விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் குரல் கொடுத்தாரா?

விஜய்க்கு ஆதரவாக நாடாளுமன்றத்தில் தயாநிதி மாறன் பேசியதாக பரவும் வீடியோ 6 ஆண்டுகள் பழையது.

Update: 2026-02-13 13:56 GMT

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சியில் இருந்து வருகிறது. 2024ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தொடங்கிய நடிகர் விஜய், ஆளும் திமுகவை தனது அரசியல் எதிரி என்று அறிவித்தார். அதுமுதல் தற்போது வரை திமுக மீது கடுமையான விமர்சனங்களை விஜய் முன்வைத்து வருகிறார். அதுபோலவே திமுக நிர்வாகிகளும் விஜய் தரப்புக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர். இதனால் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையே கடும் பனிப்போர் நிலவி வருகிறது.

இதனிடையே நடிகர் விஜய் வருமானத்தை மறைத்ததாக கூறி, ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் அபராதம் செலுத்தும்படி வருமான வரித்துறை பிறப்பித்த உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் பிப்ரவரி 6ஆம் தேதி உத்தரவிட்டது. அத்துடன், விஜய் தாக்கல் செய்த மனுவையும் தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

பரவும் தகவல்


வருமான வரித்துறை அபராதம் விதித்த விவகாரத்தில் விஜய்க்கு ஆதரவாக திமுக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில், “தமிழகத்திற்கு தேர்தல் வருவதால் ரஜிக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், விஜய் மட்டும் குறிவைக்கப்படுவது ஏன்?” என்று ஆங்கிலத்தில் கேள்வி எழுப்புகிறார்.

இதனை பகிர்ந்த @rajakumaari என்ற எக்ஸ் பதிவர், “ரஜினிக்கு வரிசலுகை அளித்த வருமானவரித்துறை விஜய்யை மட்டும் குறி வைப்பது ஏன்- தயாநிதி மாறன்” எனக் குறிப்பிட்டு வீடியோவை பரப்பி வருகின்றனர்” எனக் குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

Archive 

இதே கருத்துடன் வெளியான பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் இணைப்புகளையும் காணலாம்.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத்தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என தெரியவந்தது.

வைரல் வீடியோ நியூஸ் 18 தமிழ்நாடு பெயரில் வெளியான நிலையில், அதுகுறித்த தேடலில் ஈடுபட்டோம். வைரலாகும் அதே வீடியோவை 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ஆம் தேதி நியூஸ் 18 தமிழ்நாடு, ‘ரஜினிக்கு வரிச்சலுகை அளித்த வருமான வரித்துறை விஜயை மட்டும் குறி வைப்பது ஏன் என்று தி.மு.க எம்.பி தயாநிதிமாறன் மக்களவையில் கேள்வி எழுப்பியுள்ளார்’ என்ற குறிப்போடு யூட்யூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளதை கண்டறிந்தோம்.

Full View


இதேபோல பிபிசி தமிழ், டைம்ஸ் நவ் ஆகிய யூட்யூப் பக்கங்களிலும் விஜய்க்கு ஆதரவாக தயாநிதி மாறன் பேசும் வீடியோக்கள் அப்போதே பகிரப்பட்டுள்ளன.

Full View

வீடியோவில் தயாநிதி மாறன், “வருமான வரித்துறை பாரபட்சமாக நடந்துகொள்கிறது. நடிகர் ரஜினிகாந்திற்கு ஒரு கோடி ரூபாய் வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்த நடிகர் விஜய்யை அங்கிருந்து காரில் அழைத்து வந்து சோதனை நடத்தினார்கள். இது எப்படி சரியாக இருக்கும்?” என்று கேள்வி எழுப்பினார். அந்த சமயத்தில் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியைத் தொடங்கவில்லை. வெறும் நடிகராக மட்டுமே இயங்கி வந்தார்.



 


Full View

சமீபத்தில் விஜய் குறித்து தயாநிதி மாறன் ஏதேனும் பேசியுள்ளாரா என்பது குறித்து பார்த்தோம். இந்தியா டுடே பிப்ரவரி 11ஆம் தேதி வெளியிட்ட யூட்யூப் வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், “விஜய் எனக்கு நல்ல நண்பர்தான். ஆனால், இன்று விஜய் பாஜகவின் பி டீமாக செயல்பட்டு வருகிறார். மோடியும் அமித்ஷாவும் விஜய்யை இயக்குவது கவலைக்குரியது.


விஜய்க்கு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். அதற்காகவே விஜய்யை தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர்த்திவிட மாட்டார்கள். ஏனெனில், தமிழ்நாட்டு மக்கள் கல்வியறிவு பெற்றவர்கள். எது போலி, எது உண்மை என்பதை மக்கள் உணர்ந்துள்ளார்கள்” என்று தயாநிதி மாறன் பேசியுள்ளார்.

Full View

இந்த ஆதாரங்கள் மூலம் விஜய்க்கு சமீபத்திய வருமான வரி பிரச்சனை தொடர்பாக தயாநிதி மாறன் ஆதரவாக பேசவில்லை என்பதை உறுதி செய்தோம். 6 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் பேசிய பழைய வீடியோவை தற்போது எடுத்து பரப்பி வருகிறார்கள்.

முடிவு


வருமான வரி விவகாரம் தொடர்பாக விஜய்க்கு ஆதரவாக அண்மையில் மக்களவையில் தயாநிதி மாறன் பேசியதாக பரவும் தகவல் தவறானது. வைரலாகும் வீடியோ 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  அண்மையில் நடந்த நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் விஜய்க்கு ஆதரவாக தயாநிதி மாறன் குரல் கொடுத்தார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News