டெல்லியில் தகுதியற்ற 85,000 இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியமா?
டெல்லியில் 85,000 தகுதியற்ற இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது.
பெண்களை மையப்படுத்திய திட்டங்களில் மத்திய, மாநில அரசுகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக இலவச பேருந்துப் பயணம், மானிய விலையில் சமையல் எரிவாயு, மாதாந்திர உதவித் தொகை, பெண் கல்விக்கு முக்கியத்துவம் என திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கணவனை இழந்த கைம்பெண்களுக்கு விதவை ஓய்வூதியத் திட்டமும் பல மாநிலங்களில் அமலில் உள்ளது.கணவனை இழந்த பெண்கள் குழந்தைகளுடன் தவிக்கும் நிலையில், அவர்களின் சுமையை சற்று குறைக்கும் வகையில் இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.
பரவும் தகவல்
இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியில் இருந்த ஆம் ஆத்மி அரசு கடந்த 10 ஆண்டுகளாக 85,000 தகுதியற்ற இஸ்லாமிய பெண்களுக்கு விதவை ஓய்வூதியம் வழங்கியதாக ஒரு தகவல் சமூக வலைதளங்களில் வைரலானது. அதாவது அந்த பெண்களின் கணவர்கள் அனைவரும் உயிருடன் தான் உள்ளனர் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், டெல்லி முதல்வர் ரேகா குப்தா இந்த முழு ஊழலையும் அம்பலப்படுத்தியுள்ளார், இந்த ஊழலில் அரவிந்த் கெஜ்ரிவால் மீண்டும் சிறைக்குச் செல்ல வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இதனை பகிர்ந்த அங்குசம் என்ற எக்ஸ் பயனர், “இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழன் யார்னா அது நம்ம கெஜ்ரிவால்தான்.. புருஷன் உயிரோடு இருக்கும்போதே பொண்டாட்டிகளுக்கு உதவி தொகை கொடுத்திருக்கான்னா பாருங்களேன்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
*இந்தியாவிலேயே மிகப்பெரிய ஊழன் யார்னா அது நம்ம கெஜ்ரிதான்டா...*
— அங்குசம் (@saiko58791481) July 17, 2025
*புருஷன் உயிரோடு இருக்கும்போதே பொண்டாட்டிகளுக்கு உதவி தொகை கொடுத்திருக்கான்னா பாருங்களேன்.* pic.twitter.com/aZeUKEf2TQ
மேலும், இணைப்பு 1, இணைப்பு 2 சமூக வலைதளப் பக்கங்களிலும் இதேபோன்ற ஒரு பார்வர்ட் மெசெஜ் ஒன்று வைரலானது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் தகவலின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவல், டெல்லியில் அனைத்துத் தரப்பினருக்கும் விதவை ஓய்வூதியம் வழங்கப்படுவது தெரியவந்துள்ளது.
முதலில் டெல்லி விதவை ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா அம்பலப்படுத்தும் விதமாக ஏதாவது கருத்து தெரிவித்துள்ளாரா என்பது குறித்து கூகுளில் சர்ச் செய்தோம். ஆனால், விதவை ஓய்வூதியத் திட்டத்தில் இஸ்லாமியர்களை தொடர்புபடுத்தியோ அல்லது ஆம் ஆத்மி அரசை குற்றம்சாட்டியோ ரேகா குப்தா எந்த இடத்திலும் பேசவில்லை என்பதை உறுதி செய்தோம்.
அடுத்து இஸ்லாமியப் பெண்களுக்கு மட்டுமே டெல்லியில் விதவை ஓய்வூதியம் வழங்கப்படுகிறதா என்பது குறித்த தேடலில் இறங்கினோம். டெல்லி அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு இணையதளத்தில், விதவை ஓய்வூதியத் திட்டம் தொடர்பான தகுதிகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
அதில், “ 5 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லியில் வசிப்பவராக இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ. 1 லட்சத்திற்கும் அதிகமாக இருக்கக் கூடாது. வங்கிக் கணக்கு இருக்க வேண்டும். மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து வேறு எந்த வகையிலும் பயனருக்கும் ஓய்வூதியமும் கிடைக்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், இஸ்லாமியர்களுக்கு மட்டும்தான் ஓய்வூதியம் என்றோ அல்லது மதம் தொடர்பான எந்த தகவல்களுமோ இணையதளத்தில் குறிப்பிடப்படவில்லை.
அடுத்து தி இந்து ஆங்கில இணையதளத்தில் ஜூலை 1ஆம் தேதி டெல்லி விதவை ஓய்வூதியம் தொடர்பாக வெளியான செய்தியை நாம் கண்டோம். அதில், “டெல்லி அரசின் மகளிர் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் 60,000க்கும் மேற்பட்ட பயனாளிகள் தகுதியற்றவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்தத் திட்டம் விதவைகள், விவாகரத்து பெற்றவர்கள், கணவனை பிரிந்தவர்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கு மாதம்தோறும் ரூ.2,500 நிதி உதவி வழங்குகிறது. தற்போது, சுமார் 3.65 லட்சம் பெண்கள் இந்தத் திட்டத்தின் கீழ் வழக்கமான ஓய்வூதியத்தைப் பெறுகின்றனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதே தகவலை எகனாமிக்ஸ் டைம்ஸ், டெக்கான் ஹெரால்டு ஆகிய இணையதளங்களும் வெளியிட்டுள்ளன. இதிலும் இஸ்லாமிய பெண்கள் நீக்கம் என்ற எந்த தகவல்களும் இடம்பெறவில்லை.
இந்த ஆதாரங்கள் மூலம் டெல்லியில் தகுதியற்ற 85,000 முஸ்லீம் பெண்களுக்கு விதவை ஓய்வூதியத் திட்டம் வழங்கப்படுவதாகவும் பரவும் தகவல் தவறானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதிப்படுத்தியது. டெல்லியில் விதவை ஓய்வூதிய திட்டம் மத அடிப்படையிலானது அல்ல, அனைத்து மதத்தில் உள்ள பெண்களுக்கும் விதவை ஓய்வூதியம் வழங்கப்பட்டு வருகிறது, அண்மையில் தகுதியற்றவர்கள் என்று நீக்கப்பட்ட 60 ஆயிரம் பேரும் குறிப்பிட்ட மதத்தை சேர்ந்தவர்கள் இல்லை என்பதையும் உறுதிப்படுத்தியுள்ளது.
முடிவு
டெல்லியில் விதவை ஓய்வூதியத் திட்டத்தில் தகுதியற்ற 85,000 பெண்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக மாதம்தோறும் ஓய்வூதியம் அளிக்கப்பட்டு வந்ததாக பரவும் தகவல் தவறானது. டெல்லியில் மதச்சார்பு இல்லாமல் தான் பெண்கள் ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.