அமித்ஷா காலணியை பெண் துடைத்ததாக பரவும் வீடியோ - உண்மை என்ன தெரியுமா?

அமித்ஷாவின் காலணியை பெண் ஒருவர் துடைப்பதாக பரவும் வீடியோ போலியானது, ஏஐ மூலம் உருவாக்கப்பட்டது.

Update: 2025-11-13 16:50 GMT

அண்மையில் பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. பாஜகவும் ஐக்கிய ஜனதா தளமும் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. பிரதமர் மோடியும் அமித்ஷாவும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பரப்புரை மேற்கொண்டனர். அமித்ஷா பல தொகுதிகளுக்குச் சென்று வேட்பாளர்களுக்கு ஆதரவாக பொதுக் கூட்டங்களில் கலந்துகொண்டு பேசினார். பீகார் தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு நேர்காணல்களும் அளித்தார். அதே சமயம் அமித்ஷாவை மையப்படுத்தி சில போலித் தகவல்களும் சமூக வலைதளங்களில் வைரலாகின.

பரவும் தகவல்

இந்த நிலையில் அமித்ஷாவின் காலணியை துடைத்து விட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அமித்ஷா தனது காலை நீட்ட பெண் ஒருவர் கைக்குட்டையால் அவரது காலணியை துடைத்து விடுவது போல அந்த காட்சிகள் இருந்தன.

@jothi623667 என்ற எக்ஸ் பயனர், “தேர்தல். பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்ட உள்துறை அமைச்சர் அமித்ஷா பிரசாரத்திற்காண.! வாகன பயணத்தின்போது ஒரு பெண்ணிடம் தனது காலணிகளை காட்டி துடைக்க செல்கிறார்” என்று குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்திருந்தார்.

Full View

பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் அமித்ஷா காலணியை துடைக்கச் சொன்னதாகவே வீடியோ பகிரப்பட்டு இருந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது போலியானது என்பதும், ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு பரப்பபட்டுள்ளது என்பதும் தெரியவந்தது.

முதலில் வைரலாகும் அமித்ஷாவின் வீடியோவை மிகவும் கூர்ந்து கவனித்தோம். அதில் அமித்ஷா கண்ணில் அணிந்துள்ள கண்ணாடி முதலில் மறைவதும் பின்னர் தோன்றுவதுமாக உள்ளது. அமித்ஷா காலில் போட்டுள்ள காலணியின் நிறமும் அடுத்தடுத்து மாறுகிறது. மேலும் காலை துடைத்துவிடும் பெண்ணின் கையில் இருக்கும் வளையல் திடீரென கடிகாரமாக மாறுவதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது. குறிப்பாக வீடியோ முழுவதும் இருவரின் முகங்களும் அலையடிப்பது போல தெளிவற்றதாகவே இருந்தது.



இதனையடுத்து வைரல் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் டைம்ஸ் நவ் குழுமங்களின் ஆசிரியர் நவிகா குமார் நவம்பர் 3ஆம் தேதி வெளியிட்ட புகைப்படம் நமக்கு கிடைத்தது. அமித்ஷாவுடன் வாகனத்தில் இருந்தபடி நவிகா குமார் செல்ஃபி எடுத்து தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். மற்றபடி வீடியோவில் ஏஎன்ஐ லோகோ இடம்பெற்றிருந்தாலும் வேறு எங்கும் வைரல் வீடியோ கிடைக்கவில்லை. இதனால் நவிகா குமார் பதிவிட்ட புகைப்படத்தை ஏஐ மூலம் வீடியோவாக மாற்றி பரவ விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.

இதனையடுத்து வைரல் வீடியோவை புகைப்படங்களாக பிரித்தெடுத்து ஏஐ சரிபார்ப்பு கருவியான decopy ai இணையதளத்தில் உள்ளிட்டோம். அதன் முடிவுகள் 89 சதவிகிதம் அது செயற்கை நுண்ணறிவின் மூலம் உருவாக்கப்பட்டதாக இருக்கலாம் என்று வந்தது.



வைரல் வீடியோ குறித்த நமது மேலதிக தேடலில் தி குயிண்ட் ஊடகம் வைரல் வீடியோவை உண்மை சரிபார்ப்பு செய்து அது ஏஐ வீடியோதான் என்பதை உறுதிப்படுத்தி கட்டுரை வெளியிட்டு உள்ளதை கண்டுபிடித்தோம். இதேபோல யூடர்ன் ஆங்கில இணையதளமும் அது ஏஐ வீடியோ என்பதை உறுதிப்படுத்தி இருந்தது.




இந்த ஆதாரங்கள் வாயிலாக அமித்ஷா ஒரு பெண்ணை காலணியை துடைக்கச் சொன்னதாகவும், அந்த பெண் துடைத்துவிட்டதாகவும் பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட போலியான வீடியோ என்பது தெரியவந்தது. உண்மையில் அந்த பெண் டைம்ஸ் நவ் இதழின் ஆசிரியர் நவிகா குமார். அது அமித்ஷாவை நேர்காணல் எடுக்கும்போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

முடிவு


பெண் ஒருவரை அமித்ஷா காலணியை துடைக்கச் சொன்னதாகவும், அப்பெண் துடைத்ததாகவும் பரவும் வீடியோ ஏஐ மூலம் உருவாக்கப்பட்டு பரப்பப்படுகிறது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டு உள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  அமித்ஷாவின் காலணியை பெண் ஒருவர் சுத்தம் செய்வதாக பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News