உண்மை சரிபார்ப்பு: பகிரப்படும் கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறு வழிச்சாலை புகைப்படம் உண்மையா?

கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறு வழி விரைவுச்சாலை என்று கூறப்படும் ஒரு பிரம்மாண்ட பாலங்கள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

Update: 2025-01-19 10:35 GMT


 இந்தியாவில் பல இடங்களில் புதிய விரைவு சாலைகள் அமைக்கும் திட்டங்களை அரசு மேற்கொண்டு வருகிறது. தமிழ்நாட்டிலும் மக்கள் வேகமாக சிரமமின்றி பயணம் செய்யும் வகையில் சாலை விரிவாக்கத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நேரத்தில் இணையத்தில் ஒரு புகைப்படத்துடன் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. அதில் சஹானா சபரி மஹீதா (Sahana Sabari Maheetha) என்பவர் தனது முகநூல் பக்கத்தில் அற்புதமான இந்த நீண்ட சாலை என்று தொடங்கும் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.





அவர் அந்த பதிவில், "அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை. நமது இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் இடையிலான ஆறுவழி விரைவுச்சாலை தான்!!! நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான சாலை ரோடு மாமாந்தூர் தொழில்துறை புறநகர் பகுதியான அரியபெருமானூர் மற்றும் புதிய புறநகர் பகுதியான கிரேட்டர் மூரார்பாளையம் இணைக்கும் 25 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுவழி விரைவுச்சாலை ஆகும்!!!," என்று குறிப்பிட்டு வளைந்து நெழிந்து செல்லும் குறிப்பிட்ட இந்த மேம்பாலத்தின் புகைப்படத்தையும் இணைத்துள்ளார்.

எனவே, இப்படியான திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்துகிறதா, இந்த புகைப்படத்தில் காட்டப்படும் மாதிரி சாலை குறிப்பிட்ட வழித்தடத்திற்காக அனுமதி வழங்கப்பட்டதா என்பது குறித்து நமது குழு ஆய்வு மேற்கொண்டது.

உண்மை சரிபார்ப்பு:

முதலில் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளதா என்பதை அறிய, அரசு இணையதளங்கள் மற்றும் கூகுள் உலாவி வழியாக தணிக்கை மேற்கொண்டோம். அப்போது, இப்படி ஒரு பிரம்மாண்ட சாலைத் திட்டத்திற்கான எந்த சாத்தியக்கூறுகளும் அரசு சார்ந்த தளங்கள் அல்லது முன்னணி செய்தி நிறுவன தரவுகளில் தென்படவில்லை. அப்படி என்றால் பகிரப்படும் புகைப்படம் என்ன என்பதை அறியவும், இந்த புகைப்படம் எங்கிருந்து பெறப்பட்டது என்பதை அறியவும், இமேஜ் சர்ச் முறைப்படி தணிக்கை செய்தோம்.

அப்படி செய்கையில், முக்கியமான தரவுகள் நம் தணிக்கைக் குழுவிற்குக் கிடைத்தது. அதில் இதே புகைப்படத்தை டெல்லியில் உள்ள நொய்டா - கிரேட்டர் நெய்டா இடையிலான ஆறு வழி விரைவுச்சாலை என குறிப்பிட்டு சிலர் பரப்பி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலாவதாக, இராம ஸ்ரீநிவாஸன் எனும் முகநூல் பயனர், "அற்புதமான இந்த நீண்ட சாலை அமெரிக்கா இல்லை. நமது இந்தியாவில் டெல்லியில் உள்ள நொய்டா - கிரேட்டர் நொய்டா இடையிலான ஆறு வழி விரைவுச்சாலை தான்!!! நடுநடுவே இணைப்பு சாலைகள் கொண்ட இந்த அழகான சாலை டெல்லியின் தொழில்துறை புறநகர் பகுதியான நொய்டா மற்றும் புதிய புறநகர் பகுதியான கிரேட்டர் நொய்டாவை இணைக்கும் 25 கிலோமீட்டர் நீளம் கொண்ட ஆறுவழி விரைவுச்சாலை ஆகும்!!!," என்று பதிவிட்டு இதற்கு ஏற்றாற்போல பல ஹேஷ்டேக்குகளையும் இணைத்துள்ளார்.




அப்படியென்றால் இது டெல்லியில் வரவிருக்கும் சாலைத் திட்டமா என்பதை அறிய இணையத் தணிக்கை மேற்கொண்டோம். அப்போது, இது டெல்லி - அமிர்தசரஸ் - கட்ரா பசுமை விரைவுச்சாலை என்று இதே புகைப்படத்தைப் பதிவிட்டு சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருக்கிறது. 




அதெப்படி, ஒரே மாதிரி புகைப்படம் இத்தனை இடங்களில் பகிரப்படுகிறது என கூடுதலாக சோதனை செய்து பார்க்கையில், உலகளவில் இதே புகைப்படத்தைப் பயன்படுத்தி பலர் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருவது கண்டுபிடிக்கப்பட்டது.


குறிப்பாக, 'Waze Malaysia' எனும் முகநூல் பக்கத்தில், 2023 டிசம்பர் 23-ஆம் தேதி வெளியிடப்பட்ட பதிவில், இது அந்நாட்டில் போடப்பட்ட சாலை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனாலும், இது வெறும் நகைச்சுவை நோக்கில் பதியப்பட்டது என்பது மொழிபெயர்ப்பு வாயிலாக புலப்பட்டது. 




 எனவே, இது பல ஆண்டுகளாக பரப்படும் கணினியால் உருவாக்கப்பட்ட ஒரு புகைப்படம் அல்லது செயற்கை நுண்ணறிவு பயன்படுத்தி உருவாக்கப்பட்டது என்பது தெளிவாகிறது.

முடிவு: மக்கள் தங்களுக்கு விருப்பமான அரசுகளுக்கு ஆதரவு திரட்டும் வகையில், இதுபோன்ற புகைப்படங்களை வெளியிட்டு 'இந்த அரசின் திட்டங்களைப் பாருங்கள்' எனும் தொனியில் இதுபோன்ற புகைப்படங்களை மாற்றி மாற்றி பகிர்ந்து வருவது நமது தணிக்கையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எந்த சூழலிலும், பகிரப்படும் புகைப்படத்தில் உள்ளது போன்ற சாலைத் திட்டங்கள் இந்தியாவிலோ, தமிழ்நாட்டிலோ தற்போது செயல்படுத்தப்படவில்லை என்பது உறுதியாகியுள்ளது. எனவே, தவறான தகவல்களை பரப்பும் முன், அதை பலமுறை தணிக்கை செய்யும்படி TeluguPost Fact Check குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  கள்ளக்குறிச்சி - சங்கராபுரம் ஆறு வழி விரைவுச்சாலை என்று கூறப்படும் ஒரு பிரம்மாண்ட பாலங்கள் அடங்கிய புகைப்படம் இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
Claimed By :  Social Media
Fact Check :  Unknown
Tags:    

Similar News