அரசியலில் இருந்து விலகுவதாக அண்ணாமலை அறிவித்தாரா? - உண்மை இதுதான்

அரசியலில் இருந்து பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை விலகுவதாக பரவும் தகவல் பொய்யானது

Update: 2026-02-06 14:38 GMT

கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்த அண்ணாமலை, பதவியை ராஜினாமா செய்துவிட்டு அரசியலுக்குள் நுழைந்தார். பாஜகவில் சேர்ந்த ஒரு வருடத்திற்குள் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார் அண்ணாமலை. அவரின் பேச்சுக்கள், அறிக்கைகள் ஆளும் திமுகவை நோக்கி கடுமையான விமர்சனங்களை முன்வைத்தன. மாநிலத் தலைவராக இருந்தபோது அண்ணாமலைக்கு பாஜக இளைஞர்கள் மத்தியில் ஆதரவு பெருகியது.

அதே சமயம் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அதிமுக இணைந்த நிலையில், அண்ணாமலை மாநிலத் தலைவர் பதவியில் இருந்து விலக்கப்பட்டார். புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் செயல்பட்டு வருகிறார். இந்த சூழலில் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் சட்டமன்றத் தொகுதிகளுக்கு தேர்தல் பொறுப்பாளர்களாக மூத்த தலைவர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

பரவும் தகவல்


பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. குறிப்பாக திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் செங்கல்லை பிரிப்பேன் என்று சொன்ன அண்ணாமலை, அரசியலை விட்டே போய்விட்டார் என்ற ரீதியில் கருத்துகள் பகிரப்படுகின்றன.

@AravindRajaOff என்ற எக்ஸ் பதிவர், “அறிவாலயத்தின் செங்கலை பிரிப்பேன் சொன்னவர் அரசியலில் இருந்தே விலகினார்” என்று பதிவிட்டுள்ளார்.

Archive 

இதே ரீதியில் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு இருந்தன.


உண்மை சரிபார்ப்பு

வைரல் கூற்றின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.

முதலில் அண்ணாமலை சமீபத்தில் அப்படியே ஏதேனும் கருத்துக்கள் தெரிவித்துள்ளாரா என்று தேடினோம். பிப்ரவரி 3ஆம் தேதி அண்ணாமலை அளித்த பேட்டியை புதிய தலைமுறை ஊடகம் வெளியிட்டிருந்தது. அதில், “எனது தந்தைக்கு உடல்நிலை சரியில்லாமல் டயலிஸிஸ் செய்து வருகிறார். அவரை கவனித்துக்கொள்ள வேண்டியது எனது முதல் கடமை என்பதால் கோவையிலேயே தங்கியுள்ளேன். என்னால் அதிகம் வெளியூர் பயணிக்க முடியாது என்பதால் தேர்தல் பொறுப்புகளில் இருந்து விலக்கக் கோரி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் கோரிக்கை வைத்துள்ளேன்.


கட்சித் தலைமை அதனை ஏற்று வேறு வேறு பொறுப்பாளர்களை நியமனம் செய்யும். அதே சமயம் அடுத்து வரும் பரப்புரை உள்ளிட்ட தேர்தல் பணிகளில் என்னை ஈடுபடுத்திக்கொள்வேன் என்று கூறியுள்ளேன். மேலும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து காலமும் நேரமும் பதில் சொல்லும்” என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Full View

மேலும் பாலிமர், தினத்தந்தி, விகடன் ஆகிய ஊடகங்களும் அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து விலகல் என்றே செய்தி வெளியிட்டுள்ளது.



அண்ணாமலை தேர்தல் பொறுப்பு விலகல் தொடர்பாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனும் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் பேட்டியளித்த நயினார் நாகேந்திரன், “ஊடகங்களில் பொய்யான தகவல்களை ஏன் சொல்கிறார்கள் என தெரியவில்லை.




 


அண்ணாமலை தனது தந்தைக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவரை கவனித்துக்கொண்டு இருப்பதாக அவரே பேட்டி கொடுத்துள்ளார். ஆனால், ஊடகங்கள் அதனை தவிர்த்துவிட்டு அண்ணாமலை அதிருப்தி, விலகல் என்றெல்லாம் பேசுகிறார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Full View

இந்த ஆதாரங்கள் வாயிலாக அண்ணாமலை தேர்தல் பொறுப்பில் இருந்து மட்டுமே விலகியுள்ளார் என்பது தெளிவாக தெரியவருகிறது.

முடிவு

பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அரசியலில் இருந்து விலகுவதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது. உண்மையில் சட்டமன்றத் தேர்தல் பொறுப்பாளர் பதவியில் இருந்து விலகுவதாகவே அண்ணாமலை பேட்டி அளித்துள்ளது ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  அரசியலில் இருந்து அண்ணாமலை விலகுவதாக பரவும் தகவல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News