திமுக முன்னாள் அமைச்சர் பொன்முடி பெண்களை அண்மையில் ஒருமையில் பேசினாரா?

திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவி கிடைத்த பிறகு பொன்முடி பெண்களை ஒருமையில் பேசியதாக தவறான தகவல் பகிரப்படுகிறது.

Update: 2025-11-11 07:51 GMT

தமிழக அரசியல்வாதிகளில் முக்கியமானவர் முன்னாள் அமைச்சர் பொன்முடி. கடந்த 30 வருடங்களில் திமுக தலைமையிலான அமைச்சரவையில் போக்குவரத்து, உயர்கல்வி, வனம் என முக்கிய துறைகளை வகித்துள்ளார். பொன்முடி மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்த வழக்குகளும் நிலுவையில் உள்ளன. அதே சமயம் கடந்த காலங்களில் பொன்முடி பேசியவை கடும் சர்ச்சைகளை ஏற்படுத்தி எதிர்ப்புகளை உண்டாக்கின.

2025 ஏப்ரல் மாதம் பெண்களுக்கு எதிரான சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்குப் பிறகு பொன்முடி திமுக துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து உடனடியாக நீக்கப்பட்டார். பின்னர் வனத் துறை அமைச்சர் பதவியையும் ராஜினாமா செய்தார். கடந்த வாரம் பொன்முடிக்கு மீண்டும் துணைப் பொதுச் செயலாளர் பதவியை வழங்கியது திமுக.

பரவும் தகவல்

இந்த நிலையில் பொன்முடி மீண்டும் பெண்களிடம் அலட்சியமாக ஒருமையில் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதாவது, திமுக துணைப் பொதுச் செயலாளராக கடந்த வாரம் நியமிக்கப்பட்ட பிறகு, இவ்வாறு பேசியதாக வீடியோ பகிரப்பட்டு வருகிறது.

அதில், “தக்காளி கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்ட்டாலும், பெண்களுக்கு ரூ.1000 ரூபாய் தமிழக அரசு தருகிறதே? அது மகிழ்ச்சிதானே? தக்காளி விலை உயர்வு குறித்து மோடியிடம் கேளு” என்று பொன்முடி பெண்களிடம் பேசுவதைக் காண முடிந்தது.


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில் அது இரண்டு ஆண்டுகள் பழைய வீடியோ என்பதும், அண்மையில் பொன்முடி பேசியது போல அது பகிரப்படுகிறது என்பதும் தெரியவந்தது.

முதலில் அண்மையில் பெண்கள் குறித்து பொன்முடி ஏதாவது பேசியுள்ளாரா என்று நாம் தேடியபோது அதுபோன்ற எந்த செய்தி அறிக்கைகளும் நமக்கு கிடைக்கவில்லை.

இதனையடுத்து வைரல் வீடியோவை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தியபோது, 2023ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதி பிபிசி நியூஸ் தமிழ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது. வைரலாகும் வீடியோ மற்றும் பிபிசி வீடியோவை ஒப்பிட்டு பார்த்தபோது இரண்டும் ஒரே சமயத்தில் எடுக்கப்பட்டவை என்பதைக் கண்டுபிடித்தோம்.


மேலும் தக்காளி விலை, பொன்முடி உள்ளிட்ட கீ வேர்டுகள் உதவியுடன் TeluguPost உண்மை கண்டறியும் குழு கூகுளில் தேடியது. அதே 2023 ஜூலை 26ஆம் தேதி ஏபிபி நாடு இணையதளப் பக்கத்தில் அதுகுறித்த செய்தி வெளியாகி இருந்தது.

அதில், “மகளிர் உரிமை தொகை முகாமில் அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டபோது தக்காளி விலை உயர்வு குறித்து கேள்வி கேட்ட பெண்ணிடம், மோடியிடம் போய் கேளுங்கள் நாங்கள் ஆயிரம் ரூபாய் கொடுக்கிறோமே அது மகிழ்ச்சி இல்லையா என தெரிவித்தது சலசலப்பை ஏற்படுத்தியது” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.




இடிவி பாரத் இணையதளத்தில், “ஏற்கனவே அமைச்சர் பொன்முடி பொதுமக்களை மரியாதை இன்றி ஒருமையில் பேசியது சர்ச்சை ஆகி இருந்தது. மேலும், நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி ஒன்றில் பெண் ஒருவரை குறிப்பிட்டு நீ அந்த சாதியைச் சேர்ந்தவர்தானே என கேட்டார். அந்த விவகாரமும் சர்ச்சையாகி இருந்தது. தற்போது தக்காளி விலையை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த பெண்ணை “நீ மோடியிடம் போய் கேளு” என கூறியது மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளது.


 




மேலும் அதே வீடியோ பாலிமர், நியூஸ் 18 தமிழ்நாடு, தந்தி தொலைக்காட்சிகளும் 2023ஆம் ஆண்டே பகிரப்பட்டு உள்ளது.

இந்த ஆதாரங்கள் வாயிலாக பொன்முடி பெண்களை விமர்சித்து பேசிய வீடியோ அண்மையில் எடுக்கப்பட்டது அல்ல, இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் வைரலானது என TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

முடிவு

பொன்முடி பெண்களிடம் அண்மையில் ஒருமையில் பேசியதாக தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. 2023ஆம் ஆண்டு பொன்முடி அமைச்சராக இருந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ, அண்மையில் எடுக்கப்பட்டது என பரப்பப்படுகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிட TeluguPost உண்மை கண்டறியும் குழு வாசகர்களை கேட்டுக்கொள்கிறது.

Claim :  முன்னாள் அமைச்சர் பொன்முடி அண்மையில் பெண்களை ஒருமையில் பேசியதாக வீடியோ வைரல்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News