கோவையில் புதிதாக திறக்கப்பட்ட மேம்பாலத்தில் வெள்ளமா? - வைரல் வீடியோவின் உண்மை இதோ!
Did Covai GD Naidu flyover Affected in Flood
தமிழகத்தில் கடந்த வாரம் வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில், மாநிலம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது. சென்னை, கோவை என முக்கிய மாநகரங்களிலும் அதிகப்படியான மழைப் பொழிவு இருந்து வருகிறது. இதனால் பல ஊர்களில் சாலைகளில் தண்ணீர் தேங்கும் சம்பவங்களும் நடைபெற்றன. ஆனால், உடனடியாக தேங்கிய இடங்களில் இருந்து தண்ணீரை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதே சமயம் மழை வெள்ளம் என்ற பெயரில் சாலைகளில் தண்ணீர் தேங்கி நிற்கும் பழைய வீடியோக்கள், புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தமிழக அரசின் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
பரவும் தகவல்
கோவையில் அண்மையில் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் சில நாட்களுக்கு பெய்த மழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளதாகக் கூறி சமூக வலைதளங்களில் தமிழக அரசை விமர்சனம் செய்து வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் மேம்பாலத்தில் வெள்ள நீரில் கார், இருசக்கர வாகனங்கள் செல்வதைக் காண முடிந்தது.
வைரல் வீடியோவைப் பகிர்ந்த @Saffron_Anil_ என்ற எக்ஸ் பதிவர், “கோவையில் கட்டப்பட்ட புதிய பாலத்தில் "நீச்சல் குளம்" அமைத்து கொடுத்த திராவிட மாடல் அரசு” என்று கேலி செய்யும் விதமாக பதிவிட்டு இருந்தார்.
இதே வீடியோவை பதிவு 1, பதிவு 2, பதிவு 3 என மேலும் சில சமூக வலைதளப் பக்கங்களிலும் காண முடிந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது தவறான தகவலுடன் பகிரப்படுவது தெரியவந்தது.
வைரல் வீடியோவில் பெரியநாயக்கன் பாளையம் என்று குறிப்பிடப்பட்டு இருந்ததால், முதலில் ஜி.டி.நாயுடு மேம்பாலம் கோவையில் எங்கே உள்ளது என்று தேடலில் இறங்கினோம்.
தமிழ்நாடு அரசு செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை அக்டோபர் 9ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “கோயம்புத்தூர் கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 1791 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கிலோ மீட்டர் நீளம் கொண்ட நான்கு வழித்தட மேம்பாலத்திற்கு ஜி.டி. நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் என்ற கீ வேர்டு துணையுடன் நாம் கூகுளில் சர்ச் செய்தோம். அதில் 2025 மார்ச் 13ஆம் தேதி காமதேனு.காம் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது. அதில் வைரலாகும் வீடியோவின் புகைப்படப் பதிவும் இடம்பெற்றிருந்தது.
செய்தியில், “கோவை மேட்டுப்பாளையம் சாலை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் சார்பில், ரூ.115 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. ராமகிருஷ்ணா வித்யாலயா சந்திப்பில் இருந்து வண்ணான் கோவில் சந்திப்பை இணைக்கும் வகையில் கட்டப்பட்ட இந்த மேம்பாலம் கடந்த 2023-ம் ஆண்டு டிசம்பர் மாதம் திறந்துவைக்கப்பட்டது.
கோவையில் பெய்த மழையின்போது, மேம்பாலத்தின் மேல் பகுதியில் குறிப்பிட்ட தூரத்துக்கு குளம் போல் தண்ணீர் தேங்கியது. இதனால் அவ்வழியாக செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமத்துக்குள்ளாகினர்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
மேலும் நமது தேடலில் கோவை செய்திகள் யூட்யூப் பக்கத்தில் 2025 மார்ச் 12ஆம் தேதி பதிவேற்றப்பட்ட வீடியோவைக் கண்டோம். வைரலாகும் வீடியோவும் அதுவும் ஒன்றுதான் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.
இதன்மூலம் தமிழக அரசால் புதிதாக திறக்கப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலமும், வைரலாகும் வீடியோவில் உள்ள பெரிய நாயக்கன் பாளையம் மேம்பாலமும் வேறு வேறு என்பதை தெளிவாக உறுதி செய்துகொண்டோம்.
வைரல் வீடியோவில் உள்ள பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் தொடர்பாக தேடினோம். இதுதொடர்பாக 2024 மார்ச் 11ஆம் தேதி மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், “நாகப்பட்டினம், கூடலூர்-மைசூர் சாலையில், பெரியநாயக்கன் பாளையம்- கோவைப் புறநகர் பகுதியில் ரூ.99 கோடி செலவில் 1.76 கி.மீ. தூரத்திற்கு கட்டப்பட்ட மேம்பாலத்தையும் பிரதமர் தொடங்கிவைத்தார்” என்று குறிபிடப்பட்டுள்ளது.
இதன்மூலம் பெரியநாயக்கன் பாளையம் மேம்பாலம் தமிழக அரசால் கட்டப்படவில்லை, மத்திய அரசின் கீழ் இயங்கும் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் மூலம் கட்டப்பட்டது என்பதையும் உறுதி செய்தோம்.
முடிவு
தமிழக அரசால் கட்டப்பட்ட ஜி.டி.நாயுடு மேம்பாலத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் அது பெரியநாயக்கன் பாளையத்தில் மத்திய நெடுஞ்சாலை ஆணையத்தால் கட்டப்பட்ட மேம்பாலம் என்பதும், வைரலாவது பழைய வீடியோ என்பதும் தகுந்த ஆதாரங்கள் மூலமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, வாசகர்கள் உண்மைத் தன்மையை சரிபார்த்து தகவல்களை வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.