உண்மை சரிபார்ப்பு: வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும் என எஸ்.டி.பி.ஐ., தலைவர் கூறவில்லை!
அறநிலையத்துறை வசம் இருக்கும் வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும் என எஸ்டிபிஐ தலைவர் முபாரக் கூறினார் என்று பரவும் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி கார்டு போலியான எனக் கண்டுபிடிக்கப்பட்டது.
வக்ஃப் என்பது இசுலாம் சமயத்தில் மிகவும் மதிக்கத்தக்க, இறைப்பணிக்காக அசையும் அல்லது அசையா சொத்துக்களை நன்கொடையாகக் கொடுப்பதாகும். இதை மீண்டும் உரிமை கோர முடியாது என்பதே முக்கிய கட்டுப்பாடு. இந்த சூழலில், நாடாளுமன்றத்தில் வக்ஃப் திருத்த மசோதா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மசோதாவின் பெயர் "ஒருங்கிணைந்த வக்ஃப் மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு'' சட்டம் (Unified Waqf Management, Empowerment, Efficiency and Development Act (UMEED)) ஆகும்.
இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனவும், மத சுதந்திரத்தை மீறும் செயல் எனவும் எதிர்கட்சிகள் தங்கள் குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் நிலையில், நாடாளுமன்ற கூட்டுக் குழுவிற்கு மசோதா அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் நிலவரம் இப்படி இருக்க, சமூக வலைத்தளங்களில் சிலர் இது தொடர்பான செய்திகளை பரப்பி வருகின்றனர்.
உலாவரும் ஒரு நியூஸ் 18 தமிழ்நாடு சமூக வலைத்தள செய்தி கார்ட்டில், முபாரக் செய்தியாளர் சந்திப்பு என்ற தலைப்பில், “இந்து அறநிலதுறை மற்றும் மடங்கள், கோயில்களால் ஆக்கிரமிப்பில் இருக்கும் வக்ஃ போர்டு நிலங்கள் மீட்க படும் - எஸ்டிபிஐ,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதை பகிர்ந்திருக்கும் ‘அபி ஹிந்து’ எனும் முகநூல் பயனர், “வடக்கனுக ஏன் போட்டு பொளக்குராங்கன்னு இப்ப புரியுதா. UPல வக்போர்ட் கைவசம் இருக்கும் நிலத்தின் மதிப்பு 1 லட்சத்தி 27ஆயிரம் ஏக்கர். சமிபத்தில் யோகி அவர்கள் UP முழுக்க வருவாய்துறை ஆவணங்கள் படி ஆராய்ந்ததில் சட்டப்படி வக்ப் செய்யப்பட்ட நிலம் என்பது வெறும் 7ஆயிரம் ஏக்கர் மட்டும் தான்.
மிச்சம் இருக்கு 1 லட்சத்து 20ஆயிரம் ஏக்கரும் ஆக்கிரமிப்பு!!! எல்லா வரிசையா நோட்டிஸ் குடுக்கப்பட்டிருக்கு!!!! போன வாரம் ஞாயற்று கிழமை 23 ஏக்கர் வக்ப் பள்ளிவாசலோட சேத்து இடிச்சு தள்ளப்பட்டது!!உச்சநீதிமன்றம் வரைக்கு போனாலும் எந்த ஆதாரமும்
இல்லாததால் உச்சநீதிமன்றத்தால் இடிப்பதை தடை செய்ய முடிய வில்லை !!! இதுக்கெல்லாம் என்ன காரணம் டுலுக்கனுக வாய் தான்!!!! #கும்பமேளா நடக்குர இடம் 100ஏக்கர் வக்போர்ட்க்கு சொந்தமானதுன்னு ஒரு '**ய்' சொல்லிச்சு!!! இப்ப 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கரும் ந*கிட்டு போயிருச்சு” என்று பதிவிடப்பட்டிருந்தது.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து Telugupost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், இந்த செய்தியின் உண்மைத் தன்மையை ஆராய, கார்டில் அச்சிடப்பட்ட தகவல்களை நுணுக்கமாக பார்த்தோம். அப்போது, ’அறநிலையத்துறை’-க்கு பதிலாக ‘அறநிலதுறை’ எனவும், ‘வக்ஃப்’ என்ற எழுத்துக்கு பதிலாக ‘வக்ஃ’ என்றும் பிழைகளுடன் எழுதப்பட்டிருந்தது. இதை வைத்து பார்க்கையில், ஒரு முன்னணி செய்தி நிறுவனம் இப்படியான பிழைகளுடன் செய்திகள் தொடர்பான கார்டுகளை வெளியிடாது என்பது தெளிவானது.
அடுத்தக்கட்டமாக, இந்த கார்டு உருவாக்கப்பட்ட நாள் என்று குறிப்பிடப்பட்டிருந்த அதே நாளில் (பிப்ரவரி 12, 2025) நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி நிறுவனம் தங்கள் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த கார்டுகளை எடுத்து சோதனை செய்தோம். அப்போது, பரவும் கார்டுக்கும், நாம் நியூஸ் 18 தமிழ்நாடு எக்ஸ் பக்கத்தில் இருந்து எடுத்த கார்டுக்கும் பெரிய வித்தியாசங்கள் இருந்ததை பார்க்க முடிந்தது. குறிப்பாக, தமிழ் எழுத்துரு நேர்மாறாக இருந்தது. அதேபோல, உண்மையான கார்டில் இருந்த #JUSTIN போன்ற வார்த்தைகளின் அமைவிடம் மாறுபட்டிருந்தது. இதன் அடிப்படையில் இது போலியான கார்டு என்பதை அறிந்துகொள்ள முடிந்தது.
மேலும், நியூஸ் 18 தமிழ்நாடு கார்டின் இலச்சினையில் வேறுபாடு காணமுடிந்தது. இதை சரியாகப் புரிந்துகொள்ள, உண்மையான கார்டும் போலியான கார்டுக்கும் உள்ள வேறுபாடு கீழே உள்ள படத்தில் காட்டப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஆசிரியரியருக்கு இந்த படம் அனுப்பிவைக்கப்பட்டு, உண்மை நிலவரம் கோரப்பட்டது. ஆனால், நிறுவன தரப்பும், இது போலியாகப் பரப்படுகிறது என்பதை உறுதி செய்தது.
எனினும், இதுபோன்று சமீபத்தில் எஸ்டிபிஐ மாநிலத் தலைவர் முபாரக் எதுவும் பேசினாரா என்பதை அறிய, ‘வக்ஃப் சொத்துகள் குறித்து முபாரக் வீடியோ’ என்று தேடினோம். அப்போது அவர் செய்தியாளர்களுக்கு சமீபத்தில் வழங்கிய ஒரு பேட்டி கிடைத்தது. அதையும் முழுமையாகத் தணிக்கை செய்து பார்த்தபோது, இதுபோன்ற எந்த தகவலையும் அவர் பகிரவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையின் முடிவில், அறநிலையத்துறை வசம் இருக்கும் வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும் என எஸ்டிபிஐ தலைவர் முபாரக் கூறினார் என்று பரவும் நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி கார்டு போலியான எனக் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : அறநிலையத்துறை வசம் இருக்கும் வக்ஃப் வாரிய நிலங்கள் மீட்கப்படும் என எஸ்டிபிஐ தலைவர் முபாரக் கூறினார் என்று பரவும் நியூஸ் 18 செய்தி கார்டு.
Claimed By : Social Media Users
Fact Check : Unknown