பஹல்காமில் ‘மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல்’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினாரா?

பஹல்காமில் மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் நடந்ததாக மு.க.ஸ்டாலின் பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது.

Update: 2025-04-27 17:15 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது திடீரென பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். 13 பேர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தத் தீவிரவாத தாக்குதல் சம்பவம் இந்தியாவைத் தாண்டி உலக அளவிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து, பாகிஸ்தான் மக்கள் இந்தியாவில் இருந்து உடனே வெளியேற வேண்டும் உள்பட பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை இந்தியா முன்னெடுத்துள்ளது. ட்ரம்ப் தொடங்கி உலகத் தலைவர்கள் பலரும் தீவிரவாத தாக்குதல் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு தமிழ்நாடு சட்டமன்றத்தில் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

பரவும் தகவல்

பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் குறித்து சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ‘மனிதாபிமான தீவிரவாத தாக்குதல்’ என்று குறிப்பிட்டதாக ஒரு நியூஸ் கார்டு வைரலாகி வருகிறது. இதனை பகிர்ந்து பலரும் ஸ்டாலின் மீது விமர்சனங்களை முன்வைத்தனர். 

நினைவில் காடுள்ள மிருகம் என்ற எக்ஸ் பக்கத்தில், “என்ன இது "மனிதாபிமான தீவிரவாத தாக்குதல்"” என்று குறிப்பிட்டு வைரல் கார்டு பகிரப்பட்டு இருந்தது.

Skm என்ற எக்ஸ் பக்கத்திலும் நியூஸ் கார்டை ஷேர் செய்து, “இவ்வளவு உணர்ச்சி மிகுந்த நிகழ்வில் இப்படி ஒரு வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளதே? திமுகவின் கைப்பாவையாக மாறியதின் விளைவா.. அல்லது நியூஸ் எடிட்டரின் கவனக்குறைவா?” என்று கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது.

அதேபோல ராஜா நாகர் கோயில் பேஸ்புக் பக்கத்திலும் இந்த கார்டு ஷேர் செய்யப்பட்டு இருந்தது.



உண்மை சரிபார்ப்பு

வைரல் நியூஸ் கார்டு தொடர்பாக TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில் அது எடிட் செய்யப்பட்ட கார்டு என்பது தெரியவந்தது.

விகடன் பெயரிட்டு வைரல் கார்டு பரவுவதால் அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஸ்கேன் செய்தோம். அதில் பயங்கரவாத தாக்குதல் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியது தொடர்பான கார்டு விகடன் பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்டு இருப்பதை கண்டறிந்தோம்.

Full View

அதில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனத்தையும், அதில் உயிரிழந்த அனைவரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தத் தாக்குதலுக்கு பயங்கரவாத அமைப்பு ஒன்று பொறுப்பேற்றுள்ளது. தீவிரவாத அமைப்புகளை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டும்” – சட்டப்பேரவையில் மு.க.ஸ்டாலின்” என்றே குறிப்பிடப்பட்டு இருந்தது. இதன்மூலம் விகடன் பெயரில் பரவி வரும் கார்டு எடிட் செய்யப்பட்டது, போலியானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. இதேபோல சன் நியூஸ் வெளியிட்ட கார்டு மூலமாகவும், முதல்வர் ‘மனிதாபிமானமற்ற தாக்குதல்’ என்றே குறிப்பிட்டுள்ளார் என்பதை தெரிந்துகொண்டோம்,



மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையில் கடைசியில் உள்ள ‘மற்ற’ என்ற வார்த்தையை எடுத்துவிட்டால் அதன் அர்த்தம் மாறிவிடுகிறது. அதாவது ‘மனிதாபிமான தாக்குதல்’ என்பது தீவிரவாதிகளுக்கு ஆதரவாக பேசியது போன்ற அர்த்தத்தை கொடுக்கிறது. அதுதான் இங்கும் நிகழ்ந்துள்ளது. முதல்வர் பேசிய மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையை பயன்படுத்தியே விகடன் கார்டு தயாரித்துள்ளது. ஆனால், அதில் உள்ள மற்ற என்ற வார்த்தையை மட்டும் உள்நோக்கத்துடன் நீக்கிவிட்டு மனிதாபிமான தாக்குதல் என முதல்வர் கூறியதாக தவறான தகவலுடன் பகிரப்படுகிறது.

மேலும் உறுதிப்படுத்துதலுக்காக பஹல்காம் தாக்குதல் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் என்ன பேசியுள்ளார் என்பதை தேடினோம். அதில் ஏப்ரல் 23ஆம் தேதி முதல்வர் தனது எக்ஸ் பக்கத்தில், “#PahalgamTerroristAttack-இல் உயிரிழந்த அப்பாவி மக்களுக்குத் தமிழ்நாடு சட்டமன்றத்தில் மௌன அஞ்சலி செலுத்தினோம்” என்று குறிப்பிட்டு வெளியிட்ட வீடியோ கிடைத்தது.

அந்த வீடியோவில், “ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள பஹல்காமில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது நடத்தப்பட்டுள்ள மனிதாபிமானமற்ற பயங்கரவாத தாக்குதலுக்கு கடும் கண்டனம்” என்றே பேசுவதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துகொண்டது.

மேலும் முதல்வர் உரையின் எழுத்தாக்கத்தை CMOTamilnadu என்கிற முதல்வரின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கமும் வெளியிட்டுள்ளது. அதிலும் மனிதாபிமானமற்ற என்ற வார்த்தையையே இருந்தது.



புதிய தலைமுறை, பாலிமர் செய்திகள் டிவி யூட்யூப் பக்கத்திலும் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை மனிதாபிமானமற்ற தாக்குதல் என்றே விமர்சித்துள்ளதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்கிறது. ஆனால், எடிட் செய்யப்பட்ட போலியான வைரல் நியூஸ் கார்டு தவறான கருத்துடன் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகிறது.

முடிவு

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை முதல்வர் மு.க.ஸ்டாலின் மனிதாபிமான தாக்குதல் என்று கூறவில்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வைரலாகும் விகடன் நியூஸ் கார்டு எடிட் செய்யப்பட்டது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  பஹல்காமில் நடைபெற்றது மனிதாபிமான பயங்கரவாத தாக்குதல் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாக பரவும் கார்டு.
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News