விமான நிலையத்தில் விஜய் கைப்பையில் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதா?
விமான நிலையத்தில் விஜய் கைப்பையில் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக தவறான தகவல் பகிரப்படுகிறது.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகத்தை கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனது சட்டமன்ற தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார். 2025 செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் விஜய் கலந்துகொண்ட பரப்புரையில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தமிழகத்தை தாண்டி இந்தியாவையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இதுதொடர்பான வழக்கை சி.பி.ஐ விசாரித்து வருகிறது.
ஏற்கனவே கரூர் நெரிசல் உயிரிழப்புகள் வழக்கில் டெல்லியில் வைத்து சி.பி.ஐ விஜய்யிடம் இரண்டு முறை விசாரணை நடத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து 3வது முறை மார்ச் 15ஆம் தேதி ஆஜராக விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட்டது. இதனை ஏற்று மார்ச் 14ம் தேதி மாலை தனி விமானம் மூலம் விஜய் டெல்லிக்கு புறப்பட்டுச் சென்றார்.
பரவும் தகவல்
விஜய் சென்ற தனி விமானத்தில் அபாயகரமான பொருள் இருந்ததால் 40 நிமிடங்கள் தாமதமாக சென்றதாக ஒரு செய்தி புகைப்படத்துடன் வைரலாகி வருகிறது. குறிப்பாக விஜய்யின் கைப்பையில் மதுபாட்டில் இருந்ததால் விமானம் தாமதமாக சென்றதாக பரப்பப்பட்டு வருகிறது. புகைப்படத்தில் கைப்பை அருகே மதுபாட்டில் மற்றும் கத்தரிக் கோல் இருப்பதை கான முடிந்தது.
@gokula15sai என்ற எக்ஸ் பக்கத்தில், “விமான நிலைய சோதனையின் போது, நடிகர் விஜய் பையில் சிக்கிய பொருட்கள்.. மதுவை தவிர்ப்போம்” என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்து இருந்தார்.
வைரல் புகைப்படத்தை பகிர்ந்து மேலும் பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் கருத்து பகிரப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து சரிபார்த்தபோது அது ஏ.ஐ மூலம் உருவாக்கப்பட்ட புகைப்படம் என்பது தெரியவந்தது. உண்மையில் விஜய்யிடம் மதுபாட்டில் எதுவும் பறிமுதல் செய்யப்படவில்லை, அதில் இருந்தது கத்தரிக் கோல் மட்டும்தான்.
முதலில் விஜய் விமானம் ஏன் தாமதம் என்பது தொடர்பாக கூகுளில் சர்ச் செய்தோம். மார்ச் 14ஆம் தேதி தினத்தந்தி வெளியிட்ட செய்தியில், “சென்னை விமான நிலையம் வந்த விஜய் இடம் விமான நிலையத்தில் பாதுகாப்புப்பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்புப் படையினர் சோதனை நடத்தினர். அப்போது விஜய் கொண்டுவந்த பையில் கத்தரிக்கோள் இருந்ததை பாதுகாப்புப்படையினர் கண்டுபிடித்தனர். இதனால் விஜய் தான் செல்லவிருந்த தனிவிமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டார்.
பின்னர், கத்தரிக்கோல் இருப்பதை கவனிக்கவில்லை என்று விஜய் தெரிவித்ததையடுத்து கத்தரிக்கோலை பறிமுதல் செய்த பாதுகாப்புப்படையினர் தீவிர சோதனைக்குப்பின் தனிவிமானத்தில் விஜய்-ஐ அனுமதித்தனர். இதையடுத்து விஜய் தனி விமானத்தில் டெல்லி புறப்பட்டு சென்றார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 தமிழ்நாடு யூட்யூபில் வெளியிட்ட வீடியோவில், “கைப்பையில் இருந்த கத்தரிக் கோல் காரணமாக சென்னை விமான நிலையத்தில் தவெக தலைவர் விஜய் தடுத்து நிறுத்தப்பட்டார். விஜய் கத்தரிக் கோல் கொண்டு வந்ததால் அது தாமதமாக புறப்பட்டுச் சென்றது. கத்தரிக் கோலை உதவியாளரிடம் கொடுத்துவிட்டுச் விஜய் விமானத்தில் ஏறிச் சென்றார்” என்று குறிப்பிட்டார்.
மேலும் சத்தியம், நியூஸ் தமிழ் 24*7 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் விஜய் கத்தரிக்கோல்தான் எடுத்துச் சென்றார் என்பது தெளிவானது.
விஜய் பையில் விஸ்கி பாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக வெளியான தகவலுக்கு தவெக நிர்வாகி சி.டி.ஆர்.நிர்மல்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். வைரல் செய்தியை மறுத்து, “False information. No such incident happened at airport today. இது முற்றிலும் பொய்யான தகவல். இது போன்ற ஒரு சம்பவம் நடைபெறவில்லை” என்று விளக்கம் அளித்துள்ளார்.
விஜய்யின் பொருட்கள் பறிமுதல் என்று எந்த செய்தியும் வெளியாகாத நிலையில், வைரலாகும் புகைப்படம் போலியானதாக இருக்கலாம் என சந்தேகித்தோம். இதனையடுத்து hive moderation உண்மை சரிபார்ப்பு இணையதளத்தில் புகைப்படத்தில் உள்ளிட்டோம். அதில், வைரல் புகைப்படம் 99.9 சதவீதம் ஏஐ மூலம் தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என்ற முடிவைத் தந்தது. இதனையடுத்து, வைரல் புகைப்படம் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது என தெளிவாக தெரிந்துகொண்டோம்.
முடிவு
விஜய் கைப்பையில் மதுபாட்டில் பறிமுதல் செய்யப்பட்டதாக பரவும் புகைப்படம் ஏ.ஐ. மூலம் உருவாக்கப்பட்டது. உண்மையில் விஜய் கைப்பையில் இருந்து கத்தரிக் கோல் மட்டும்தான் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி Telugupost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.