குருமூர்த்தியுடன் மாணிக்கம் தாகூர் இருக்கும் புகைப்படம் வைரல் - உண்மை என்ன?

குருமூர்த்தியுடன் மாணிக்கம் தாகூர் இருப்பதாக புகைப்படம் தவறான தகவலுடன் வைரலாகி வருகிறது.

Update: 2026-02-24 14:40 GMT


 

திமுகவும் காங்கிரஸும் கடந்த பல வருடங்களாகவே கூட்டணியில் இருந்து வருகின்றன. வரும் சட்டமன்றத் தேர்தல் கூட்டணி தொடர்பாக இரு கட்சிகளுக்கும் இடையே சலசலப்பு ஏற்பட்டது. குறிப்பாக விருதுநகர் தொகுதி காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், திமுகவை சீண்டும் விதமாக கருத்துக்களைத் தெரிவித்தார்.

காங்கிரஸுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்க வேண்டும், ஆட்சியில் பங்கு வேண்டும் என மாணிக்கம் தாகூர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். திமுக குறித்து நேரடியாகவே விமர்சனத்தை முன்வைத்த மாணிக்கம் தாகூருக்கு, திமுகவினர் கடுமையான பதிலடி தந்தனர். இதனால் மாணிக்கம் தாகூர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸிடம் திமுகவினர் வலியுறுத்தத் தொடங்கினர். எனினும், மாணிக்கம் தாக்கூர் பேசுவது அவரது சொந்தக் கருத்து என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை விளக்கம் அளித்தார். தற்போது வரை மாணிக்கம் தாகூர், திமுக மோதல் நீடித்து வருகிறது.

பரவும் தகவல்

திமுகவை விமர்சனம் செய்து வரும் மாணிக்கம் தாகூர், பாஜகவுக்கு ஆதரவான துக்ளக் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தியுடன் இருப்பதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது மாணிக்கம் தாகூர், கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் குருமூர்த்தி இருப்பதாக புகைப்படம் பரவுகிறது.

AravindRajaOff என்ற எக்ஸ் பயனர், "எழுத்து இயக்கம் குருமூர்த்தி" என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார். இந்த பதிவு சுமார் 2 லட்சம் பார்வைகளைப் பெற்றிருந்தது.

மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வைரல் புகைப்படம் பகிர்ந்து மாணிக்கம் தாகூரை குருமூர்த்தி இயக்குவதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

முதலில் வைரல் புகைப்படத்தை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். அதில் வைரல் புகைப்படம் தவறான தகவலுடன் பகிரப்படுவதாக காங்கிரஸ் சமூக ஊடகப் பொறுப்பாளர் லட்சுமி காந்தன் விளக்கம் அளித்துள்ளார். அவர் தனது எக்ஸ் பக்கத்தில், "இது மலிவான மூன்றாம் தர அரசியல். அது கேரள எம்.பி. ராஜ்மோகன் உன்னிதன். அது குருமூர்த்தியா? கண்ணாடியில் உங்கள் முகத்தை நீங்களே பார்த்துக்கொள்ளுங்கள்" என்று குறிப்பிட்டுள்ளார்.



 


இதுதொடர்பாக நாம் மாணிக்கம் தாகூர் சமூக வலைதளப் பக்கங்களில் தேடியபோது பிப்.12ஆம் தேதி வைரல் புகைப்படத்தை பதிவிட்டிருப்பதை கண்டறிந்தோம். அதில், "இந்தியாவின் விவசாயிகளின் நலன்களை அமெரிக்காவிற்கு விற்ற வர்த்தக ஒப்பந்தத்திற்கு எதிராக இன்று மக்கர் தாவரில் நடைபெற்ற போராட்டத்திற்கு நமது அகில இந்திய காங்கிரஸ் காங்கிரஸ் பொதுச் செயலாளர் திருமதி பிரியங்கா காந்தி வத்ரா தலைமை தாங்கினார்" என்று குறிப்பிட்டுள்ளார்.




Full View

மேலும் நமது தேடலில் புகைப்படம் தொடர்பாக ஆடிட்டர் குருமூர்த்தியே விளக்கம் அளித்துள்ளார். அதில், வைரலாகும் புகைப்படத்தில் இருப்பது நான் அல்ல, அது கேரள எம்.பி ராஜ்மோகன் உன்னிதன் என்று விளக்கம் அளித்துள்ளார்.

முடிவு

ஆடிட்டர் குருமூர்த்தியுடன் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் இருப்பதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகிறது. உண்மையில் புகைப்படத்தில் இருப்பது கேரள காங்கிரஸ் எம்.பி ராஜ்மோகன் உன்னிதன். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத்தன்மையை சரிபார்த்து வெளியிட TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Tags:    

Similar News