குழந்தையுடன் பைக்கில் சென்ற தம்பதிக்கு போலீஸ் அபராதம் விதித்ததா?
குழந்தையுடன் பைக்கில் வந்த தம்பதிக்கு போலீஸ் அபராதம் விதித்த வீடியோ தற்போது எடுக்கப்பட்டது அல்ல, 6 ஆண்டுகள் பழைய வீடியோ.
தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என எதிர்க்கட்சிகள் தொடர்ச்சியாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆனால், சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்பட்டு தமிழகம் அமைதிப் பூங்காவாக திகழ்வதாகவும், மற்ற மாநிலங்களை விட குற்றங்கள் குறைவாகவே நடப்பதாகவும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.
அதே சமயம் நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் பதிவாவதாகவும் காவல் துறை சரியாக செயல்படவில்லை என்றும் தமிழக அரசை விமர்சனம் செய்கின்றன. குறிப்பாக கொலை, கொள்ளை போன்ற பெரிய சம்பவங்களை தடுக்காத காவல் துறை எளிய மக்கள் மீது தங்களது அதிகாரத்தை செலுத்துவதாகவும் குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. குற்றச் சம்பவங்கள் தொடர்பான வீடியோக்கள், சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் குழந்தையுடன் பைக்கில் வந்ததற்காக போலீசார் அபராதம் விதித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
வீடியோவை பதிவிட்ட இந்திராணி சுடலைமுத்து என்ற (Archived Post) எக்ஸ் பதிவர், “கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்...இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா இந்த காவல் துறை” என்று கேள்வி எழுப்பி விமர்சனம் செய்தார்.
கவுரி சங்கர் என்ற எக்ஸ் பயனர், குழந்தையை அழ வைத்து பெற்றோர்களை அவமானம் செய்வது தான் காவல் துறையின் பணியா? என்று கேள்வி எழுப்பி வீடியோவைப் பகிர்ந்தார்.
கொலை, கொள்ளை, பாலியல் குற்றம் செய்பவன், கள்ளச்சாராயம் காய்ச்சிபவனை எல்லாம் இந்த காவல்துறை விட்டுடுது, குழந்தையை எங்க போயி விட்டுட்டு போணும் சார்...
— Gowri Sankar D - Say Yes to Women Safety&AIADMK (@GowriSankarD_) May 14, 2025 Archived
இதே கேள்வியை அதிகாரத்தில் இருக்கும் எவனிடமாவது கேட்குமா இந்த காவல் துறை...
குழந்தையை அழ வைத்து பெற்றோர்களை அவமானம் செய்வது தான்… pic.twitter.com/v8YxnNJQmd
மேலும் சில சமூக ஊடக பக்கங்களிலும் இதே கருத்துடன் வைரல் வீடியோ பகிரப்பட்டு இருந்தது. இணைப்பு 1 (Archived), இணைப்பு 2 (Archived), இணைப்பு 3 (Archived)
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது பழைய வீடியோ என்பது தெரியவந்துள்ளது.
முதலில் வைரல் வீடியோவின் கீ ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் இதே வீடியோ ஆறு ஆண்டுகளுக்கு முன்பே வெளியாகி இருப்பதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு கண்டறிந்தது.
2019ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி Oneindia Tamil தனது பேஸ்புக் பக்கத்தில் வைரலாகும் அதே வீடியோவைப் பதிவிட்டுள்ளது. அத்துடன், “சிதம்பரம் நகரில் இரு சக்கர வாகனத்தில் கணவன், மனைவி மற்றும் குழந்தையுடன் வந்தவரை சிதம்பரம் நகர போலீசார் தடுத்து நிறுத்தி வழக்குப் பதிவு செய்தனர். பைக்கில் வந்த குடும்பத்தினர் போலீசாரிடம் குழந்தைகளை காண்பித்து கெஞ்சியும் மனம் இரங்காத போலீசார்.
உதவி ஆய்வாளர் மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் மட்டுமே ஸ்வைப் மெஷினை பயன்படுத்தி அபராதம் விதிக்க வேண்டும் என்ற விதி இருந்தும் அந்த விதியையும் மீறி போலீசார் நடத்திய இந்த வாக்குவாத வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளது
இதுகுறித்த நமது தேடலில் 2019ஆம் ஆண்டு வெளியான மேலும் சில செய்தி அறிக்கைகள் கிடைத்தன. ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் வைரல் வீடியோவில் இடம்பெற்ற முழு உரையாடலையும் எழுத்தாக்கம் செய்து வெளியிட்டுள்ளனர்.
விகடன் இணையதள செய்தி அறிக்கையின்படி, பெண் மற்றும் குழந்தைகளுடன் வருபவர்களை நாங்கள் பெரும்பாலும் நிறுத்துவதே இல்லை. எப்படி இருப்பினும் அவர்களிடம் போலீஸார் இப்படி நடந்துகொண்டிருக்கக் கூடாது என சிதம்பரம் டிஎஸ்பி கூறும் கருத்து இடம்பெற்றுள்ளது.
மின்னம்பலம்.காம் வெளியிட்ட செய்தியில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய சப்- இன்ஸ்பெக்டர் வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோரை கடலூர் ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி உத்தரவிட்டுள்ளார் என்று குறிப்பிட்டதோடு சம்பவம் குறித்து விரிவாக விளக்கியுள்ளது. ஆகவே, பழைய வீடியோ தற்போது வைரலாவதை TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்துகொண்டது.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து சிதம்பரம் அமைந்துள்ள கடலூர் மாவட்ட போலீசார் மே 15ஆம் தேதி ஒரு விளக்கத்தை அளித்துள்ளனர். அதில், “கடந்த 2019 ஆம் ஆண்டு சிதம்பரம் நகர காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ வேல்முருகன், காவலர் சார்லஸ் ஆகியோர் சிதம்பரம் கஞ்சி தொட்டி முனையில் போக்குவரத்து சரி செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
புவனகிரி பகுதியை சார்ந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் மனைவி மற்றும் இரண்டு மகன்களை ஒரே வாகனத்தில் ஏற்றிக்கொண்டு, 5 கட்ட பைகளை இரு சக்கர வாகனத்தில் மாட்டிக் கொண்டு பேரிகார்டில் வந்து மோதினார். இதுகுறித்து அங்கு பணியில் இருந்த எஸ்ஐ வேல்முருகன் கேட்டபோது எனது குடும்பத்துடன் தான் நான் வருகிறோம் என் பிள்ளைகளை தனியாக வாகனம் வைத்து வர வேண்டுமா என வாக்குவாதம் செய்தனர்.
வீடியோ வைரலான நிலையில் எஸ்ஐ, காவலர் இருவரும் ஆயுதப் படைக்கு உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டு, 15 நாட்கள் ஆயுதப்படையில் பணியாற்றினர். பின்னர் விசாரணை மேற்கொண்டு சிறப்பு எஸ்ஐ வேல்முருகன் பரங்கிப்பேட்டை காவல் நிலையத்துக்கும், காவலர் சார்லஸ் புதுச்சத்திரம் காவல் நிலையத்துக்கும் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
2019 ஆண்டு வைரலான வீடியோவை காவல் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் தற்போது சமூக ஊடகத்தில் தற்போது நடந்தது போல் பதிவு செய்து வருகிறார்கள். இதுதொடர்பாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளது.
முடிவு
குழந்தையுடன் பைக்கில் வந்ததற்காக போலீசார் அபராதம் விதித்ததாக பரவும் வீடியோ 2019ஆம் ஆண்டு வெளியானது. அதனை அண்மையில் நடந்த சம்பவம் போல தவறாகக் குறிப்பிட்டு காவல் துறையை விமர்சித்து பதிவிட்டு வருவது நிரூபணமாகியுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்துவெளியிடுமாறு TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.