இந்தியா - பாகிஸ்தான் மோதல் என வைரலாகும் வீடியோக்கள் - உண்மை இதுதான்

இந்தியா பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வரும் நிலையில், அதனை முன்வைத்து பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின்றன. அவற்றின் உண்மைத் தன்மையைக் காண்போம்.

Update: 2025-05-10 13:52 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் ஏப்ரல் 22ஆம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். இதற்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்களை இந்திய ராணுவம் அழித்தொழித்தது. அதே சமயம் ராணுவ நிலைகள் மீது எந்தத் தாக்குதலையும் இந்திய ராணுவம் தொடுக்கவில்லை.

ஆனால், இந்திய ராணுவத்தை குறிவைத்தும், எல்லையோர பகுதிகளை நோக்கியும் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் இரு நாடுகளுக்கு கிடையே போர் பதற்றம் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதே சமயம் இரு நாடுகளுக்கு இடையேயான மோதல்களை முன்வைத்து பல்வேறு வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகின்றன. அவற்றில் பெரும்பாலானவை போலி வீடியோக்களாகவும், பழைய வீடியோக்களாகவும் உள்ளன. Telugu Post உண்மை கண்டறியும் குழு அதனை சரிபார்த்து உண்மையை தந்து வருகிறது.

பரவும் தகவல்


பதிவு - 1

Kavitha Suresh என்ற எக்ஸ் பதிவர், பாகிஸ்தானின் அவாக்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட நேரடி வீடியோ என்று ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். Satheesh என்ற எக்ஸ் பதிவரும் இதே வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.

பதிவு 3

கராச்சி துறைமுகத்தை இந்திய கடற்படை தாக்கி அழித்ததாக இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய பதிவுகளில் வீடியோ வெளியாகியுள்ளது. 

உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோக்கள் குறித்து TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு நடத்திய ஆய்வில் அவை வெவ்வேறு சம்பவங்களுடன் தொடர்புடையவை மற்றும் கேம் வீடியோ என்பது தெரியவந்துள்ளது.

பதிவு 1

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மையை அறிய முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் Compared Comparison என்ற யூட்யூப் சேனல் ஏப்ரல் 9, 2025 அன்று வெளியிட்ட ஷார்ட்ஸ் வீடியோ நமக்கு கிடைத்தது. வைரல் வீடியோவும், யூட்யூபில் உள்ள் வீடியோவும் ஒன்றுதான் என்பதையும், அதே சமயம் இந்த வீடியோ பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலை முன் வைத்து இந்தியா - பாகிஸ்தான் மோதல் ஏற்படுவதற்கு முன்பே வெளியானது என்பதையும் TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்து கொண்டது.


வீடியோவின் விளக்கப் பகுதியில் (Description), “இது ArmA3 கேமை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படைப்பு. நான் இங்கு போரை நியாயப்படுத்த வரவில்லை, நான் வெறுமனே ஒரு தீவிர கேம் விளையாட்டாளர். இந்த வீடியோக்களை உருவாக்குவது எனக்கு மிகவும் பிடிக்கும். ArmA 3 இன் யதார்த்தமான கிராபிக்ஸ் அதை கிட்டத்தட்ட நிஜ வாழ்க்கையைப் போலவே உணர வைக்கிறது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் அவாக்ஸ் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதா என்பதை அறிய கூகுளில் அதுதொடர்பான செய்திகள் வந்துள்ளதா என சர்ச் செய்தோம். டைம்ஸ் நவ், இந்தியா டுடே ஆகிய ஊடகங்கள் பாகிஸ்தான் போர் விமானம் அவாகஸ்ஸை சுட்டு வீழ்த்திய இந்தியா என்ற தலைப்பில் வெளியிட்ட செய்தி நமக்கு கிடைத்தது.

அதில், “இந்தியாவின் பதிலடி தாக்குதலில் பாகிஸ்தானின் மிகவும் மேம்பட்ட கண்காணிப்பு விமானங்களில் ஒன்றான AWACS சுட்டு வீழ்த்தப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் AWACS செயல்படும் விதம் குறித்தும் இரண்டு செய்திகளிலும் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. ஆனால், AWACS விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது தொடர்பான நேரடி வீடியோக்கள் எதுவும் நமக்கு கிடைக்கவில்லை. இதன்மூலம் வைரலாகும் வீடியோ கேம் வீடியோ என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

பதிவு 2

வைரல் வீடியோவை சரிபார்க்க அதன் கீ ப்ரேம்களை ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் ஆபரேஷன் சிந்தூர் என பதிவிடப்பட்ட வீடியோக்களுக்கு மத்தியில் சில மாதங்களுக்கு முன்பும் இதே வீடியோ வெளியாகி இருப்பதை கண்டறிந்தோம்.

குறிப்பாக Palestine International Broadcast என்ற பேஸ்புக் பக்கத்தில், “இது பூகம்பம் அல்ல, ஆனால் வடக்கு காசாவில் உள்ள ஜபாலியா அகதிகள் முகாமை இஸ்ரேல் அழித்த வீடியோ” என்று குறிப்பிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியிடப்பட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. இதன்மூலம் இது பழைய வீடியோ என்பதை உறுதி செய்தோம்.




மேலும் உறுதிப்படுத்துதலுக்காக வைரல் வீடியோவில் உள்ள dn_osama என்ற எழுத்தை எடுத்து கூகுளில் சர்ச் செய்தோம். OSAMA A RABEA என்பவரின் இன்ஸ்டாகிராம் ஐடி கிடைத்தது. அவர் தனது பயோவில் வடக்கு காசாவைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் என்று தன்னை குறிப்பிட்டுள்ளார். வைரல் வீடியோவை அவர் 2025 ஜனவரி 23ஆம் தேதி Jabalia Camp Part 2 என்று குறிப்பிட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

Jabalia Camp என்ற கீ வேர்டு துணையுடன் நாம் தேடியபோது ஜனவரி 19ஆம் தேதி ராய்ட்டர்ஸ் வெளியிட்ட வீடியோ ஒன்று கிடைத்தது. அதில் காசா போர் நிறுத்தத்திற்குப் பிறகு ஜபாலியா முகாம் இடிந்து கிடைப்பதை ட்ரோன் காட்சிகள் காட்டுகின்றன என்று குறிப்பிட்டுள்ளது.

Full Viewஇந்த ஆதாரங்கள் வாயிலாக வைரலாகும் வீடியோ இந்தியா - பாகிஸ்தான் போர் தொடர்புடையது அல்ல, அது காசாவுடன் தொடர்புடையது என்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்தது.

பதிவு 3

வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். ஈரானைச் சேர்ந்த Khosro K Isfahani என்ற எக்ஸ் பயனர் ஏப்ரல் 28ஆம் தேதி இதே வீடியோவை வெளியிட்டிருப்பதை கண்டோம். அதில், ஈரான் துறைமுக குண்டுவெடிப்புக்குப் பிறகு எடுக்கப்பட்ட ட்ரோன் காட்சிகள் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.

வீடியோவில் 'noghtezan_info' என்ற வாட்டர் மார்க் இருந்த நிலையில், அதனை சர்ச் செய்தபோது அதே பெயரிலான இன்ஸ்டாகிராம் கணக்கில் ஏப்ரல் 28ஆம் தேதி வைரல் வீடியோ வெளியாகி இருந்ததைக் கண்டோம். அதில் பெர்சியன் மொழியில், “ஷாஹித் ராஜீ துறைமுகத்தில் வெடிப்பு நடந்த இடத்தின் மையப் பகுதியிலிருந்து பிரத்யேக வீடியோ” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

சமீபத்தில் ஈரான் துறைமுகத்தின் ஏதேனும் விபத்து நடந்துள்ளதா என்று கூகுளில் கீ வேர்டுகள் துணையுடன் சர்ச் செய்தோம். தி கார்டியன், பிபிசி ஆகியவை முறையே ஏப்ரல் 26 மற்றும் ஏப்ரல் 27 ஆகிய தேதிகளில் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன.

தி கார்டியன் செய்தியில், “ஈரான் துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய வெடிப்பில் குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 700 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். துறைமுகத்தில் கொள்கலன்களில் இருந்த ரசாயனங்கள் வெடித்ததால் இந்த சம்பவம் நடந்துள்ளது என்றூ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிபிசி செய்தியில், “ஈரானிய துறைமுகத்தில் ஏற்பட்ட மிகப்பெரிய குண்டுவெடிப்பில் 28 பேர் பலி, 800 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவித்துள்ளது. இந்த ஆதாரங்கள் மூலம் வைரல் வீடியோ ஈரானுடன் தொடர்புடையது என்பது தெரியவந்தது.

அதே சமயம் கராச்சி துறைமுக அறக்கட்டளை நேற்று வெளியிட்ட வீடியோவில், “துறைமுக செயல்பாடுகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன” என்று தெரிவித்துள்ளது.


 



இந்த ஆதாரங்கள் மூலம் வைரலாகும் வீடியோ ஈரான் துறைமுகத்தில் நடந்த வெடிப்பு சம்பவம் என்பதையும், இந்தியா பாகிஸ்தான் மோதல் தொடர்புடையது அல்ல என்பதையும் TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதிப்படுத்தியது.

முடிவு

ஈரான், காசா உள்ளிட்ட இடங்களில் நடந்த சம்பவங்களையும், கேம் வீடியோவையும் இந்தியா - பாகிஸ்தான் மோதல் என்று தவறாகக் குறிப்பிட்டு வீடியோக்கள் வைரலாகி வருவது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடுமாறு Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  இந்தியா - பாகிஸ்தான் மோதல் என பரவும் வீடியோக்கள்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News