சென்னை பள்ளியில் கழிவறையில் தற்போதைய நிலை என பரவும் புகைப்படம் - உண்மை என்ன?
சென்னை பள்ளியில் கழிவறையில் தற்போதைய நிலை என 10 ஆண்டுகள் பழைய புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் திமுக ஆட்சியில் நிர்வாகம் சீர்கேடாக உள்ளதாக அதிமுக, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றன. குறிப்பாக அரசின் கட்டடங்கள் மோசமாக உள்ளதாக தொடர்ந்து விமர்சனம் செய்கின்றன. பள்ளிகளில் கழிவறை வசதிகள் பெயருக்குதான் உள்ளது என்றும், மற்றபடி மோசமாக சூழல்தான் பள்ளிகளில் நிலவுவதாகவும் கூறுகின்றன.
அதே சமயம் தமிழகத்தில் பள்ளி கல்வித்துறைக்கு திமுக ஆட்சியில்தான் அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடப்பதாக அரசு கூறுகிறது. தமிழ் புதல்வன் திட்டம், புதுமைப் பெண், காலை உணவுத் திட்டம் என மாணவர்களின் நலன் கருதி பல்வேறு திட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன என்று பட்டியலிட்டுள்ளது. ஆனாலும், தமிழக அரசு மீது எதிர்க்கட்சிகள் விமர்சனங்கள் முன்வைக்கின்றன.
பரவும் தகவல்
சென்னையில் உள்ள பழமையான பள்ளியில் கழிவறை மிகவும் மோசமான நிலையில் உள்ளதாகக் குறிப்பிட்டு தமிழக அரசு மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டு உள்ளது. வைரல் புகைப்படத்தில் பள்ளி கழிவறை மிக மோசமான நிலையில் உள்ளதை காண முடிந்தது.
@xsujeev44486 என்ற எக்ஸ் பயனர் வைரல் புகைப்படத்தைப் பகிர்ந்து, “திருவல்லிக்கேணி லேடி வில்லிங்டன் பெண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ்நாட்டின் சென்னையில் அமைந்துள்ளது. இது 108 ஆண்டுகள் பழமையான அரசுப் பள்ளியாகும். 75 ஆண்டுகள் பழமையான கட்சி திமுகவின் சாதனை இதுதான்” என்று விமர்சனம் செய்திருந்தார்.
Lady Willingdon Girl’s Higher Secondary School, Triplicane is located in Chennai, Tamil Nadu. It is a 108-year-old government school.
— S D Raja (@xsujeev44486) February 24, 2026
75 years old Party DMK's achievement 🔥 pic.twitter.com/Xv9WVJH3rF
இதே விமர்சனத்தோடு வெளியான பதிவு 1, பதிவு 2 வைரல் பதிவுகளையும் காணலாம்.
பரவும் தகவல்
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது 2015ஆம் ஆண்டு வெளியான பழைய புகைப்படம் என்பது தெரியவந்தது.
வைரல் புகைப்படம் குறித்த உண்மையை அறிய முதலில் அதனை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் புகைப்படம் 2015ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் தேதி, ‘பள்ளி கழிவறை மூடப்பட்டதால் ஆயிரக்கணக்கான மாணவிகள் அவதி’ என்று தலைப்பிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா கட்டுரையில் இடம்பெற்றிருந்ததை காண முடிந்தது.
அதில், “திருவல்லிக்கேணியில் உள்ள ஒரு அரசுப் பள்ளியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும் ஆசிரியர்களும் வளாகத்தில் உள்ள நான்கு கழிப்பறைகள் மூடப்பட்டிருப்பதால் மிகுந்த அவதியில் உள்ளனர். டாக்டர் பெசன்ட் சாலையில் உள்ள அரசு லேடி வில்லிங்டன் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கான இரண்டு கழிப்பறைகள் 2013 இல் 2.5 லட்சத்தில் கட்டி முடிக்கப்பட்டன. ஆனால், தூய்மைப் பணிகள் மேற்கொள்ளப்படாததாலும், சரியாக பராமரிக்கப்படாததாலும் அவை மூடப்பட்டன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது தமிழ்நாட்டில் அதிமுக ஆட்சி நடைபெற்று வந்தது.
அதன்பிறகு 2017ஆம் ஆண்டு டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட கட்டுரையில், “திருவல்லிக்கேணியில் உள்ள நூற்றாண்டு பழமையான லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தை புதுப்பிக்க பள்ளிக் கல்வி இயக்குநரகம் ரூ.40 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 2021ஆம் ஆண்டுதான் ஆட்சிக்கு வந்தது. பள்ளி அமைந்துள்ள தொகுதியின் சட்டமன்ற உறுப்பினரான துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேரில் சென்று பள்ளியின் கழிவறை உள்ளிட்ட வசதிகள் குறித்து நேரில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த சமயத்தில் இருந்த கழிவறை மேற்கத்திய பாணியில், சுத்தமாக இருப்பதை காண முடிந்தது.
மேலும் lady willingdon school renovation என்ற கீ வேர்டு உதவியுடன் நாம் தேடும்போது Child Help Foundation என்ற பேஸ்புக் பக்கத்தில் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட லேடி வெலிங்டன் பள்ளி புனரமைப்பு தொடர்பான வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், “லேடி வில்லிங்டன் மேல்நிலைப் பள்ளியின் கழிப்பறைகள் மற்றும் வகுப்பறைகளை சைல்ட் ஹெல்ப் பவுண்டேஷன் வெற்றிகரமாக மாற்றியுள்ளது. 16 கழிவறை இருக்கைகளுடன் கழிவுநீர் வெளியே செல்லும் வசதியுடன் உருவாக்கப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் நமது தேடலில் வைரல் புகைப்படம் தொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகமும் விளக்கம் அளித்துள்ளது. அதில், “இது தவறான தகவல். கடந்த 2015ம் ஆண்டு லேடி வெலிங்டன் பள்ளி கழிவறை குறித்த செய்தியில் இப்புகைப்படம் வெளியாகி இருக்கிறது. 'பரப்பப்படும் கழிவறை கட்டிடம் அமைந்திருந்த இடத்தில் 3.5 கோடி செலவில் புதிய கட்டிடம், ஒருங்கிணைந்த ஆய்வுக் கூடம் கட்டப்பட்டுள்ளது. தற்போது இப்பள்ளியில் 33 கழிப்பறைகளும், 18 சிறுநீர் கழிக்கும் இடமும் செயல்பாட்டில் உள்ளது. அவை தினமும் தூய்மை செய்யப்பட்டு வருகிறது' என்று பள்ளியின் தலைமையாசிரியர் விளக்கமளித்து உள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாவது பழைய புகைப்படம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
முடிவு
சென்னை லேடி வெல்லிங்டன் பள்ளி கழிவறை மோசமாக உள்ளதாக பரவும் புகைப்படம் 11 ஆண்டுகள் பழையதாகும். ஆனால், திமுக ஆட்சியில் கழிவறை மோசமாக உள்ளதென தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிட TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.