தமிழகத்தில் கால்வாய் முழுவதும் குப்பையாக மிதந்து வருவதாக பரவும் வீடியோ - உண்மை என்ன?
கால்வாய் முழுவதும் குப்பைகள் மிதந்து வருவதாக பரவும் வீடியோ இந்தோனேசியாவில் எடுக்கப்பட்டது.
மேட்டூர் அணையில் இருந்து இந்த ஆண்டு ஜூன் 12ஆம் தேதி குறுவை சாகுபடிக்காக காவிரி டெல்டா பகுதிகளுக்கு தண்ணீர் திறந்துவிடப்பட்டது. தண்ணீர் கடைமடைப் பகுதிகள் வரை சீராக சென்று சேர வேண்டும் என்பதற்காக ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வாய்க்கால்கள் தூர்வாறும் பணி ஏப்ரல் தொடங்கி ஜூன் மாதம் வரை நடைபெற்றது. கடைமடைப் பகுதிகள் வரை தூர்வாறும் பணி முடிந்துவிட்டது என்றும், காவிரி நீர் சீராக கடைமடைப் பகுதிகளுக்கு சென்றுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், தூர்வாறும் பணிகளில் முறைகேடு நடந்ததன் காரணமாக காவிரி கடைமடையில் பல இடங்களுக்கு தண்ணீர் சென்று சேரவில்லை என்றும், இதனால் டெல்டா பகுதி விவசாயிகள் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காவிரி டெல்டாவில் தூர்வாறும் பணிகள் நடக்கவில்லை என்று கூறி வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பரவும் தகவல்
இந்த நிலையில் கால்வாய் ஒன்றில் தண்ணீரோடு சேர்த்து அதிகளவில் பிளாஸ்டிக் கழிவுகள் வருவது போன்ற ஒரு வீடியோ தமிழ்நாட்டில் வைரலாகி வருகிறது. அதில், தண்ணீர் வருவதே தெரியாத அளவுக்கு பிளாஸ்டிக் குப்பை கூளங்கள் மிதந்து வருவதைக் காண முடிந்தது.
வைரல் வீடியோவைப் பகிர்ந்த அகண்ட பாரதம் என்ற எக்ஸ் பயனர், “மலர் தூவி வரவேற்ற காலம்!! போய் இப்படி நாசம் செய்து வரவேற்கிறோம்!! நம் தலைமுறை அப்படியானால் அடுத்த தலைமுறையின் நிலை?” என்று குறிப்பிட்டு வைரல் வீடியோவைப் பகிர்ந்திருந்தார்.
Maha Simha என்ற பதிவரோ, அதிகாரிகளோ, அரசோ இதற்கு காரணம் இல்லை, அசிங்கம் பிடித்த நாம் தான் காரணம், அடுத்த தலைமுறை காக்கும் அருகதை இழந்தோமா என்று குறிப்பிட்டு இருந்ததை காண முடிந்தது.
இதேபோல பதிவு 1, பதிவு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் வைரல் வீடியோவைக் காணலாம். இது தமிழ்நாட்டில் நடந்த சம்பவம் போல பகிரப்பட்டு வருகிறது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தமிழ்நாட்டுடன் தொடர்புடையது அல்ல என்பது உறுதி செய்யப்பட்டது.
முதலில் வைரல் வீடியோவின் முக்கிய ப்ரேம்களை பிரித்தெடுத்து ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில் 2023ஆம் ஆண்டு வெளியான சில வீடியோ, செய்தி இணைப்புகள் நமக்கு கிடைத்தன. Buletin iNews GTV என்ற யூட்யூப் பக்கத்தில் வைரலாகும் அதே வீடியோ 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி வெளியிடப்பட்டுள்ளது.
அதில், “வோனோமுலியோ மாவட்டத்தில் உள்ள நீர்ப்பாசன கால்வாயில் குப்பைகள் 1 கி.மீ நீளத்திற்கு மிதந்து வந்தன. நீர்ப்பாசனத்திற்காக கால்வாய் கதவு திறக்கப்பட்ட பின்னர் இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு வசிக்கும் மக்கள் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைதளங்களில் பதிவிட வைரலாகியுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்பகுதியில் குப்பை கொட்டுவதற்கான இடம் இல்லை என்பதால், ஆறுகளில் குப்பைகளை கொட்டியுள்ளனர். உள்ளூர் அரசு நிர்வாகம் விரைவில் குப்பை கொட்டும் இடத்தை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளதாகவும் அந்த வீடியோவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. இந்த கால்வாய் இந்தோனேசியாவின் மேற்கு சுலவேசி மாகாணத்தில் உள்ள வோனோமுலியோ மாவட்டத்தில் உள்ளது.
Full View
அதே சமயத்தில் dailymotion வெளியிட்ட வீடியோவிலும், இந்த சம்பவம் என்பது இந்தோனேசியாவின் நாட்டின் வோனோமுலியோ மாவட்டத்தில் நடந்துள்ளதையே சுட்டிக்காட்டுகிறது.
polman.inews என்ற செய்தி இணையதளம் வெளியிட்ட செய்தி அறிக்கையின்படி, ஒரு சிறிய கால்வாய் வழியாக குப்பைகள் பெருக்கெடுத்து ஓடுவதை வைரல் வீடியோ காட்டுகிறது. சமூக ஊடகங்களில் பரவி வரும் இந்த வைரல் காணொளி உண்மையில் நடந்த இடம் வோனோமுல்யோ மாவட்டம், பொலேவாலி மந்தர் ரீஜென்சி, மேற்கு சுலவேசி, இந்தோனேஷியா. இங்கு கழிவுகள் டன் கணக்கில் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, கழிவுகள் 1 கிலோ மீட்டருக்கும் அதிகமான நீளத்திற்கு கால்வாயை நிரப்புகின்றன என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
வைரல் வீடியோ தமிழகத்தில் நடந்ததாக பரவியதை அடுத்து தமிழக அரசின் தகவல் சரிபார்ப்பகம் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது. அதில், “இந்தக் காணொளி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டதல்ல. இந்தோனேசியாவின் வோனோமுலியோ மாவட்டத்தில் உள்ள கால்வாயாயின் காட்சி இது. கடந்த 2023ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட இக்காணொளி, தற்போது தமிழ்நாட்டில் பரப்பப்பட்டு வருகிறது. தவறான தகவலைப் பரப்பாதீர்” என்று கேட்டுக்கொண்டுள்ளது.
முடிவு
கால்வாயில் குப்பைகள் அதிகளவில் மிதந்து வருவது போல பரவும் காணொலி தமிழ்நாட்டில் எடுக்கப்பட்டது அல்ல. இந்தோனேஷியா நாட்டில் எடுக்கப்பட்ட காணொலி தமிழகத்தில் நடந்ததாக தவறாக பகிரப்பட்டு வருகிறது என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.