பாஜக தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகசியமாக சந்தித்தாரா?
டெல்லியில் பாஜக தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை பார்ப்போம்.
தமிழகத்தில் ஆளும் திமுகவும் மத்தியில் ஆளும் பாஜகவும் எதிர் எதிர் துருவங்களாகவே இருந்து வருகின்றன. தமிழகத்திற்கு நிதி உள்ளிட்ட விவகாரங்களில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாகவும், இந்தியை திணிப்பதாகவும் திமுக தொடர்ச்சியாக குற்றம்சாட்டுகிறது. ஆனால், கடந்த 10 ஆண்டுகளில் தமிழகம் தந்த வரி வருவாயை விட அதிகமான நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக மத்திய அரசு விளக்கம் அளிக்கிறது.
அதே சமயம் திமுகவும் பாஜகவும் கள்ளக் கூட்டணி அமைத்துள்ளதாக நடிகர் விஜய்யின் தவெக தொடர்ச்சியாக விமர்சனம் செய்து வருகிறது. கடந்த மே மாதம் பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் டெல்லி சென்ற நிலையில், அமலாக்கத் துறை ரெய்டில் இருந்து தனது குடும்பத்தை காப்பாற்றவே சென்றுள்ளார் என அதிமுக, தவெக கட்சிகள் குற்றம்சாட்டின.
பரவும் தகவல்
இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஆர்எஸ்எஸ் பிரமுகர் வீட்டில் பாஜக மூத்த தலைவர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகசிய சந்திப்பு நடத்தியதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உடன் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன், எல்.முருகன் ஆகியோர் உள்ளனர்.
@vetrimaran_of என்ற எக்ஸ் பக்கத்தில் புகைப்படத்தைப் பகிர்ந்து, “ டில்லியில் உள்ள RSS பிரமுகரின் வீடு . தமிழ்நாடு பா ஜ க மூத்த தலைவர்கள் புடைசூழ முதல்வரும் ஆ ராசாவும் . நிதிஆயோக் கூட்டத்திற்காக மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு சென்றபோது நடந்த ரகசிய சந்திப்பு” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய சமூக வலைதள இணைப்புகளிலும் வைரல் புகைப்படம் அதே கருத்துடன் இடம்பெற்றிருப்பதைக் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் பரவுவது தவறான தகவல் என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் புகைப்படத்தை ஆய்வு செய்தபோது, அதில் சி.பி.ராதாகிருஷ்ணன் இருப்பதை கண்டுபிடித்தோம். சி.பி.ராதாகிருஷ்ணன் மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராக உள்ள நிலையில், அவர் அண்மையில் முதல்வருடன் சேர்ந்து எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டதாக செய்திகள் நமக்கு கிடைக்கவில்லை. இதனால் வைரலாவது பழைய புகைப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது.
வைரல் புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் 2024ஆம் ஆண்டு மார்ச் மாதமே இந்த புகைப்படத்தை யூடியூபர் சவுக்கு சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்ததை கண்டறிந்தோம். இதன்மூலம் வைரல் புகைப்படம் கடந்த மே மாதம் நடந்த நிதி ஆயோக் கூட்டம் சமயத்தில் எடுக்கப்பட்டது அல்ல என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
இதனையடுத்து, வைரல் புகைப்படம் எந்த சூழலில் எடுக்கப்பட்டது என்பதை தேடினோம். சேலம் நளினி ராமன் என்ற பாஜக நிர்வாகி பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருந்ததைக் கண்டறிந்தோம். வைரல் புகைப்படம் மற்றும் பாஜக நிர்வாகி வெளியிட்ட புகைப்படத்தில் பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரின் உடை, அடையாள அட்டை ஒன்றாக இருப்பதை கண்டுபிடித்தோம்.
அதில், “திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பிரதமர் மோடியை வரவேற்பதற்காக காந்தி கிராம் பல்கலைகழகத்தில் மரியாதைக்குரிய அண்ணார் CPR, PONNAR அவர்களுடன் காத்திருந்த போது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
இதனால் பிரதமரின் திண்டுக்கல் நிகழ்வில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டாரா என்று தேடினோம். திண்டுக்கல் நிகழ்ச்சியில் பங்கேற்க ஹெலிகாப்டரில் வந்த பிரதமர் மோடியை முதல்வர் மு.க.ஸ்டாலினும் வரவேற்று இருந்ததை தமிழக அரசின் செய்திக் குறிப்பு நமக்கு உறுதி செய்தது.
Full View
அந்த சமயத்தில் ஏஎன்ஐ வெளியிட்ட பிரதமர் மோடியை ஸ்டாலின் வரவேற்கும் புகைப்படங்களையும், வைரலாகும் புகைத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தோம். இரண்டு புகைப்படங்களிலும் ஸ்டாலின் மற்றும் எல்.முருகன் இருந்தனர். அத்துடன், வைரல் புகைப்படத்தில் ஸ்டாலின் பின்னால் நிற்கும் அவரது உதவியாளர் அணிந்துள்ள பேட்ச் மற்றும் பிரதமரை வரவேற்ற அமைச்சர் ஐ.பெரியசாமி அணிந்திருந்த பேட்ச் ஆகியவை ஒரே நிறத்தில் இருந்ததை உறுதி செய்தோம்.
Prime Minister Narendra Modi was received by Chief Minister MK Stalin upon his arrival in Tamil Nadu today. pic.twitter.com/KtTyZQ9Bj3
— ANI (@ANI) November 11, 2022
இதனைத் தொடர்ந்து டெல்லி சென்றபோது ஸ்டாலின் பாஜக தலைவர்கள் சந்தித்தார்களா என்று கூகுளில் தேடினோம். எனினும் நமக்கு அப்படியான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை. மேலும், நிதி ஆயோக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசியது மற்றும் பிரதமரிடம் மனு அளித்தது தொடர்பாக தீ வீக் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரல் புகைப்படம் 2022ஆம் ஆண்டு பிரதமர் மோடி திண்டுக்கல் வந்தபோது அவரை வரவேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் காத்திருப்பு அறையில் இருந்தபோது எடுத்த புகைப்படம் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
டெல்லியில் கடந்த மே மாதம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொள்ள சென்றபோது பாஜக தலைவர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் ரகசியமாக சந்தித்ததாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகிறது. இந்த புகைப்படம் 2022ஆம் ஆண்டு திண்டுக்கல்லில் பிரதமர் மோடியை வரவேற்க காத்திருந்தபோது எடுக்கப்பட்டது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.