தமிழகத்தில் சார் பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக பரவும் வீடியோ- உண்மை என்ன?
தமிழகத்தில் சார் பதிவாளர் லஞ்சம் வாங்குவதாக பரவும் வீடியோ தவறானது. அது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் நடந்தது.
தமிழகத்தில் பத்திரப் பதிவுத் துறையின் கீழ் 587 சார் பதிவாளர் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. வீடு, காலி மனை, விவசாய நிலம் உள்ளிட்ட சொத்துக்களை வாங்கவும், விற்பதற்கும் தினந்தோறும் பத்திரப் பதிவுகள் நடந்து கொண்டிருக்கின்றன. திருமணப் பதிவுகளும் சார் பதிவாளர் அலுவலகத்தில் தான் நடைபெறுகின்றன. இதனால் சார் பதிவாளர் அலுவலகங்களில் நாள்தோறும் அதிகப்படியான கூட்டங்கள் கூடுவது வழக்கமாக உள்ளது.
பணம் புழங்கும் துறை என்பதால் பத்திரப் பதிவுத் துறையில் முறைகேடுகளும் நடைபெற்று வருகின்றன. குறிப்பிட்ட சொத்துப் பதிவுக்கு ஒரு தொகையை முறைகேடாக அதிகாரிகளுக்கு லஞ்சமாக தந்தால்தான் அந்த சொத்தை பதிவு செய்ய முடிவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன. லஞ்சம் வாங்கிக் கொண்டு முறைகேடாக பத்திரப் பதிவு செய்து கொடுத்த சார் பதிவாளர் மற்றும் அதிகாரிகள் கைது, இடைநீக்கம் என்ற செய்திகள் நாளிதழ்களில் வந்த வண்ணம் தான் உள்ளன.
பரவும் தகவல்
தமிழகத்தில் பத்திரபதிவு துறை அதிகாரி ஒருவர் கழிவறையில் வைத்து லஞ்ச வாங்கியதாக வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 1.07 நிமிடம் கொண்ட அந்த வீடியோவில், கழிவறையில் பணத்தை வாங்கிய அதிகாரி ஒருவர் அங்கேயே அதனை எண்ணிப் பார்க்கிறார்.
இதனைப் பகிர்ந்த வே.ரா.பா.சுகுமார் பிள்ளை என்ற எக்ஸ் பதிவர், “ அதிகார நாய் 😅 ஒன்று கழிவறையில்லஞ்சம் வாங்கும் வீடியோ ! 🤣 வைரலாகி வருகிறது” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்தார். அதில் லஞ்சம், கொள்ளை, ஊழல், கடனில் முதலிடம் திராவிட மாடல் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
Archive
Full View
இதே வீடியோவை இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் வைரல் வீடியோ வெளியாகி இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை கூகுள் லென்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் சரிபார்த்தோம். அதில் கடந்த ஜூன் 20ஆம் தேதி Vikatan EMagazine பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவுக்கு நம்மை அழைத்துச் சென்றது. அதில், “புதுச்சேரி பத்திரப்பதிவுத் துறை அதிகாரி ஒருவர் கழிவறையில் லஞ்சம் வாங்கும் வீடியோ வைரல்” என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு இருந்தது.
Full View
இதேபோல ஒன் இந்தியா தமிழ் ஊடகமும், “புதுச்சேரி சாரம் பகுதியில் மாவட்ட பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளராக பணிபுரியும் ஸ்ரீகாந்த் என்பவர் திருத்தலுடன் பத்திர பதிவு செய்ய வாலிபரை கழிவறைக்கு அழைத்துச் சென்று லஞ்சம் வாங்கிய வீடியோ தற்போது இணையத்தில் பரவி வருகிறது” என்று குறிப்பிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளது.
Full View
இதனை உறுதிப்படுத்துவதற்காக புதுச்சேரி அதிகாரி லஞ்சம் உள்ளிட்ட கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ், தி இந்து, நக்கீரன் ஆகிய இணையதளங்கள் வெளியிட்ட செய்திகள் TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு கிடைத்தன.
இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்தியில், “ஒரு பத்திரம் பதிவு செய்வதற்கு புதுச்சேரி சாரம் பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் உள்ள கழிவறையில் சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் லஞ்சம் வாங்கியுள்ளார். லஞ்சம் கொடுப்பதை சம்மந்தப் பட்டவர்கள் மறைமுகமாக வீடியோ எடுத்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமுக வலைதளங்களில் வைரலாகி வருகிறது, இதனை தொடர்ந்து சார் பதிவாளர் ஸ்ரீகாந்த் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தி இந்து வெளியிட்ட செய்தியில், “ ஸ்ரீகாந்த் ₹10,000 லஞ்சம் வாங்கியதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. விஜிலென்ஸ் பிரிவைச் சேர்ந்த ஒரு அதிகாரி, குற்றம் சாட்டப்பட்டவர்களை ஸ்ரீகாந்த் மற்றும் பாஸ்கரன் என்று அடையாளம் காட்டினார். அவர்கள் மீது மாவட்டப் பதிவாளர் அளித்த புகாரைத் தொடர்ந்து ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நக்கீரன் வெளியிட்ட செய்தியில், “பாத்ரூமில் வைத்து லஞ்சம் வாங்கிய ஸ்ரீகாந்தை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட ஆட்சியர் குலோத்தமன் உத்தரவிட்டுள்ளார்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலம் லஞ்சம் வாங்கிய சம்பவம் நடந்தது தமிழகத்தில் அல்ல, புதுச்சேரி மாநிலத்தில் என்பதும், ஆனால் தமிழகத்தில் நடந்தது எனக் கூறி தமிழ்நாடு அரசை தவறாக விமர்சனம் செய்கிறார்கள் என்பதையும் தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்தோம்.
முடிவு
தமிழ்நாட்டில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அதிகாரி லஞ்சம் வாங்கியதாக தவறான தகவலுடன் வீடியோ பரவி வருகிறது. அது நடந்தது புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.