நடிகை திரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் கோயிலுக்குச் சென்றாரா?

நடிகை திரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் கோயிலுக்குச் சென்றதாக பரவும் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது

Update: 2026-02-22 13:09 GMT

தமிழ்நாட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் விஜய் 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகம் என்னும் கட்சியைத் தொடங்கினார். தனது கொள்கை எதிரி என பாஜகவையும், அரசியல் எதிரி என திமுகவையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டார். அதே சமயம் பாஜகவை விட தமிழகத்தை ஆளும் திமுகவை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டி என விஜய் அறிவித்துவிட்டார்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கரூரில் விஜய் பரப்புரைக் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தது தமிழகத்தையே உலுக்கியது. எனினும், சில மாதங்கள் கழித்து தற்போது ஒவ்வொரு ஊரிலும் பரப்புரை பயணங்களை மேற்கொண்டு வருகிறார். அதே சமயம் நடிகை திரிஷாவுடன் இணைத்து விஜய்யை நயினார் நாகேந்திரன் விமர்சனம் செய்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. திரிஷா இதற்கு கண்டனம் தெரிவிக்க, நயினார் வருத்தம் தெரிவித்தார்.

பரவும் தகவல்

இந்த நிலையில் திரிஷாவுடன் விஜய் கோயிலுக்குச் சென்றது போல ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதில் கோயில் முன்பு திரிஷா, விஜய்யுடன் சமந்தா மற்றும் அவரது கணவரும் இருப்பதை காண முடிந்தது.

DrSuriya_ என்ற எக்ஸ் பதிவர், “குடும்பத்தோட கோவிலுக்கு போவாங்க கேள்விப்பட்டு இருக்கேன்...தலைவன் திரிஷா கூட கோவிலுக்கு போயிருக்கான் நீ பக்கா மாஸ் தலைவரே” என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த பதிவு சுமார் 60 ஆயிரம் பார்வைகளைப் பெற்றிருந்தது.

Archive

மேலும் வைரல் புகைப்படத்தை பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் பார்க்க முடிந்தது. மேலும் பல்வேறு சமூக வலைதளப் பக்கங்களிலும் இப்புகைப்படம் பகிரப்பட்டு விஜய் மீது விமரசனம் முன்வைக்கப்பட்டு இருந்தது.


உண்மை சரிபார்ப்பு


வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது போலியான மற்றும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படத்தை உண்ணிப்பாக கவனித்ததில் சில வேறுபாடுகள் இருப்பதை காண முடிந்தது. குறிப்பாக புகைப்படத்தில் திரிஷாவின் முகத்தில் வித்தியாசங்கள் இருப்பதைக் கண்டறிந்தோம். அத்துடன் புகைப்படத்தின் பின்புறம் இருந்த கோயில் போன்ற அமைப்பு செயற்கையாக உருவாக்கப்பட்டது போன்று இருந்தது. இதனால் வைரல் புகைப்படம் போலியாக இருக்கலாம் என்று கணித்தோம்.


வைரல் புகைப்படம் எங்கிருந்து பரவியது என்பதை அறிய அதனை கூகுள் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். Nagachaitanya Fc என்ற முகநூல் பக்கத்தில் பிப்ரவரி 17ஆம் தேதி வைரல் புகைப்படம் பதிவேற்றப்பட்டு உள்ளதை கண்டோம்.

Full View

அதேபோல மற்ற தெலுங்கு, தமிழ், கன்னட பிரபலங்கள் கோயில்களுக்கு செல்வது போன்ற புகைப்படங்களும் அதில் இருப்பதை கண்டறிந்தோம்.

இதனைத் தொடர்ந்து திரிஷா, விஜய் ஆகியோர் கோயிலுக்குச் சென்றதாக செய்திகள் ஏதாவது வெளியாகி உள்ளதா என்று பார்த்தோம். விஜய் கோயிலுக்குச் சென்றதாக எந்த தகவலும் நமக்கு கிடைக்கவில்லை.


அதே சமயம் திரிஷா திருப்பதி கோயிலுக்குச் சென்றது தொடர்பான புகைப்படம் நமக்கு கிடைத்தது. திரிஷாவே தனது இன்ஸ்டாகிராம் திருப்பதி சென்ற புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார். ஆனால், புகைப்படத்தில் வேறு உடை அணிந்திருந்ததோடு, தனியாகவே இருக்கிறார்.

வைரல் புகைப்படம் போலியானது என சந்தேகம் எழுந்த நிலையில், அதனை hive moderation ஏஐ சரிபார்ப்பு தளத்தில் உள்ளிட்டோம். அதில் வைரல் புகைப்படம் 99 சதவீதம் போலியானதாக இருக்க வாய்ப்புள்ளது என முடிவைத் தந்தது. இதன்மூலம் வைரல் புகைப்படம் போலியானது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது என்பது தெளிவானது.



முடிவு

திரிஷாவுடன் தவெக தலைவர் விஜய் கோயிலுக்குச் சென்றதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது. உண்மையில் புகைப்படம் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான புகைப்படமாகும். ஆனால், தற்போதைய அரசியல் சூழலுடன் ஒப்பிட்டு தவறாக பரப்பப்பட்டு வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  திரிஷாவுடன் கோயிலுக்குச் சென்ற தவெக தலைவர் விஜய்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News