஜனவரி 16ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “கேரளாவின் கோழிக்கோடு கடற்கரையில் கஞ்சா இலைகளை உலர வைத்துவிட்டு, அதன் அருகில் தூங்கிய 39 வயது நபர் கைது செய்யப்பட்டார். காலையில் நடைப்பயிற்சி மேற்கொண்டவர்கள் இந்த அசாதாரண காட்சியைக் கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். காவல் அதிகாரிகள் 370 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து, மீண்டும் மீண்டும் குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். அவர் வெள்ளாயிலைச் சேர்ந்த முகமது ரஃபி என அடையாளம் காணப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஊடகமான மாத்ருபூமி வெளியிட்ட செய்தியில், “வெள்ளாயில் காவல் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, முகமது ரஃபி தப்பி ஓட முயன்றதாகக் கூறப்படுகிறது, ஆனால் உடனடியாக கைது செய்யப்பட்டார்.இந்த சம்பவம் ஒரு பள்ளிக்கு அருகில் நடந்ததாலும், போதைப்பொருள் மாணவர்களுக்கு விற்பனை செய்வதற்காக இருந்ததாக அதிகாரிகள் சந்தேகிப்பதாலும், அவர் மீது போதைப்பொருள் சட்டம் மற்றும் சிறார் நீதிச் சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனோரமா ஆன்லைன் வெளியிட்ட செய்தியில், “கர்நாடகாவின் வைரகுப்பாவிலிருந்து கஞ்சாவை கொண்டு வந்து நகரில் கஞ்சா விற்பனை செய்ய முகமது ரஃபி முயற்சி செய்துள்ளார். கஞ்சாவை கடற்கரையில் உலர்த்திக்கொண்டு இருந்த நபர் குடிபோதையில் தூங்கிவிட்டார். கைது செய்யப்பட்ட அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் தனது எக்ஸ் பக்கத்தில், “கடற்கரையில் கஞ்சாவை காய வைத்த நபர்.. தமிழ்நாடு அல்ல, கேரளா” என்று குறிப்பிடப்பட்டு விளக்கம் அளித்துள்ளது.
கடற்கரையில் கஞ்சாவை காய வைத்த நபர்.. தமிழ்நாடு அல்ல, கேரளா !
— TN Fact Check (@tn_factcheck) January 18, 2026
ஆதாரம்: https://t.co/YovCnrB3gy@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/yDbu7MBQaU pic.twitter.com/KCU9FWyfxy
இந்த ஆதாரங்கள் மூலம் கஞ்சா உலர வைத்த சம்பவம் கேரளாவின் கோழிக்கோடு பகுதியில் நடந்தது என்பது நிரூபணமாகியுள்ளது.
முடிவு
தமிழ்நாட்டில் கஞ்சா இலைகளை உலர வைத்து தூங்கிய நபர் என தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அது கேரள மாநிலம் கோழிக்கோடு கடற்கரையில் நடைபெற்றது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.