அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேசையில் பெரியார் சிலையா? - உண்மை இதுதான்

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அலுவலக மேசையில் பெரியார் சிலை இருப்பது போல எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வருகிறது.

Update: 2025-05-28 06:51 GMT

தமிழ்நாட்டின் மிக முக்கியமான சமூக சீர்திருத்தவாதியாக பெரியார் அறியப்படுகிறார். பெண்களுக்கான உரிமை, சாதி ஒழிப்பு குறித்து தனது 90 வயதுக்கு மேல் வரை தமிழகம் முழுவதும் பயணித்து பேசியும் எழுதியும் வந்தார். பெரியாரின் திராவிடர் கழகத்தின் நீட்சியாக தொடங்கப்பட்ட கட்சிகளான திமுக, அதிமுக ஆகியவை தமிழகத்தை கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்து வருகின்றன.

திமுகவும் மற்ற திராவிட இயக்கங்களும் இது பெரியார் மண், தமிழகம் தற்போது கண்டுள்ள முன்னேற்றத்திற்கு பெரியார் போட்ட விதைதான் காரணம் எனவும் கூறி வருகின்றன. ஆனால் பெரியார் இந்து மதத்திற்கு எதிராக பரப்புரை செய்தார் என்று அவருக்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. பல இடங்களில் பெரியார் சிலை சேதப்படுத்தப்படும் சம்பங்களும் கூட கடந்த காலங்களில் நிகழ்ந்துள்ளன. தற்போதும் பெரியாருக்கு ஆதரவாகவும் அவரை விமர்சனம் செய்தும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

பரவும் தகவல்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அலுவலக மேசையில் பெரியார் சிலை வைக்கப்பட்டுள்ளதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Kulavi என்ற எக்ஸ் பதிவர், “அமெரிக்க அதிபர் டிரம்ப் மேஜயில் பெரியார் 🔥🔥 கதருங்க டா சங்கீஸ்” என்று பதிவிட்டு இருந்தார். இது

30,800 பார்வைகளை பெற்றிருந்தது.

Archive 

Karthik Govindaraj என்ற பேஸ்புக் பயனரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் மேசையில் பெரியார் சிலை என்றே குறிப்பிட்டு பதிவிட்டார்.

Archive




உண்மை சரிபார்ப்பு

வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மையை TeluguPost உண்மை கண்டறியும் குழு ஆய்வு செய்ததில், அது எடிட் செய்யப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது.

பெரியார் சிலை ட்ரம்ப் அலுவலகத்தில் இருப்பது போன்ற புகைப்படத்தை கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் சரிபார்த்தோம். தி சன்.காம், டெய்லி மெயில் போஸ்ட் ஆகியவை மே 22ஆம் தேதி வெளியிட்ட செய்திகள் நமக்கு கிடைத்தன. தி சன் வெளியிட்ட செய்தி அறிக்கையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை வெள்ளை மாளிகையில் புளோரிடா கேட்டர்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சந்தித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் இருந்தன.



குறிப்பாக 7.9 அடி உயரமுள்ள கூடைப்பந்து வீரர் ஆலிவர் ரியக்ஸ் சந்தித்தபோது அவரை மேல்நோக்கி பார்த்த ட்ரம்ப் இவ்வளவு உயரமா என்று ஆச்சரியப்படும் காட்சிகளும் அதில் இருந்தன. இதே வீடியோ Daily Mail Sport யூட்யூப் தளத்தில் ஷார்ட்ஸ் ஆக பதிவேற்றப்பட்டு இருந்தது.


மேலும் உறுதிப்படுத்துதலுக்கான நமது தேடலில் ட்ரம்பின் சிறப்பு உதவியாளர் மார்கோ மார்ட்டின் வெளியிட்ட அதன் ஒரிஜினல் வீடியோவையும் கண்டெடுத்தோம். வைரல் புகைப்படமும் ஒரிஜினல் வீடியோவும் ஒத்துப்போனது.

ஒரிஜினல் வீடியோவில் ட்ரம்ப் மேஜை மீது சிலை இருப்பதையும் ஆனால் அது பெரியாரின் சிலை இல்லை என்பதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துகொண்டது.


இதனையடுத்து அது யார் சிலை என்பதை அறிய அதனை மட்டும் தனியே கட் செய்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் ஹார்வர்ட் ஆர்ட் மியூசியம் என்ற இணையதளத்தில் ட்ரம்ப் மேசையில் இருந்த சிலை இருப்பதை கண்டுபிடித்தோம். சிலை தொடர்பான குறிப்புகளில், அது பெஞ்சமின் ப்ராங்க்ளின் சிலை என்று இருந்ததையும் தெரிந்துகொண்டோம்.

பெஞ்சமின் ப்ராங்க்ளின் சுதந்திர அமெரிக்காவின் நிறுவனத் தலைவர்களில் ஒருவராவர். விஞ்ஞானியான இவர், இடியில் இருந்து காக்கக்கூடிய இடிதாங்கி உள்ளிட்டவற்றை கண்டுபிடித்துள்ளார். அமெரிக்க டாலர்களிலும் கூட பெஞ்சமின் ப்ராங்க்ளின் புகைப்படம் பொறிக்கப்பட்டுள்ளது.



இந்த ஆதாரங்கள் மூலமாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மேசையில் இருப்பது பெரியார் சிலை அல்ல என்பதை உறுதி செய்துகொண்டோம். பெஞ்சமின் ப்ராங்க்ளின் சிலைக்கு பதிலாக பெரியார் சிலை எடிட் செய்து வைத்து ட்ரம்ப் அலுவலகத்திலேயே பெரியார் சிலை இருப்பதாக பகடியாக பரப்பி வருகின்றனர்.

முடிவு

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அலுவலக மேசையில் இருப்பது பெஞ்சமின் ப்ராங்க்ளின் சிலை என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், பெரியார் சிலை உள்ளதாக எடிட் செய்யப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. ஆகவே, தகவல்களை பகிரும் முன்பு பகுப்பாய்வு செய்த பின்னர் வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மேசையில் பெரியார் சிலை உள்ளதாக வைரல் புகைப்படம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News