ஆசிரியைக்கு மாணவிகள் காலில் மசாஜ் செய்யும் வீடியோ தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதா?

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியைக்கு மாணவிகள் காலில் மசாஜ் செய்து விடுவதாக தவறான தகவலுடன் வீடியோ பரவுகிறது

Update: 2026-01-04 03:20 GMT

தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகள் 37,000 மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் 8 ஆயிரம் வரை செயல்பட்டு வருகின்றன. அரசு, உதவிபெறும் பள்ளிகளில் சுமார் 30 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். குறிப்பாக கிராமங்கள் தோறும் பள்ளிகளே இல்லை என்ற நிலை உள்ளது. தமிழ்நாட்டில் மற்ற துறைகளை விட பள்ளிக் கல்வித் துறைக்கே அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு காலை உணவுத் திட்டம், மதிய உணவுத் திட்டம், இலவச நோட்டு புத்தகங்கள், இடஒதுக்கீட்டில் முன்னுரிமை, தமிழ் புதல்வன் திட்டம் என ஏராளமான திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அதே சமயம் தமிழ்நாடு பள்ளி கல்வித் துறை, ஆசிரியர்கள் செயல்பாடுகள் தொடர்பாக போலித் தகவல்களும் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

பரவும் தகவல்

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் மாணவிகள் ஆசிரியைக்கு கை, கால் பிடித்து மசாஜ் செய்வது போல ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் உலா வருகிறது. வீடியோவில் ஆசிரியை நாற்காலியில் அமர்ந்துகொண்டு செல்போன் பேசிக்கொண்டு இருக்க மாணவிகள் இருவர் அவருக்கு கால்களை பிடித்து விடுகிறார்கள்.

YATNAL HINDU SENE என்ற எக்ஸ் பக்கத்தில் வீடியோவைப் பகிர்ந்து, “ தமிழ்நாட்டில் ஒரு அரசுப் பள்ளி ஆசிரியை, தொடக்கப் பள்ளி மாணவிகளை தனது கால்களை மசாஜ் செய்யச் சொல்லும் சம்பவம் மிகவும் கவலையளிக்கும் வகையில் உள்ளது. தமிழ்நாடு அரசு பதவி உயர்வு மூலம் ரவுடித்தனத்தை பரப்புவதில் மும்முரமாக உள்ளது ” என்றெல்லாம் தமிழக அரசை விமர்சனம் செய்திருந்தது. இந்த வீடியோ சுமார் 5.62 லட்சம் பார்வைகளையும் பெற்றிருந்தது.

Archive

இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வீடியோ பகிரப்பட்டிருந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் அல்ல, ஆந்திர பிரதேசத்தில் நடந்தது என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

முதலில் தமிழ்நாட்டில் சமீபத்தில் ஆசிரியை கால்களை பிடித்து மசாஜ் செய்த மாணவிகள் என ஏதேனும் செய்திகள் வந்துள்ளதா என்பது குறித்து சரிபார்த்தபோது அப்படி எந்த செய்திகளும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து, வைரல் வீடியோவின் முக்கிய பகுதிகளை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். அதில், வைரல் வீடியோ நவம்பர் 2025 சமயத்தில் வெளியாகி உள்ளதை உறுதிப்படுத்தினோம்.



நவம்பர் 4, 2025 அன்று என்டிடிவி இணையதளம் வெளியிட்ட செய்தியில், “ஆந்திரப் பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் பள்ளி நேரத்தில் மாணவர்கள் ஆசிரியை ஒருவருக்கு கால் மசாஜ் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் பந்தப்பள்ளி பழங்குடி பெண்கள் ஆசிரமப் பள்ளியில் இருந்து பதிவாகியுள்ளது. இந்த வீடியோ அதிகாரிகளின் கவனத்தை ஈர்த்ததை அடுத்து, அந்த ஆசிரியை இடைநீக்கம் செய்யப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.

நியூஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இணையதளம் நவ.5, 2025 அன்று வெளியிட்ட செய்தியில், “மாணவர்களை கால் மசாஜ் செய்யச் சொன்ன ஆந்திரா ஸ்ரீகாகுளம் பந்தப்பள்ளி அரசு பழங்குடியினர் நல ஆசிரமப் பள்ளியின் ஆசிரியை ஒய்.சுஜாதா சஸ்பெண்ட் செய்யப்பட்டார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



மேலும் இந்த சம்பவம் ஆந்திராவில் நடந்ததுதான் என்பதை டைம்ஸ் ஆப் இந்தியா, ஏபிபி நாடு தமிழ், இந்தியா டுடே செய்திகளும் உறுதிப்படுத்தின.



மேலும் நமது தேடலில் தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம், “இது தமிழ்நாட்டில் நடக்கவில்லை. இந்த காணொளி ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் எடுக்கப்பட்டது. வதந்திகளைப் பரப்பாதீர்கள்” என்று விளக்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.


இந்த ஆதாரங்கள் வாயிலாக ஆசிரியர்களுக்கு மாணவிகள் கால் மசாஜ் செய்யும் வீடியோ தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

முடிவு

தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியைக்கு மாணவிகள் கால் மசாஜ் செய்ததாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் அது ஆந்திர பிரதேச மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள பள்ளியில் நடந்த சம்பவம் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளியில் ஆசிரியைக்கு காலில் மசாஜ் செய்த மாணவிகள்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News