திமுக மாநாட்டில் உதயநிதியை புறக்கணித்தாரா அமைச்சர் கே.என்.நேரு?

திமுக மாநாட்டில் உதயநிதி அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்ததாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது

Update: 2026-03-13 16:51 GMT

திமுகவிலும் அரசில் தமிழ்நாடு அரசிலும் சரி முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து அதிகாரம் பொருந்திய நபராக உதயநிதி இருந்து வருகிறார். உதயநிதி திமுக இளைஞரணிச் செயலாளராகவும், துணை முதல்வராகவும் பதவி வகிக்கிறார். இந்த சூழலில் திமுகவின் மாநில மாநாடு மார்ச் 9ஆம் தேதி திருச்சியில் நடைபெற்றது. மாநாட்டில் திமுகவின் முக்கியத் தலைவர்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

மாநாட்டை பிரமாண்டமாக ஏற்பாடு செய்தவர் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர் கே.என்.நேரு. 200 ஏக்கர் பரப்பளவில் 2 லட்சம் இருக்கைகள் வரை போடப்பட்டன. மேடை முகப்பும் பிரமாண்டமாக அமைக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காரில் இருந்து வந்து இறங்கியவுடன் 500 மீட்டர் வரை நடைமேடையில் ரேம்ப் வாக் சென்று தொண்டர்களை உற்சாகப்படுத்தினார்.

பரவும் தகவல்

திருச்சி மாநாட்டில் உதயநிதிக்கு சால்வை அணிவிக்காமல் அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்துவிட்டதாக ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. வீடியோவில் அமைச்சர் பொன்முடிக்கு சால்வை அணிவிக்கும் கே.என்.நேரு, அடுத்ததாக நின்றுகொண்டிருக்கும் உதயநிதியை கண்டுகொள்ளாமல் ஆ.ராசாவுக்கு சால்வை அணிவிப்பது போல இருந்தது.

GowriSankarD_ என்ற எக்ஸ் பதிவர், வைரல் வீடியோவைப் பகிர்ந்து, “உதயநிதிக்கு சால்வை அணிவிக்காமல் புறக்கணித்த கே என் நேரு” என்று கேலியாக பதிவிட்டு இருந்தார்.

இதேபோன்ற சமூக வலைதளப் பதிவுகளுடன் இணைப்பு 1, இணைப்பு 2 வீடியோ வைரலானது.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய சரிபார்ப்பில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் முதல்வருக்குப் பிறகு உதயநிதிக்கே கே.என்.நேரு சால்வை அணிவித்துள்ளார்.

முதலில் திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் செய்திகள் யூட்யூப் சேனலில் திமுக மாநில மாநாட்டின் நேரலையை முழுமையாக பார்த்தோம். அதில் 41 வது நிமிடத்தில் அமைச்சர் அன்பில் மகேஸ் உதயநிதிக்கு செங்கோல் தருகிறார். உடனே அமைச்சர் கே.என்.நேரு உதயநிதிக்கு சால்வையை அணிவிக்கிறார். அதன்பிறகு மு.க.ஸ்டாலின், உதயநிதி ஆகியோருக்கு அமைச்சர் கே.என்.நேரு வீரவாள் பரிசளிக்கிறார். இருவரும் அதனை உயர்த்தி பிடித்த காட்சிகளும் இருந்தன.



 

அதன்பிறகு துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, திருச்சி சிவா, ஆ.ராசா என ஒவ்வொருவருக்காக கே.என்.நேரு சால்வை அணிவித்தார். அப்போது மூத்தவர்களுக்கு சால்வை அணிவிப்பதால் அங்கு அமர்ந்திருந்த உதயநிதியும் மரியாதை நிமித்தமாக எழுந்து நிற்பதைக் காண முடிந்தது.

Full View

இதேபோல சன் நியூஸ், நியூஸ் தமிழ் ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட வீடியோவைப் பார்த்தபோது அதே காட்சிகள் இடம்பெற்றிருந்தன.இதேபோல பாலிமர் செய்தி நிறுவனம் உதயநிதிக்கு செங்கோல் அளிப்பதை தனியாகவே வீடியோவாக பதிவிட்டுள்ளது.



இதேபோல முதல்வர், துணை முதல்வர் இருவருக்கும்.. செங்கோல், வாள் கொடுத்த கே.என்.நேரு, அன்பில் மகேஸ் என புதிய தலைமுறை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ பகிர்ந்துள்ளது.

மேலும் உதயநிதி வீரவாள், சால்வையுடன் இருக்கும் புகைப்படத்தை கே.என்.நேரு தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “வரும் தேர்தலில் நாம் பெறப்போகும் வரலாற்று வெற்றியை நம் தலைவர் கரங்களில் ஒப்படைப்போம். வரலாற்றில் இடம் பிடித்த நம் கழகத்தின் 12 - வது மாநில மாநாட்டை நடத்த உறுதுணையாக இருந்த ஒவ்வொருவருக்கும் மீண்டும் என் நன்றியை உரித்தாக்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஆதாரங்கள் வாயிலாக துணை முதலமைச்சர் உதயநிதியை அமைச்சர் கே.என்.நேரு புறக்கணிக்கவில்லை என்பது தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுத்து உதயநிதியை நேரு புறக்கணித்ததாக தவறான தகவல் பகிரப்பட்டு வருகிறது.


முடிவு

உதயநிதி ஸ்டாலினை அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்ததாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் உதயநிதிக்கு சால்வை, வீரவாள், செங்கோலை வழங்கியுள்ளார் கே.என்.நேரு. ஆனால், வீடியோவின் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி தவறாக பரப்பி வருகிறார்கள். ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  திமுக மாநாட்டில் உதயநிதியை அமைச்சர் கே.என்.நேரு புறக்கணித்ததாக பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News