பீகார் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துவிட்டு வேலைக்காக தொழிலாளர்கள் தமிழகம் திரும்பினார்களா?

பீகார் தேர்தலில் பாஜக வாக்களித்து வெற்றிபெறச் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் வேலைக்கு தமிழ்நாடு திரும்பிவிட்டதாக பழைய புகைப்படம் பரவி வருகிறது

Update: 2025-11-16 17:31 GMT

பீகார் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்தது. மொத்தமுள்ள 243 இடங்களில் பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றி ஐஜத - பாஜக உள்ளடங்கிய தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியைப் பிடித்தது. பிரதான எதிர்க்கட்சியான ஆர்ஜேடி 25 இடங்களையும், காங்கிரஸ் ஆறு இடங்களையும் கைப்பற்றி படுதோல்வியை சந்தித்தன.

இது ஒருபுறம் இருக்க பீகார் மாநிலத்தைச் சேர்ந்த புலம்பெயர் தொழிலாளர்கள் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டின் திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் பணியாற்றி வருகிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் சொந்த ஊர்களுக்கு ஓட்டு போடுவதற்காக சென்றுள்ளனர். இந்த சூழலில் பீகார் தேர்தலை மையப்படுத்தி பல்வேறு போலி தகவல்கள் சமூக வலை தளங்களில் உலாவி வருகின்றன.

பரவும் தகவல்

பீகார் சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றிபெறச் செய்த புலம்பெயர் தொழிலாளர்கள் உடனே வேலைக்காக தமிழ்நாட்டுக்கு திரும்பிவிட்டதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதில் ரயில் நிரம்பி வழியும் வகையில் பயணிகள் கூட்டம் இருப்பதைக் காண முடிந்தது.

MM Santhosh Kadathur என்ற பேஸ்புக் பதிவர், பீகார்ல அவர்களை ஓட்டு போட்டு ஜெயிக்க வச்சுட்டு இப்போ வையித்து பொழப்புக்கு தமிழ் நாட்டுக்கு புறப்பட்டு வரோம்ங்க என்று பதிவிட்டு வைரல் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.

Full View

@Pugal0405gmail4 என்ற எக்ஸ் பயனர், பீகாரில் வந்த வேலை முடிஞ்சு மீண்டும் தமிழ்நாடு கிளம்பிட்டோம் பையா என்று பதிவிட்டு இருந்தார். 

மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களில் வைரல் புகைப்படம் பதிவிடப்பட்டு இருப்பதை காண முடிந்தது. இவற்றிலும் இதே ரீதியிலான கருத்தே இடம்பெற்றிருந்தது.


 



உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது பழைய புகைப்படம் என்பது தெரியவந்தது.

முதலில் வைரல் புகைப்படம் குறித்து அறிய அதனை பதிவிறக்கம் செய்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் வைரல் புகைப்படம் கடந்த பல ஆண்டுகளில் பல இணையதளங்களில் பதிவிடப்பட்டு இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.


2015 பிப்ரவரி 28ஆம் தேதி மனி கண்ட்ரோல் இணையதளத்தில் ரயில்வே பட்ஜெட் தொடர்பான கட்டுரைக்கு இந்த புகைப்படம் பயன்படுத்தப்பட்டு இருந்தது.

புகைப்படத்தின் மூலத்தை தேடியபோது zeebiz இணையதளம் வெளியிட்ட பதிவில் புகைப்பட உதவி ராய்ட்டர்ஸ் எனக் குறிப்பிடப்பட்டு இருந்ததைக் காண முடிந்தது.


மேலும் நமது தேடலில் 2016ஆம் ஆண்டு ராய்ட்டர்ஸ் இணையதளம் வெளியிட்ட புகைப்படம் நமக்கு கிடைத்தது. இந்தியாவில் ரயில் பயணங்கள் எப்படி உள்ளன என்பது தொடர்பாக புகைப்படங்களுடன் விவரிக்கும் கட்டுரை அது. ஒவ்வொரு நகரத்தில் ரயில்களில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளதையும், பயணிகள் படிகளில் தொங்கியபடி பயணிப்பதையும் அது படம்பிடித்துக் காட்டுகிறது.


வைரல் புகைப்படம் குறித்த தகவலும் கட்டுரையில் இடம்பெற்றிருந்தது. அதில், “பிப்ரவரி 23, 2010 அன்று கிழக்கு இந்திய நகரமான பாட்னாவில் நெரிசலான ரயிலில் பயணிகள் பயணம் செய்கிறார்கள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

தேர்தலுக்குப் பிறகு பீகாரில் இருந்து தமிழ்நாட்டிற்கு புலம்பெயர் தொழிலாளர்கள் வந்ததாக பரவும் தகவல் தொடர்பாக தேடியபோது நமக்கு எதுவும் கிடைக்கவில்லை. அதே சமயம் புலம்பெயர் தொழிலாளர்கள் பீகார் தேர்தல் மற்றும் சத் பூஜைக்காக தமிழ்நாட்டில் இருந்து சொந்த ஊர்களுக்கு திரும்பியது தொடர்பாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த ஆதாரங்கள் வாயிலாக பீகார் தேர்தலுக்குப் பிறகு தொழிலாளர்கள் தமிழ்நாடு திரும்புவதாக தவறான தகவலுடன் பழைய புகைப்படம் பரவுகிறது என்பதை உறுதி செய்தோம்.

முடிவு

பீகாரில் பாஜகவுக்கு வாக்களித்துவிட்டு வேலைக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாடு திரும்புவதாக தவறான தகவலுடன் புகைப்படம் பரவுகிறது. உண்மையில் அது 2010ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட பழைய புகைப்படம். ஆகவே, தகவல்களை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  பீகாரில் பாஜகவை வெற்றிபெற வைத்துவிட்டு உடனே வேலைக்காக தமிழகம் திரும்பிய புலம்பெயர் தொழிலாளர்கள்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News