தமிழகத்தில் சாலை வெள்ளத்தில் கீழே விழுந்த பெண் என வைரலாகும் வீடியோ - உண்மை என்ன?
சாலையில் தேங்கிய மழைநீரில் சிக்கி குழந்தையுடன் பெண் கீழே விழுந்ததாக பரவும் வீடியோ தமிழகத்தில் நடந்தது அல்ல. அது பாகிஸ்தானில் நடந்த சம்பவம்.
தமிழ்நாட்டிற்கு அதிக மழைப் பொழிவைக் கொடுக்கும் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் மத்தியில் தொடங்கியது. தற்போது மாநிலம் முழுவதும் விட்டு விட்டு பல இடங்களில் கன மழை கொட்டித் தீர்த்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மோன்தா புயல் காரணமாக சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் மழை நீடிக்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
அதே சமயம் மழை நீர் சாலைகளில் தேங்கி நிற்பதாகவும், மக்கள் அவதியடைவதாகவும் சமூக வலைதளங்களில் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. ஆனால், மழைநீர் சாலைகளில் தேங்காத அளவுக்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தமிழ்நாடு அரசு தரப்பில் கூறப்பட்டு வருகிறது. அதே சமயம் மழைநீர் தேங்கியுள்ளதாக பல பழைய மற்றும் தமிழகத்துடன் தொடர்பில்லாத வீடியோ, புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் 'திமுக ஸ்டாலின் ஆட்சியில் மக்களின் நிலைமை' என்ற கேப்ஷனோடு ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், மழைநீர் முழுவதுமாக தேங்கியிருக்கும் சாலையில் இரு சக்கர வாகனத்தை ஒருவர் ஓட்டிக்கொண்டு வந்த நிலையில், பின்னால் அமர்ந்திருந்த பெண் மற்றும் குழந்தை நிலைதடுமாறி கீழே விழுவது போல காட்சிகள் இருந்தன.
Mohan Ji என்ற பேஸ்புக் பதிவர் இந்த வீடியோவைப் பகிர்ந்து, “எத்தனை தாய்மார்கள் பொதுமக்கள் இதுபோன்று அவதிப்படுகிறார்கள். தற்கு திமுக ஆட்சியில் பல ஆயிரம் கோடிகளுக்கு மேல் பொது மக்களின் வரிப் பணத்தை வீணடித்தும் பயனில்லாத மனசாட்சி இல்லாத இந்த ஸ்டாலின் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வர மக்கள் தயாராகி விட்டனர்” என்று குறிப்பிட்டு விமர்சனம் செய்திருந்தார்.
மேலும் பதிவு 1, பதிவு 2, பதிவு 3 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வீடியோ பகிரப்பட்டு தமிழக அரசு மீது விமர்சனம் முன்வைக்கப்பட்டிருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தமிழ்நாட்டில் நடந்தது அல்ல என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் கூகுள் லென்ஸில் தேடினோம். அதில் வைரல் வீடியோ ‘டைம்ஸ் ஆப் கராச்சி’ என்ற பேஸ்புக் பக்கத்தில் 2025 ஆகஸ்ட் 20ஆம் தேதி வெளியாகி இருப்பதை கண்டுபிடித்தோம்.
அதில், “தாயின் அன்பு எந்த புயலையும் விட வலிமையானது. கராச்சியின் பழைய நகரப் பகுதியின் வழுக்கும் சாலைகளிலும், மழையில் மூழ்கிய தெருக்களிலும் கூட, ஒரு தாய் தனது குழந்தையைப் பாதுகாப்பாக வைத்திருக்கிறாள்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதே வீடியோவை பாகிஸ்தான் கராச்சியை சேர்ந்த ஊடகமான Facture அதே நாளான ஆகஸ்ட் 20ஆம் தேதியே வெளியிட்டு இருந்தது. அதில், “இந்த அதிர்ச்சியூட்டும் காணொளி, மழைக்காலத்தை மட்டுமல்ல, ஒவ்வொரு பருவமழையுடனும் மில்லியன் கணக்கான மக்கள் தொடர்ந்து அனுபவிக்கும் அச்சத்தையும் படம்பிடித்து காட்டுவதால், குடிமக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இது ஒரு விபத்து அல்ல - இது பல ஆண்டுகளாக ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் பொறுப்புணர்வு இல்லாமையின் நேரடி விளைவு. பில்லியன் கணக்கான வரிகளை வசூலித்த போதிலும், அரசாங்கம் அடிப்படை சாலை உள்கட்டமைப்பு மற்றும் வடிகால் வசதியை கூட வழங்கத் தவறிவிட்டது. அமைச்சர்கள் ஆறுதலாக அமர்ந்திருக்கும்போது, அப்பாவி குடும்பங்கள் ஒவ்வொரு நாளும் உடைந்த சாலைகளிலும் மூழ்கிய தெருக்களிலும் தங்கள் உயிரைப் பணயம் வைக்கின்றனர். இந்த தாயின் அழுகை ஒவ்வொரு கராச்சிவாசியின் வலியையும் எதிரொலிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதேபோல அதே ஆகஸ்ட் 20ஆம் தேதி கராச்சி எனக் குறிப்பிட்டே மேலும் சில பக்கங்களில் வீடியோ பகிரப்பட்டு இருப்பதை இங்கே , இங்கே கண்டுபிடித்தோம்.
The scenes are heartbreaking for many reasons
— Doc Reviews (@Drviews137) August 20, 2025
1. Government providing poor infrastructure
2. People in vehicles passing by as if nothing happened #karachirain #karachirain #Karachi #KarachiRains #KarachiMonsoon #KarachiFloods #karachiweather #karachirainemergency pic.twitter.com/DIWrPs9aTS
கராச்சியில் ஆகஸ்ட் மாதம் மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதா என்று கூகுளில் சர்ச் செய்தபோது, ஏஎன்ஐ வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில், “கராச்சியின் பல்வேறு பகுதிகளில் பெய்த கனமழையால் பரவலான மின்சாரம் துண்டிக்கப்பட்டது மற்றும் போக்குவரத்து தடைப்பட்டது, இதனால் உள்ளூர் அதிகாரிகள் மழை அவசரநிலையை அறிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேபோல வைரல் வீடியோ கராச்சியில்தான் எடுக்கப்பட்டது என தி குயிண்ட், பேக்ட் கிரசண்டா ஆகியவை உண்மை சரிபார்ப்பு கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
இந்த ஆதாரங்கள் மூலமாக வைரலாவது பாகிஸ்தான் நாட்டின் கராச்சி நகரில் எடுக்கப்பட்ட வீடியோ, அது தமிழகத்தில் நடந்தது அல்ல என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
தமிழகத்தில் சாலையில் தேங்கி நிற்கும் மழைநீரால் கீழே விழுந்த பெண் என்று தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. அது பாகிஸ்தானின் கராச்சி நகரில் எடுக்கப்பட்ட பழைய வீடியோ, அதற்கும் தமிழகத்திற்கும் தொடர்பு இல்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.