சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தாரா?

இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்ததாக தவறான தகவலுடன் டீப்பேக் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Update: 2026-03-15 12:51 GMT


 


ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையே போர் கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி தொடங்கியது. ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் தாக்குதல் தொடுத்து வருகிறது. பதிலுக்கு அமெரிக்காவின் படைத்தளங்கள் அமைந்துள்ள வளைகுடா நாடுகளை ஈரான் தாக்கி வருகிறது. அதேபோல ஈரான் கட்டுப்பாட்டில் உள்ள ஹார்மூஸ் நீரிணை வழியாக எந்த எண்ணெய் கப்பலையும் அனுமதிக்க மாட்டோம் என ஈரான் எச்சரித்துள்ளது.

இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வரத்து என்பது ஹார்மூஸ் நீரிணை வழியாகவே பெரும்பாலும் வந்தது. ஆனால், ஈரான் அச்சுறுத்தல் காரணமாக எண்ணெய் கப்பல்கள் ஹார்மூஸ் நீரிணையை கடக்கவில்லை. இதனால் இந்தியாவுக்கு எரிவாயு வரத்து குறைந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பகுதிகள் வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் பெட்ரோல் பங்குகளில் குவிந்து எரிபொருள் நிரப்பிச் சென்றனர்.

பரவும் தகவல்

மேற்காசிய போர் பதற்றங்களுக்கு மத்தியில் இந்தியாவில் எல்.பி.ஜி. சிலிண்டர் இலவசம் என பிரதமர் மோடி அறிவித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் வீடியோவில், “எனது சகோதர சகோதரிகளே, மார்ச் 12 ஆம் தேதி முதல் நிலவி வரும் எரிவாயு சிலிண்டர் பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, நமது அரசு ஒரு குறிப்பிடத்தக்க அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த முறை, உஜ்வாலா யோஜனாவின் கீழ், அனைவருக்கும் இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும்” என பிரதமர் மோடி இந்தியில் பேசுகிறார்.

வைரல் வீடியோவை வெளியிட்டு “Free LPG Cylinder" என்ற கேப்ஷனுடன் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டன. பதிவு 1, பதிவு 2, பதிவு 3.

Full View

Full View

உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்த TeluguPost உண்மை கண்டறியும் குழு சரிபார்த்தலில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. வைரலாவது ஏஐ ஆடியோ சேர்க்கப்பட்ட டீப்பேக் வீடியோ என்பதும், பிரதமர் மோடி அவ்வாறு எந்த இடத்திலும் பேசவில்லை என்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது.

முதலில் பிரதமர் மோடி சமீபத்தில் இலவச சிலிண்டர் வழங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டாரா என்பது குறித்து Free LPG Cylinder, PM Modi Anounced Free LPG Cylinder போன்ற கீ வேர்டுகளை பயன்படுத்தி தேடினோம். மத்திய அரசோ அல்லது மத்திய பெட்ரோலிய அமைச்சகமோ, பிஐபியோ அதுகுறித்து எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்பதை உறுதிசெய்துகொண்டோம்.



இதனையடுத்து பிரதமர் மோடி பேசிய வைரல் வீடியோ எப்போது எடுக்கப்பட்டது என்பதை அறிய அதன் முக்கிய பிரேம்களை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறையில் தேடினோம். அதில் பிரதமரின் அதிகாரப்பூர்வ யூட்யூப் பக்கத்தில் 2019ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. அதில் உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூரில், பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனா திட்டத்தை துவக்கி வைத்து, பிரதமர் மோடி ஆற்றிய உரை என்ற தலைப்பிடப்பட்டு இருந்தது. வைரல் வீடியோ மற்றும் இந்த வீடியோவில் பிரதமர் மோடி ஒரே உடை, பேச்சில் ஒரே பாவனையுடன் இருப்பதை நாம் கவனித்தோம்.

Full View

வீடியோவை நாம் கூர்ந்து கவனித்தபோது அதில் விவசாயம் சார்ந்த திட்டங்கள் பற்றியும், விவசாயிகள் குறித்துமே பிரதமர் மோடி பேசுகிறார். சிலிண்டர் பற்றி எந்த இடத்திலும் பேசவில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்.


இதே வீடியோ சன்சத், சிஎன்என் டிவி18 அதே நாளில் வெளியிட்டுள்ள வீடியோக்கள் வாயிலாக உறுதி செய்துகொண்டோம். ஆகவே, வீடியோ 7 ஆண்டுகள் பழையது என்பதை நாம் கண்டுபிடித்தோம்.

வைரல் வீடியோவில் உள்ள பேச்சு பிரதமர் மோடியின் குரல் போல் இல்லை மற்றும் உதடு அசைவுகளும் பொருந்திப் போகவில்லை என்பதை கண்டுபிடித்தோம். வீடியோவில் உள்ள ஆடியோ செயற்கையாக சேர்க்கப்பட்டதாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்ததால், ஏஐ சரிபார்ப்பு கருவிகளைப் பயன்படுத்தினோம்.


hive moderation ஏ.ஐ தளத்தில் வீடியோவை உள்ளிட்டபோது அது 94.8 சதவீதம் ஏ.ஐ.யால் உருவாக்கப்பட்ட ஆடியோவாக இருக்க வாய்ப்புள்ளதாக நமக்கு முடிவைத் தந்தது. அதேபோல resemble.ai பக்கமும் அது போலியாக இருக்க வாய்ப்புள்ளதாகவே முடிவைத் தந்தது. ஆகவே, பிரதமர் மோடி பேசியது போல ஏ.ஐ மூலம் ஆடியோவை உருவாக்கி போலியாக சிலிண்டர் இலவசம் என வீடியோவை பரப்பி வருகிறார்கள் என்பது தெரியவந்தது.


முடிவு

சிலிண்டர் இலவசம் என பிரதமர் மோடி பேசியதாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் பிரதமர் மோடி 7 ஆண்டுகளுக்கு முன்பு பேசிய நிகழ்வின் வீடியோவில் ஏ.ஐ மூலம் ஆடியோவைச் சேர்த்து பொய்யாக பரப்பி வருகிறார்கள் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  மக்களுக்கு இலவச சிலிண்டர் வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்தார்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News