தமிழகத்தில் பட்டப் பகலில் நடந்த கொலை என பரவும் வீடியோ - உண்மை இதுதான்

ஐதராபாத்தில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான வீடியோ, தமிழகத்தின் வேலூரில் நடந்ததாக தவறான தகவலுடன் வைரலாகிறது.

Update: 2025-07-25 16:21 GMT

தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்பது தமிழக அரசின் மீதும் காவல் துறை மீது எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் பொதுவான குற்றச்சாட்டாக உள்ளது. குறிப்பாக தினமும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை என குற்றச் சம்பவங்கள் பதிவாகின்றன என்றும் அதனை தடுக்க காவல் துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்ற விமர்சனமும் முன்வைக்கப்படுகிறது. அதே சமயம் தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

முன்விரோதம் தொடர்பான கொலைகளை தடுக்க முடியாது என்றும், அதற்கு பிறகு உரிய நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கலாம் என்று அமைச்சர் ரகுபதி விளக்கம் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனிடையே தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று நிறுவுவதற்காக கொலை, கொள்ளை தொடர்பான பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி தமிழக அரசு மீது விமர்சனங்கள் வைக்கப்படுகிறது.

பரவும் தகவல்

வேலூரில் பட்டப் பகலில் நடுரோட்டில் ஒருவரை ஒரு கும்பல் வெட்டிப் படுகொலை செய்ததாகக் கூறி வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. சாலையில் இரு சக்கர வாகனத்தில் வரும் ஒருவரை, வழிமறித்து வெட்டிவிட்டு பைக்கில் செல்வது போல அந்த காட்சிகள் இருந்தன. குறிப்பாக திமுக ஆட்சியை விமர்சனம் செய்து இந்த வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

Hemand Kumar என்ற எக்ஸ் பயனர் வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “எந்த கொம்பனும் குறை சொல்ல முடியாத MK Stalin ஆட்சியில் பட்டப்பகலில் கொடூரமாக வெட்டிக் கொல்றானுக” என்று குறிப்பிட்டு இருந்தார். DmKfailsTN என்ற ஹாஷ்டேக்கையும் அவர் பகிர்ந்திருந்தார். 

Archive 

இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் இந்த வீடியோ வைரலாகி வருகிறது.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தபோது, அது தவறானது தகவல் என்பதும், இந்த சம்பவம் ஐதராபாத்தில் நடந்தது என்பதும் கண்டறியப்பட்டது.

முதலில் வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை தனித் தனியாக ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் 2025 மே 16ஆம் தேதி Meem tv, BNN Channel ஆகிய சமூக வலைதளப் பக்கங்களில் அதே வீடியோ வெளியிடப்பட்டு இருந்ததைக் கண்டறிந்தோம். BNN Channel வீடியோவை வெளியிட்டு, “ஐதராபாத் ரெட்ஹில்ஸ் அருகே நிலோஃபர் ஹோட்டல் பகுதியில் இளைஞர் அயன் குரேஷி கொலை செய்யப்பட்டதன் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன” என்று குறிப்பிடப்பட்டு இருந்ததை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.



இதனை அடிப்படையாக வைத்து தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். அதில் வைரல் வீடியோ தொடர்பாக தி இந்து, டைம்ஸ் ஆப் இந்தியா, ஏஎன்ஐ ஆகியவை வெளியிட்ட செய்திகள் கிடைத்தன.

தி இந்து செய்தி அறிக்கையின்படி, தெலங்கானா மாநிலம் ஐதராபாத் ரெட் ஹில்ஸில் உள்ள சிறார் நீதிமன்றத்திற்கு வெளியே 21 வயது இளைஞர் கொல்லப்பட்டார். இறந்தவர் பெயர் முகமது அயன் குரேஷி என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு திரும்பிக் கொண்டிருந்தபோது கத்திகள் மற்றும் கிரிக்கெட் மட்டையால் தாக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். குடும்பப் பிரச்னையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக 2020ஆம் ஆண்டு அயன் குரேஷி சிறாராக இருக்கும் போது ஒரு கொலை செய்துள்ளார், அதற்கு பழிவாங்கும் விதமாகவே குரோஷி கொல்லப்பட்டுள்ளார், இதுதொடர்பாக நான்கு பேரை காவல் துறையினர் கைது செய்தனர் என்று தெரிவித்துள்ளது.



 டைம்ஸ் ஆப் இந்தியா கூற்றின்படி, “முகமது அயன் குரேஷி என்ற 21 வயது இளைஞர் கொலை செய்யப்பட்டார். இந்த கொலைக்கு காரணமான சையத் மஹ்மூத் குவாட்ரி, முகமது அஸ்லாம், முகமது சித்திக் அகமது மற்றும் சையத் மஜித் குவாட்ரி ஆகிய நான்கு பேரை நம்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

2016 ஆம் ஆண்டு அயன் குரேஷியின் சகோதரி முனாவர் என்பவரை திருமணம் செய்தார். முனாவர், மஹ்மூத் குவாட்ரி மற்றும் மஜித் குவாட்ரியின் குடும்பத்தைச் சேர்ந்தவர். 2020 ஆம் ஆண்டு முனாவர் கொலை செய்யப்பட்டார். அந்த கொலை வழக்கில் அயன் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் தொடர்பு இருந்தது. இதனால் இரு குடும்பத்திற்கும் இடையே பகை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில்தான் அயன் குரேஷி கொலை செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


முனிசீப் டெய்லி வெளியிட்ட செய்தியில், அயன் குரேஷி கொலை தொடர்பான சிசிடிவி காட்சிகள் பீதியை ஏற்படுத்தியுள்ளதுடன், ஐதராபாத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை மீண்டும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது. சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எதிராக விரைவான மற்றும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் அடிப்படையில் இந்த சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறவில்லை என்பதும், தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்த கொலை சம்பவம் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் நடந்த கொலை சம்பவம் என தவறான தகவலுடன் பரப்பப்படுகிறது.

முடிவு

தமிழ்நாட்டின் வேலூரில் பட்டப் பகலில் கொலை சம்பவம் நடைபெற்றதாக முற்றிலும் தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அந்த சம்பவம் தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் நடந்துள்ளது. ஆகவே, செய்திகள், வீடியோக்களை பகிரும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக் கொள்கிறது.

Claim :  தமிழகத்தில் பட்டப் பகலில் நடந்த கொலை சம்பவம் என பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News