வக்ஃபு சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக பேசினாரா எடப்பாடி பழனிசாமி?

வக்ஃபு சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதாக பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு போலியானது.

Update: 2025-04-22 06:45 GMT

வக்ஃபு சட்டத் திருத்த மசோதா கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், அதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் மசோதா நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டு, அது மத்திய அரசுக்கு அறிக்கை அளித்தது. இதனையடுத்து வக்ஃபு மசோதாவை ஏப்ரல் தொடக்கத்தில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜுஜு தாக்கல் செய்தார்.

நீண்ட விவாதத்துக்கு பிறகு மக்களவையில் 288 எம்பிக்கள் ஆதரவாகவும், 232 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். அதேபோல மாநிலங்களவையில் 128 எம்.பி.க்கள் ஆதரவாகவும், 95 எம்.பி.க்கள் எதிராகவும் வாக்களித்தனர். இதனால் நாடாளுமன்ற இரு அவைகளில் மசோதா நிறைவேறியது. குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததைத் தொடர்ந்து சட்டம் அமலானது.

வக்ஃபு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இதனை விசாரித்த நீதிபதிகள், நிலம் கையகப்படுத்துதல் மற்றும் புதிய உறுப்பினர்கள் ஆகியவற்றில் தற்போதைய நிலையே தொடர வேண்டும், வக்ஃபு புதிய சட்டத்தின் படி உறுப்பினர்களை நியமனம் செய்யக்கூடாது என இடைக்காலத் தடை விதித்தனர்.

பரவும் தகவல்

இந்த நிலையில் வக்ஃபு சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசியதாக நியூஸ் கார்டு ஒன்று சமூக வலைதளங்களில் வெளியானது. தினமலர் பெயரிலான அந்த நியூஸ் கார்டில், “நாடாளுமன்றம் இயற்றும் சட்டங்களில் நீதிமன்றத்தின் தலையீடு கூடாது. அப்படி தலையிட்டால் நீதிபரிபாலன சமன்பாடு குலைந்துவிடும் அபாயம் உண்டு - வக்ஃபு சட்டம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு பற்றிய கேள்விக்கு ஈபிஎஸ் பதில்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

நியூஸ் கார்டை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த சண்முகம் சின்னராஜ் (@shanmugamchin10) என்ற எக்ஸ் பதிவர், முஸ்லீம் மக்கள் கொடுத்த ரம்ஜான் கஞ்சி குடித்த ஈரம் காய்வதற்குள், பாஜகவினரைப் போல எடப்பாடி பழனிசாமி பேசுவதாக குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வைரல் கார்டை கிருஷ்ணகுமார் என்ற பேஸ்புக் பயனர் தனது பக்கத்தில் பதிவிட்டு விமர்சனம் முன்வைத்து இருந்தார்.

Full View

இதேபோல வைரல் நியூஸ் கார்டின் இணைப்பு 1, இணைப்பு 2 ஐக் இங்கே காணலாம். மேலும் வைரல் பதிவின் ஸ்க்ரீன் ஷார்ட் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.



உண்மை சரிபார்ப்பு

எடப்பாடி பழனிசாமி பேசியதாக வைரலாகும் நியூஸ் கார்டு குறித்து, TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில் அது போலியானது என்பது தெரியவந்தது.

தினமலர் ஊடகம் பெயரில் ஏப்ரல் 17ஆம் தேதியிட்டு வைரல் நியூஸ் கார்டு பரவும் நிலையில், அதன் சமூக ஊடக பக்கங்களை ஸ்கேன் செய்தோம். அதில் எடப்பாடி பழனிசாமி அப்படி பேசியதாக எந்த நியூஸ் கார்டும் பதிவிடப்படவில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம். வைரல் நியூஸ் கார்டை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தபோது, அது பலரின் சமூக வலைதளக் கணக்குகளில் பகிரப்பட்டு இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது. அதே சமயம் ஒப்பிட்டளவில் அதுபோன்று உள்ள நியூஸ் கார்டு தினமலர் முகநூல் கணக்கில் ஏப்ரல் 2ஆம் தேதி பதிவு செய்யப்பட்டு இருந்தது. அது கச்சத்தீவு விவகாரத்தில் எடப்பாடி பழனிசாமி தெரிவித்த கருத்து தொடர்புடையது. அதேபோல தினமலர் வெளியிட்ட நியூஸ் கார்டுகளில் உள்ள எழுத்துரு நிறமும், வைரல் கார்டின் நிறமும் வேறு வேறு என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.



இதுதொடரபாக தினமலர் சமூக வலைதள பொறுப்பாளர் அய்யாசாமியை வாட்ஸ் ஆப் மூலம் தொடர்புகொண்டோம். அது போலியான நியூஸ் கார்டு என்றும், அதனை தினமலர் வெளியிடவில்லை என்றும் அவர் நமக்கு விளக்கம் அளித்தார். அத்துடன், ஒரிஜினல் கார்டு என்று கச்சத்தீவு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசிய கார்டையும் நமக்கு அனுப்பி வைத்தார். இதன்மூலம் வைரலாகும் கார்டு போலியானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

இதுகுறித்து அதிமுக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்று ஆய்வு செய்தோம். அதிமுக ஐடி விங் எக்ஸ் பக்கத்தில் வைரல் கார்டை பகிர்ந்து, “சிறுபான்மையினர், இந்திய நீதித்துறைக்கும் எதிரான ஒரு கருத்தை எடப்பாடி பழனிசாமி கூறியதாக தி.மு.க.வினரால் சமூக ஊடகங்களில் போலி நியூஸ் கார்டு பரப்பப்பட்டு வருகிறது. இச்செய்தி முற்றிலும் போலியானது; அவதூறானது” என்று விளக்கம் அளித்துள்ளது.

வக்ஃபு சட்டம் தொடர்பான அதிமுகவின் நிலைப்பாடு என்ன என்று கூகுளில் தேடினோம். வக்பு வாரிய சட்டத் திருத்தம் அதிமுக எதிர்ப்பு என்ற தலைப்பில் சன் நியூஸ் யூட்யூப் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ கிடைத்தது. அதில், சட்டமன்றத்தில் பேசிய அதிமுக கொறடா வேலுமணி, வக்ஃபு சட்டத்திற்கு எதிர்ப்பை பதிவு செய்துள்ளார்.

Full View

அதேபோல வக்ஃபு திருத்த மசோதாவை மத்திய அரசு கைவிட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி அறிக்கை வெளியிட்டதாக தினத்தந்தி இணையதளத்தில் ஜனவரி மாதம் செய்தி வெளியிடப்பட்டுள்ளது.


மேலும், மாநிலங்களவையில் வக்ஃபு மசோதாவை எதிர்த்து அதிமுக உறுப்பினர்கள் வாக்களித்ததாக எகனாமிக்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.


இந்த ஆதாரங்கள் வாயிலாக வக்ஃபு சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே அதிமுகவும், எடப்பாடி பழனிசாமியும் எடுத்துள்ளனர் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

முடிவு

வக்ஃபு சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி பேசியதாக பகிரப்பட்டு வரும் நியூஸ் கார்டு போலியானது என்பது தகுந்த ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. உண்மையில் வக்ஃபு சட்டத்திற்கு எதிரான நிலைப்பாட்டையே அதிமுக எடுத்துள்ளது. ஆகவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.

Claim :  வக்ஃபு சட்டம் குறித்த உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக எடப்பாடி பழனிசாமி கருத்து என பரவும் நியூஸ் கார்டு
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News