உண்மை சரிபார்ப்பு: ராமேஸ்வரத்தில் பெருந்தீ விபத்து என உருவாக்கப்பட்ட போலி வீடியோ!
ராமேஸ்வரத்தில் தீ விபத்து ஏற்பட்டு பல உயிரிழப்புகள் பதிவு செய்யப்பட்டதாகப் பரப்படும் காணொளி போலியானது எனவும், செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டது எனவும் கண்டுபிடிக்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் கடல் சார்ந்த பகுதியாகும். இது புண்ணிய திருத்தலங்களை கொண்ட இடமாகவும் உள்ளது. இங்கு மறைந்த குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் சமாதியும் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. உள்நாடு, வெளிநாடு என உலகம் முழுவதிலும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் ஆண்டுதோறும் இங்கு வருவதுண்டு. இப்படி சிறப்பு வாய்ந்த இந்த இடத்தில் பெருந்தீ ஏற்பட்டதாக காணொளி ஒன்று இணையதளத்தில் அதிகம் பகிரப்படுகிறது.
குறிப்பாக, யூடியூப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் என பிரபல சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ உலாவி வருகிறது. அந்த வீடியோவில் சில தகவல்களும் இடம்பெற்றுள்ளன. அதில், “ராமேஸ்வரம் கோயில் அருகே பெரிய விபத்து ஏற்பட்டது. 4,500-க்கும் அதிகமான வீடுகள் தீ-க்கு இரையாகி சாம்பலாகின. இந்த சம்பவத்தில் 9,300 பேர் உயிரிழந்தனர்,” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முக்கியமாக இந்தி மொழியில் தகவல்கள் எழுதப்பட்டிருந்தது. அதை, கூகுள் லென்ஸ் உதவியுடன் மொழிபெயர்ப்பு செய்து பார்த்தபோது, “தமிழகத்தின் ராமேஸ்வர் கோவில் அருகே நடந்த சோக சம்பவம். நான்காயிரத்து ஐநூறு வீடுகளுக்கு மேல் எரிந்து சாம்பலாகின. ஒன்பதாயிரத்து முந்நூறு பேர் இறந்தனர்,” என்று முடிவுகள் காட்டின.
அந்த வீடியோவில், பல வீடுகளில் தீப்பற்றி எரிவதும், அதை ஹெலிகாப்டர்கள் உதவியுடன் நீர் பீய்ச்சியடித்து அணைப்பதும், மக்கள் அங்கும் இங்குமாக ஓடுவதும் போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பெரும் விபத்து போல் சித்தரிக்கப்பட்ட இந்த வீடியோவின் உண்மை தன்மை குறித்து பல இணையவாசிகளும் கேள்விகளை முன்வைத்து வருகின்றனர்.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில், இந்த காணொளியின் தகவல்களை ஆய்வு செய்ய திட்டமிட்டோம். இன்விட் (InVid) தளத்தின் வாயிலாக, இதன் உண்மை தன்மை சோதனை செய்யப்பட்டது. அப்போது, சரியான முடிவுகளை கிடைக்கவில்லை. இதனையடுத்து, இதே தோற்றத்துடன் வேறு ஏதேனும் காணொளிகள் உலா வருகின்றனவா என தணிக்கை செய்தோம்.
கூகுள் ரிவர்ஸ் இமேஜ் வாயிலாக இந்த காணொளியின் ஸ்கிரீன்ஷாட் அடிப்படையில் தேடினோம். அப்போது, இதே காணொளி, பலத் தளங்களில் பல நபர்களால் வெவ்வேறு தகவல்களுடன் கண்டுபிடிக்கப்பட்டது. அப்படியென்றால், இது ராமேஸ்வரத்தில் எடுக்கப்பட்ட வீடியோ அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும், வீடியோவின் ஒவ்வொரு ஃபிரேமுகளை நுணுக்கமாக ஆராய்ந்தோம். அப்போது, அதில் ஓடும் நபர்களை தனியாக சோதித்து பார்த்தபோதும், மேலே பறக்கும் ஹெலிகாப்டர்களை தனியாக சோதனை செய்து பார்த்த போதும், அது செயற்கை நுண்ணறிவு (AI) உதவியுடன் தயாரிக்கப்பட்ட காணொளி என்பது தெரியவந்தது.
மேலும், அரசுத் தரப்பிலோ, பிற செய்தித் தளங்களிலோ ராமேஸ்வரத்தில் தீ விபத்து நடந்ததாக ஏதேனும் தகவல்கள் உள்ளதா என்பதை ஆராய, ‘ராமேஸ்வரம் தீ’ என்ற வாக்கியத்துடன் கூகுள், பிங், யாஹூ இணைய உலாவல் தளங்களில் சோதனை மேற்கொண்டோம்.
அப்போது, ராமேஸ்வரத்தில் தீ தொடர்பான செய்தி ஒன்று வெப் துனியாவில் (Web Dunia) 2024-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் பதிவு செய்யப்பட்டிருந்தது. அதிலும், “ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் புதுக்கோட்டை அருகே சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென புகை போக்கியில் தீ விபத்து ஏற்பட்டதாகவும், எஞ்சின் புகை போக்கியில் உள்ள டியூப் வெடித்ததால் இந்த தீ விபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இந்த தீ விபத்து குறித்து, தகவல் கிடைத்தவுடன் தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைத்ததாகவும், இதனை அடுத்து மாற்று எஞ்சின் வரவழைக்கப்பட்டு, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரயில் மீண்டும் புறப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
ரயில் இன்ஜினில் ஏற்பட்ட தீ விபத்தால், ரயில் டிரைவருக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும், பயணிகளுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்று கூறப்பட்டாலும், பயணிகள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது,” என்று கூறப்பட்டிருந்தது.
முடிவு:
கிடைத்த தகவல்களின் அடிப்படையில், ராமேஸ்வரத்தில் எந்த தீ விபத்தும் ஏற்படவில்லை என்பதும், பகிரப்படும் காணொளி செயற்கை நுண்ணறிவு உதவியுடன் தயாரிக்கப்பட்டது எனவும், பல ஆண்டுகளாக பல தகவல்களுடன் இந்த காணொளி பரவி வருவதும் கண்டுபிடிக்கப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : ராமேஸ்வரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 4,500 வீடுகள் கருகி, 9,300 உயிரிந்தனர்.
Claimed By : Social Media Users
Fact Check : Unknown