“அண்ணாவுக்கு பக்கோடா வாங்குவதில் பணம் திருடினேன்” – மு.க. ஸ்டாலின் கூறியதாக பரவும் புரளி!

Update: 2026-02-15 18:27 GMT

Claim: “அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்க கொடுக்கப்பட்ட பணத்தில் கொஞ்சம் திருடி கொள்வேன்” என்ற மு.க. ஸ்டாலின் கூற்று.

Fact: மு.க. ஸ்டாலின் கூறியதாக எந்த நம்பகமான செய்தி, உரை பதிவு, அல்லது அதிகாரப்பூர்வ வெளியீடும் இல்லை.

Factcheck: செய்தித்தாள் போல உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் முற்றிலுமாக திரிக்கப்பட்டப் போலி மேற்கோள் கொண்ட தவறான தகவல்.

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் குறித்து ஒரு செய்தித்தாள் துணுக்கு போல உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வெகுவாக பரவி வருகிறது. அந்தச் செய்தியில், “அண்ணாதுரைக்கு பக்கோடா வாங்க தன்னிடம் கொடுக்கப்பட்ட பணத்தில் கொஞ்சம் திருடி கொள்வேன்” என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்தாக தகவல் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியினை சமூக ஊடகத்தில் ஒன்றான முகநூல் பயனாளர் ஒருவர், “அப்போவே முத்திப்போன பழக்கம் இப்போ சொல்லவா வேனும் எத்தனை கோடி திருட்டோ.....” என்ற தனது கருத்துடன் இந்த புகைப்படத்தினை பதிவிட்டிருந்தார்.

அதன் விவரத்தினை இந்த இணைப்பில் காணலாம் : https://www.facebook.com/photo.php?fbid=26103386552664021&set=pb.100002580979598.-2207520000&type=3




 அதேபோல் X தளப் பயனாளர் ஒருவர், தன்னுடைய பக்கத்தில், “கருணாநிதியின் மகன்தான் என்பதை நிரூபித்த தருணம்..!” என்ற வாசகத்துடன் அதே புகைப்படத்தை வெளியிட்டிருந்தார்.

அப்பதிவின் விவரத்தினை இந்த இணைப்பில் காணலாம். https://x.com/directorganesan/status/2018139321870778755


 இவ்வாறு பல்வேறு சமூக ஊடகங்களில் வைரலாக பரவும் பதிவு உண்மையாக தமிழக முதல்வர் பேசியதா என்பதை தெலுங்குபோஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு ஆய்வுக்கு உட்படுத்தியது.

உண்மைச் சரிப்பார்ப்பு :  சமூக ஊடகங்களில் வைரலாகும் செய்தித்தாள் போல உருவாக்கப்பட்ட இந்த புகைப்படம் முற்றிலுமாக திரிக்கப்பட்டப் போலி மேற்கோள் கொண்ட தவறான தகவல் ஆகும்.

முதலில், சமூக ஊடகங்களில் பரவும் இந்தக்கூற்று உண்மையில் அவர் கூறியதா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் அதிகாரப்பூர்வ ஆதாரங்கள் ஏதேனும் இருக்கின்றதா என்று தேடப்பட்டன. தொடர்ந்து முதன்மையான தமிழ் தினசரி செய்தித்தாள்கள், தேசிய ஊடகங்கள், செய்தி காப்பகங்கள், சட்டமன்ற உரை பதிவுகள், நேர்காணல் வீடியோக்கள் இந்த தகவல் இடம்பெற்றுள்ளதா என்பதனை ஆராய்ந்தோம். இதில் எதிலும் இந்த மேற்கோள் இடம்பெற்றதாக எந்த பதிவும் கிடைக்கவில்லை. ஒரு அரசியல் தலைவர் இப்படிப்பட்ட கருத்தை வெளியிட்டிருந்தால் அது பல ஊடகங்களில் வெளியாகியிருக்கும். ஆனால் அதற்கான எந்த நம்பகமான சான்றும் கிடைக்கவில்லை.

மாறாக வெறும் சமூக ஊடக பதிவுகள் மட்டும் தான் கூகுள் முக்கிய வார்த்தைகள் தேடலில் கிடைத்தன. அதற்கான தரவுப்படத்தினை கீழே காணலாம்.


அதன் பின்னதாக, அந்த செய்தித்தாள் புகைப்படத்தின் வடிவமைப்பினை தெலுங்குபோஸ்ட் குழு ஆய்வு செய்தது. ஒரு தினசரி செய்தித்தாள் செய்திகளில் அப்பத்திரிகையின் பெயர், செய்தி வெளியிட்ட தேதி, பதிப்பு, ஆசிரியர் பெயர், பக்கம் எண் போன்ற விவரங்கள் தெளிவாக குறிப்பிடப்பட்டு இருக்கும். ஆனால் வைரலாகும் இந்த படத்தில் மேல் கூறிய எந்த தகவலும் இடம்பெறவில்லை. அது ஒரு அச்சு ஊடக செய்தி போல தோற்றமளித்தாலும், அதில் எந்த பத்திரிகையின் பெயரும் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. தேதி, பதிப்பு, ஆசிரியர் பெயர், பக்கம் எண் போன்ற அடிப்படை விவரங்களும் அந்தப் பதிவில் காணப்படவில்லை.

மேலும் தலைப்பு எழுத்துரு, quote box வடிவம், உட்பொருள் எழுத்து (font) அமைப்பு ஆகியவை அனைத்தும் தனித்தனியாக டிஜிட்டல் முறையில் சேர்க்கப்பட்டதாக தெரிகிறது. இது செய்தி அல்ல, இரண்டு அல்லது புகைப்படங்களை ஒன்று சேர்த்து தயாரிக்கப்பட்ட மீம் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

இந்த மேற்கோள் உண்மையில் மு.க. ஸ்டாலின் உரையில் இருந்ததா என்பதை உறுதிப்படுத்த, முக்கிய தமிழ் மற்றும் ஆங்கில செய்தி காப்பகங்கள், அரசியல் உரை பதிவுகள், நேர்காணல்கள், சட்டமன்ற உரைகள் ஆகியவையிலும் ஆராய்ந்து பார்த்தோம். இதில் எங்கும் இப்படிப்பட்ட கருத்து இடம்பெற்றதாக எந்த ஆதாரமும் இணைய தளத்தில் கிடைக்கவில்லை. பொதுவாக ஒரு அரசியல் தலைவரோ அல்லது முக்கிய பொறுப்பில் வகிப்பவர்கள் இத்தகைய கருத்தை வெளியிட்டால் அது பல்வேறு ஊடகங்களில் வெளியாகும். அப்படியான செய்தி மூலத்தினை தேடிப் பார்த்தோம். ஆனால் இந்த மேற்கோள் எந்த நம்பகமான செய்தி ஊடகங்களிலும் வெளியாகவில்லை என்பது கவனிக்க வேண்டும்.

திராவிட முன்னேற்ற கழகத்தின் மூத்த தலைவரான சி.என். அண்ணாதுரை அவர்கள் குறித்து மு.க. ஸ்டாலின் பல நிகழ்வுகளில் தனது சிறுவயது நினைவுகளை அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ஆனால் அந்த உரைகளில் எந்த பகுதியிலும் “பணம் திருடினேன்” போன்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அவர்களின் உண்மையான அனுபவங்களை மாற்றி, அரசியல் விமர்சன நோக்கில் உருவாக்கப்பட்ட மீம் மேற்கோள் சமூக ஊடகங்களில் பரவுகிறது என்பதனை ஆய்வு முடிவுகள் உறுதி செய்கின்றன.

மேலும், இந்த படம் முதலில் சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் மீம் கணக்குகள் மூலம் மட்டுமே பரவியுள்ளது. இது தவறான தகவல்கள் பரவும் வழக்கமான வழியாகும். ஒரு உண்மையாக நடைபெற்ற செய்தி என்றால் அது முதலில் ஊடகங்களில் வெளிவந்து பின்னரே சமூக ஊடகங்களில் பெரும்பாலும் பகிரப்படும்; இங்கு அதற்கு மாறாக சமூக ஊடகப் பக்கங்களில் மட்டுமே இச்செய்தியின் புகைப்படம் காணப்படுகிறது.

எனவே இது டிஜிட்டலாக திரிக்கப்பட்டு , மாற்றியமைக்கப்பட்ட மீம்ஸ் வகையைச் சார்ந்த ஒரு போலிச் செய்தி ஆகும்.

முடிவு : தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இத்தகவல்களைப் பேசியதாக எந்த நம்பகமான ஆதாரமும் கிடைக்கவில்லை. சமூக ஊடகங்களில் பரவும் புகைப்படம் உண்மையான செய்தி அல்ல; அது டிஜிட்டல் முறையில் உருவாக்கப்பட்ட தவறான தகவல் என்பதே உண்மை.

சமூக ஊடகங்களில் பகிரப்படும் செய்திகளை நம்புவதற்கு முன் அதன் தகவல் மூலத்தை சரிபார்ப்பது மிகவும் அவசியம் என்பதனை தெலுங்கு போஸ்ட் உண்மைச் சரிப்பார்ப்பு குழு பார்வையாளர்களுக்கு வலியுறுத்துகிறது.

Tags:    

Similar News