ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக வைரலாகும் வீடியோ - உண்மை என்ன தெரியுமா?
நடிகர் ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததால் தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது.
நடிகர் ரஜினிகாந்த் 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தின் முக்கியமான பொது நபராக வலம் வந்து கொண்டுள்ளார். இவருக்கு தமிழகம் மட்டுமின்றி தென் மாநிலங்களிலும், ஜப்பான் உள்ளிட்ட நாடுகளிலும் பின் தொடர்வோர் இருக்கிறார்கள். ரஜினிகாந்த் பல ஆண்டுகளாக கட்சி தொடங்குவார் என்று எதிர்பார்ப்பு இருந்தது. இதற்காக 2017ஆம் ஆண்டு ரஜினி மக்கள் மன்றத்தைத் தொடங்கிய ரஜினிகாந்த், கொரோனாவைக் காரணம் காட்டி கட்சித் தொடங்குவதைத் தவிர்த்தார்.
இதனிடையே ரஜினிகாந்துக்கு உடல்நலனிலும் பிரச்னை ஏற்பட்டது. சிறுநீரகப் பிரச்னை ஏற்பட்டதால் 2016ஆம் ஆண்டு வெளிநாடு சென்று சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையும் மேற்கொண்டு வந்தார். சமீப காலமாக தனது வயத்திற்குரிய கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்கிறார். மற்ற நேரங்களில் வீட்டில் இருந்தபடி ஓய்வு எடுத்து வருகிறார். அதே சமயம் உடல்நலனை பேணும் பொருட்டு தினமும் நடைபயிற்சி உள்ளிட்டவற்றை மேற்கொண்டு வருகிறார்.
பரவும் தகவல்
நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் நடந்து சென்றபோது வழுக்கி விழுந்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், தலையில் வெள்ளை நிற முடி, டி ஷர்ட் மற்றும் ஷார்ட் அணிந்த ஒருவர் நடந்து செல்லும்போது கீழே இடறி விழும் காட்சிகள் உள்ளன. இந்த வீடியோவைப் பகிர்ந்த பலரும், “கவனமாக இருங்கள் ரஜினிகாந்த் சார்” என்று கருத்துப் பகிர்ந்திருந்தனர்.
அவற்றை பதிவு 1, பதிவு 2, பதிவு 3, பதிவு 4 ஆகிய சமூக வலைதள இணைப்புகளில் நாம் காணலாம்.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், அது ரஜினிகாந்த் இல்லை என்பது தெரியவந்தது.
வைரல் வீடியோவில் பாலிமர் தொலைக்காட்சியின் லோகோ இருந்ததால், அதன் சமூக வலைதளப் பக்கங்களை நாம் ஸ்கேன் செய்தோம். அதில், அப்படியான எந்த வீடியோவும் பகிரப்படவில்லை என்பதை உறுதி செய்தோம். மேலும் இதுதொடர்பாக
இதனையடுத்து வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை புகைப்படங்களாக மாற்றி கூகுள் லென்ஸில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் கர்நாடகாவைச் சேர்ந்த எழுத்தாளர் ராஜாராம் தள்ளூர் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜூலை 24ஆம் தேதி இந்த வீடியோவை வெளியிட்டு இருப்பதை கண்டறிந்தோம்.
வீடியோவைப் பகிர்ந்து, “வழக்கம் போல இன்று காலை செய்தித் தாளை எடுக்கச் சென்றேன். பத்திரிகையை கையில் எடுத்து வரும் போது கால் வழுக்கி கீழே விழுந்துவிட்டேன். இது எங்கள் வீட்டு சிசிடிவி கேமராவில் பதிவான காட்சி” என்று ராஜாராம் தள்ளூர் குறிப்பிட்டு இருந்தார்.
Full View
இந்த வீடியோவை வைத்து ரஜினிகாந்த் வழுக்கி விழுந்ததாக ஊடகங்களில் செய்திகள் வெளியான நிலையில், அதற்கு ராஜராம் தள்ளூர் விளக்கம் அளித்து ஜூலை 30ஆம் தேதி மற்றொரு பதிவையும் வெளியிட்டுள்ளார். அதில், “எனது வீடியோவை சினிமா நடிகர் ரஜினிகாந்த் வீட்டில் கீழே விழுந்தார் என்று கூறி சில விஷமிகள் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். இது வைரலான நிலையில், எனது நண்பர்கள் கவனத்திற்கு கொண்டு வந்தனர். ஆகவே, ஊடகங்கள் பொறுப்புடன் செய்திகளை வெளியிட வேண்டும்” என்று அவர் வலியுறுத்தினார்.
Full View
மேலும் நமது தேடலில் ரஜினிகாந்த் நலமுடன் இருப்பதாகவும், வைரல் வீடியோவில் இருப்பது அவர் இல்லை என்றும் டைம்ஸ் ஆப் இந்தியா, தினத்தந்தி ஆகிய ஊடகங்கள் வெளியிட்ட செய்திகள் கிடைத்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா வெளியிட்ட செய்தியில், “வைரல் வீடியோவில் இருப்பவர் ரஜினிகாந்த் அல்ல வீடியோவில் அந்த நபரின் முகம் தெளிவாகத் தெரியாததால் ஏற்பட்ட குழப்பம் இது ரஜினிகாந்த் தற்போது நலமாக இருப்பதாகக் கூலிப் படக்குழுவில் இருந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.
தினத்தந்தி செய்தி அறிக்கையின்படி, ரஜினிகாந்த் வழுக்கி விழுந்த செய்தி அவரது ரசிகர்களை கவலை அடையச் செய்தது. ஆனால், வீடியோவில் இருப்பது ரஜினிகாந்த் அல்ல என்று கூலி படக்குழு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த ஆதாரங்கள் மூலமாக ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
நடிகர் ரஜினிகாந்த் தனது வீட்டில் வழுக்கி விழுந்ததாக தவறான தகவலுடன் வீடியோ வைரலாகி வருகிறது. உண்மையில் வைரல் வீடியோவில் இருப்பது கர்நாடகாவைச் சேர்ந்த மூத்த எழுத்தாளர் ராஜாராம் தள்ளூரி. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.