வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்களிக்க வேலுமணி ஆதரவு தெரிவித்தாரா?

வெளி மாநில வாக்காளர்கள் தமிழ்நாட்டில் வாக்களிப்பதில் தவறில்லை என்று வேலுமணி கூறியதாக போலி நியூஸ் கார்டு பரவுகிறது.

Update: 2025-08-05 08:40 GMT

பீகாரில் வரும் நவம்பர் மாதம் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, அங்கு சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில், 65 லட்சம் பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. அதில் புலம்பெயர் தொழிலாளர்களாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் தங்கி பணிபுரியும் தொழிலாளர்களின் வாக்குரிமையும் அடக்கம். அதே சமயம் பீகார் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தாங்கள் வசிக்கும் மாநிலங்களில் வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை சேர்த்துக்கொள்ளலாம்.

தமிழ்நாட்டில் 6.50 லட்சம் பீகார் மக்கள் புலம்பெயர்ந்து தங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்துக்கொள்ளலாம். ஆனால், இது தமிழக மக்கள் தங்கள் மாநில அரசை சுதந்திரமாக தேர்வு செய்யும் உரிமையை பறிக்கும் செயல் என தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதே சமயம் பாஜக இந்த நடைமுறைக்கு ஆதரவு தெரிவித்து வருகிறது.

பரவும் தகவல்

இந்த நிலையில் வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆதரவு தெரிவித்தது போல ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பா.கார்த்திக் ராஜா என்ற எக்ஸ் பயனர் வைரல் புகைப்படத்தை பகிர்ந்து, “பாஜகவை வச்சு அந்த ஓட்டையாவது வாங்காலனு நினைக்கிறாங்க போல . இதுக்கு எதுக்குடா வெள்ளையும் சொள்ளையுமா சுத்தனும் ?” என்று கேள்வி எழுப்பினார்.

நெல்லை செல்வின் என்ற எக்ஸ் பதிவர், வட மாநிலத்தவருக்கு ஓட்டுரிமை கொடுத்தால் ரூ.300, ரூ.400 கொடுத்தால் ஒட்டை வாங்கிவிடலாம் அல்லவா? என்ற ரீதியில் கேள்வி எழுப்பி இருந்தார்.

மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பதிவுகளிலும் வைரல் நியூஸ் கார்டு பகிரப்பட்டு வேலுமணியை விமர்சனம் செய்திருந்தனர்.

உண்மை சரிபார்ப்பு

வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது போலியான நியூஸ் கார்டு என்பது தெரியவந்தது.

முதலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் தொடர்பாக முன்னாள் அமைச்சர் வேலுமணி ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்பது கூகுளில் சர்ச் செய்தோம். அதில், வேலுமணி அப்படியான கருத்தைத் தெரிவித்ததாக எந்த செய்தி அறிக்கைகளோ அல்லது வீடியோ ஆதாரங்களோ நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரல் நியூஸ் கார்டு தந்தி டிவி பெயரில் ஆகஸ்ட் 1ஆம் தேதியிட்டு வெளியாகி இருந்ததால் அதன் சமூக வலைதளப் பக்கங்களை ஸ்கேன் செய்தோம். அதில் அப்படியான எந்த நியூஸ் கார்டும் நமக்கு கிடைக்கவில்லை. இதனையடுத்து தந்தி டிவி உதவி ஆசிரியர் பாலசுப்பிரமணியனை தொடர்புகொண்டு கேட்டபோது, அப்படியான நியூஸ் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்றும், தந்தி டிவி பெயரை பயன்படுத்தி போலியாக சித்தரிக்கப்பட்ட நியூஸ் கார்டு பரவி வருகிறது என்றும் விளக்கம் அளித்தார்.

மேலும், வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது என தந்தி டிவி சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கம் அளித்திருந்த பதிவையும் நமக்கு அனுப்பி வைத்தார்.

வைரல் நியூஸ் கார்டு குறித்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடியதில், அதில் இடம்பெற்றுள்ள புகைப்படம் ஆறு ஆண்டுகளுக்கு முன்பு அமைச்சராக இருந்தபோது வேலுமணி செய்தியாளர்களை சந்தித்த புகைப்படம் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு தெரிந்துகொண்டது. ஆதாரம் (2019ஆம் ஆண்டு வேலுமணி அளித்த பேட்டி வீடியோ)

வைரல் கார்டு குறித்து வேலுமணி ஏதேனும் விளக்கம் அளித்துள்ளாரா என அவருடைய சமூக வலைதளப் பக்கத்தை ஆய்வு செய்தபோது, தந்தி டிவி வெளியிட்ட Fake News தகவலை தனது எக்ஸ் பக்கத்தில் ரீட்வீட் செய்திருந்ததைக் கண்டறிந்தோம்.


மேலும் அதிமுக ஐடி விங் தலைவர் கோவை சத்யன், “வைரலாகும் நியூஸ் கார்டு போலியானது. அதிமுக மீது அவதூறு பரப்ப வேண்டும் என்பதற்காக திமுகவைச் சேர்ந்தவர்கள் சமூக வலைதளங்களில் இதுபோன்ற போலியான நியூஸ் கார்டுகளைப் பகிர்ந்து வருகிறார்கள்” என்று விளக்கினார்.


இதுதொடர்பான நமது தேடலில் வைரல் நியூஸ் கார்டு போலியானது என்றும், அதனை தந்தி தொலைக்காட்சி வெளியிடவில்லை என்றும் உண்மை சரிபார்ப்பு இணையதளமான நியூஸ் செக்கர் செய்தி வெளியிட்டுள்ளது தெரியவந்தது.

முடிவு

வெளி மாநிலத்தவர் தமிழ்நாட்டில் வாக்காளராக இருப்பதில் தவறு ஒன்றும் இல்லை என வேலுமணி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது. அப்படியான எந்த கருத்தையும் வேலுமணியோ அல்லது அதிமுகவோ குறிப்பிடவில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  வெளிமாநிலத்தவர்கள் தமிழகத்தில் வாக்காளர்களாக இருப்பதில் தவறில்லை என வேலுமணி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News