விலை உயர்வு குறித்த கேள்விக்கு எல்.முருகன் ஜெய் ஸ்ரீராம் என மழுப்பினாரா?

பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகியவை மனித வாழ்வுக்கு முக்கிய தேவையாக தற்போது மாறிவிட்டது

Update: 2025-04-16 05:51 GMT
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் ஆகியவை மனித வாழ்வுக்கு முக்கிய தேவையாக தற்போது மாறிவிட்டது. அத்தியாவசிய பொருட்களை ஏற்றிச் செல்லும் லாரி உள்ளிட்ட வாகனங்கள் டீசல் மூலமாகவே இயங்குகின்றன. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் போது அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாயமும் ஏற்படும். அதேபோல நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் சமையலுக்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்துவதால் அதன் விலை உயர்வு மக்களை நேரடியாகவே பாதிக்கும்.
இந்த நிலையில் பெட்ரோல் மற்றும் விலைவாசி உயர்வு தொடர்பாக செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, மத்திய இணையமைச்சர் எல்.முருகன் மழுப்பியபடி கோஷமிட்டு செல்லும் வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பெண் ஒருவர் பெட்ரோல் விலை உயர்ந்துகொண்டே செல்கிறதே, நாளுக்குள் நாள் விலைவாசி அதிகரிக்கிறதே என்ற கேள்வி எழுப்புகிறார். அதற்கு எல்.முருகன், “இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்” என்று மழுப்பலாக கூறிவிட்டு கிளம்புகிறார்.

உண்மை சரிபார்ப்பு

மேற்கூறப்பட்ட வைரல் கூற்று குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு விசாரணை நடத்தியது. அதில், வைரல் வீடியோ தவறாக சித்தரிக்கப்பட்டது எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் மத்திய அமைச்சர் எல்.முருகன் முழக்கமிடும் வீடியோ, பெட்ரோல் விலை குறித்த கேள்வியுடன் தொடர்புடையதா என அறிய ‘எல்.முருகன் ஜெய்ஸ்ரீராம்’ என்ற கீ வேர்டு துணையுடன் யூட்யூபில் தேடினோம். அதுதொடர்பான பல வீடியோக்கள் நமக்கு கிடைத்தன. அவை 2023ஆம் ஆண்டு ஆகஸ்ட் 16ஆம் தேதி வெளியிடப்பட்டு இருந்தன.
சன் நியூஸ் யூட்யூப் பக்கத்தில், “செய்தியாளர்கள் கேள்விகளுக்கு ‘ஜெய் ஸ்ரீராம்.. ஜெய் ஸ்ரீராம் ’ என கூறி நழுவிய எல்.முருகன்” என்ற தலைப்பில் அந்த வீடியோ வெளியிடப்பட்டிருந்தது. அதில், “இந்தியா - பாகிஸ்தான் மேட்ச்சில் பாகிஸ்தான் வீரர்கள் செல்லும்போது ஜெய் ஸ்ரீராம் என கோஷம் போட்டுள்ளார்களே என்று செய்தியாளர் கேள்வி எழுப்புகிறார். அதற்கு எல்.முருகன், ‘இதற்கு ஒற்றை வரியில் பதில் சொல்ல வேண்டும் என்றால் ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீராம்’ என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.
சன் நியூஸ் ஆதாரம் : 
Full View
இதே வீடியோவை ஏபிபி நாடு, நியூஸ் 18 தமிழ்நாடு, ஜீ நியூஸ் ஆகியவை வெளியிட்டு இருந்தன.
ஏபிபி நாடு : 
Full View
ஜீ நியூஸ் : 
Full View
நியூஸ் 18 தமிழ்நாடு : 
Full View
இதுதொடர்பான செய்தியும் காமதேனு இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
அந்த சமயத்தில் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டியில் ஜெய் ஸ்ரீராம் என முழக்கம் எழுப்பப்பட்டதையும் டைம்ஸ் நவ் ஆங்கில இணையதளம் வெளியிட்ட செய்தி வாயிலாக உறுதி செய்துகொண்டோம்.
இதன் மூலம் பெட்ரோல் விலை தொடர்பான கேள்விக்கு எல்.முருகன் அவ்வாறு பதில் அளிக்கவில்லை என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்பு குழு உறுதி செய்தது.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு தொடர்பாக கீ வேர்டுகள் துணையுடன் தேடியபோது நமக்கு சில செய்திகள் கிடைத்தன. ராய்டர்ஸ் இணையதளம் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “வீட்டு உபயோக சிலிண்டரின் விலை ரூ.50 உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசலுக்கான கலால் வரியை மத்திய அரசு ரூ.2 உயர்த்தியுள்ளது. இது பெட்ரோல், டீசல் சில்லறை விலையில் பாதிப்பை ஏற்படுத்தாது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆதாரத்தின் மூலம் சமீபத்தில் கேஸ் விலை மட்டும்தான் உயர்ந்துள்ளது, பெட்ரோல் மற்றும் டீசல் சில்லறை விலை உயரவில்லை என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்துகொண்டது.
சமீபத்திய விலை உயர்வு தொடர்பாக எல்.முருகன் ஏதாவது பேசியுள்ளாரா என்பது குறித்து கூகுளில் தேடினோம். பாலிமர் யூட்யூப் பக்கத்தில் ஏப்ரல் 8, 2025 வெளியிட்ட வீடியோ கிடைத்தது. அதில், “கேஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது சர்வதேச விலை ஏற்ற இறக்கங்களை பொருத்து மாறக்கூடியது. ஒவ்வொரு வருடமும் கமிட்டி அதனை நிர்ணயம் செய்கிறார்கள். அதே சமயம் நமது முதல்வர், சிலிண்டருக்கு ரூ.100 மானியம் தருகிறேன் என்று சொல்லி நான்கு வருடங்களாகிவிட்டது. மானியத்தைப் பற்றி பேசாமல் நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்பது கண்டனத்திற்குரியது” என்று தெரிவித்தார்.

Full View
ஈடிவி பாரத் ஏப்ரல் 8ஆம் தேதி வெளியிட்ட செய்தியிலும், அவ்வாறே எல்.முருகன் கருத்து இடம்பெற்றுள்ளது.
நமக்கு கிடைத்த ஆதாரங்கள் வாயிலாக பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பான கேள்விக்கு எல்.முருகன் ஜெய் ஸ்ரீராம் என முழக்கமிட்டபடி மழுப்பலாக பதில் அளிக்கவில்லை என்பதை Telugu Post உறுதி செய்துகொண்டது. இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி தொடர்பான கேள்விக்கு எல்.முருகன் பதில் அளிக்கும் 2023ஆம் ஆண்டு வெளியான பழைய வீடியோவுக்கு, முன் பகுதியில் வாய்ஸ் ஓவர் கொடுத்து தற்போதைய கேஸ் விலை உயர்வுக்கு பொருந்தும்படியாக மாற்றி தவறான தகவலுடன் பரப்பி வருகிறார்கள்.
Claim :  விலை உயர்வு குறித்த கேள்விக்கு ஜெய்ஸ்ரீராம் என மழுப்பிய எல்.முருகன்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News