பாகிஸ்தான் கொடியை எரித்து கேரள மக்கள் போராட்டம் என பரவும் வீடியோ உண்மையா?

பாகிஸ்தான் கொடியை எரித்து கேரள மக்கள் போராட்டம் நடத்தியதாக பரவும் வீடியோ தவறானது. அது ஜம்முவில் நடந்த போராட்டம்.

Update: 2025-04-26 06:54 GMT

ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் அப்பாவி சுற்றுலா பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய கொடூர துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் பலியானார்கள். இந்த சம்பவம் நாடு முழுவதும் கொதிப்பை உண்டாக்கியுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட பயங்கரவாதிகளுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும், தீவிரவாதம் மண்ணோடு மண்ணாக்கப்படும் என மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுக்கு எதிராக அதிரடி முடிவுகளை மத்திய அரசு எடுத்துள்ளது. சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து, பாகிஸ்தான் மக்கள் விசா ரத்து, பாகிஸ்தான் மக்கள் உடனே வெளியேற உத்தரவு என அதிரடி காட்டியுள்ளது. ஆனால், தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் தொடர்பில்லை என அந்நாட்டு அரசு தெரிவிக்கிறது.

அதே சமயம் பஹல்காம் சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் உள்பட நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன. தீவிரவாதிகளை நடுரோட்டில் சுட்டுக் கொல்ல வேண்டும் எனவும் போராட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

பரவும் தகவல்

பஹல்காம் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தான் கொடியை எரித்து கேரள மக்கள் போராட்டம் நடத்தியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Karthikeyan Selvakumar (மோடியின் குடும்பம்) என்ற எக்ஸ் பயனர், “பாகிஸ்தான் முஸ்லீம் கொடிகளை எரித்து எதிர்ப்பு தெரிவித்த கேரளா மக்கள்.. பாரத் மாதா கி ஜே” எனக் குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்தார்.

lenin bjp மன்னார்குடி என்ற எக்ஸ் கணக்கிலும் இதே கருத்துடன் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.

மேலும் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் இதே கருத்துடன் வீடியோ பகிரப்பட்டன.

உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய ஆய்வில், தவறான கூற்று பரவுவது கண்டுபிடிக்கப்பட்டது.

வைரல் வீடியோவின் முக்கிய பகுதிகளை ஸ்கிரீன் ஷார்ட் எடுத்து கூகுளில் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அது ஏஎன்ஐ செய்தி ஊடகம் ஏப்ரல் 23ஆம் தேதி வெளியிட்ட செய்திக்கு நம்மை அழைத்துச் சென்றது. அதில், வைரல் வீடியோவில் உள்ள காட்சிகள் 50வது வினாடியில் இருந்து ஒளிபரப்பானது. “பஹல்காம் : ஜம்முவில் டோக்ரா சமூகத்தைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் வீதியில் இறங்கி, பாகிஸ்தான் எதிர்ப்பு கோஷங்களை எழுப்பி, கொடியை எரித்தனர்” என்று அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

Full View


 



கூகுளில் டோக்ரா முன்னணி போராட்டம் என ஆங்கிலத்தில் சர்ச் செய்ததில் tribune india இணையதளத்தில் வெளியான செய்தி TeluguPost உண்மை கண்டறியும் குழுவுக்கு கிடைத்தது. அதில், “பாகிஸ்தானுக்கு எதிராக இந்து அமைப்புகள் ஆவேசமாக போராட்டம் நடத்தின. ஜம்முவில் சிவசேனா மற்றும் டோக்ரா முன்னணி அமைப்பினர் பாகிஸ்தான் கொடிகள் மற்றும் உருவ பொம்மைகளை எரித்து போராட்டம் நடத்தினர். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களை வழிநடத்தியவர்கள் மீது மத்திய அரசு உறுதியான நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.



டோக்ரா முன்னணி தலைவர் அசோக் குப்தா, ‘பயங்கரவாதிகள் இந்து சமூகத்தைச் சேர்ந்தவர்களைத் தேர்ந்தெடுத்து குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இது மத்திய அரசுக்கு ஒரு சவாலாகும். பாகிஸ்தானுக்கு பாடம் கற்பிக்க வேண்டிய நேரம் இது’ என்று தெரிவித்தார்

மேலும் நமது தேடலில் வைரல் வீடியோ தொடர்புடைய வீடியோவை The Print இதழும் தனது யூட்யூப் பக்கத்தில் பதிவு செய்துள்ளதை கண்டோம். அதில் டோக்ரா முன்னணி தலைவர் அசோக் குப்தா, “இந்துக்கள் மிகவும் பலவீனமாகிவிட்டனர். இந்துக்கள் ஒவ்வொருவராகக் கொல்லப்படுகின்றனர். இனியும் நாங்கள் பொறுத்துக்கொள்ளப் போவதில்லை. பாகிஸ்தான் நலிந்தபோதிலும் அவர்களால் நம்மைத் தாக்க முடிகிறது. பாகிஸ்தானை உடைத்து பலுசிஸ்தானுடன் கைகோர்க்க வேண்டிய நேரம் இது. அமித் ஷாவிடமிருந்து நாங்கள் நிறைய எதிர்பார்க்கிறோம்” என்று தெரிவித்தார்.

இதேபோல ரைசிங் இந்தியா, first india news ஆகிய ஊடங்களும் இது ஜம்முவில் நடந்த போராட்டம் தான் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் செய்திகளை வெளியிட்டுள்ளன. அதே சமயம் பாகிஸ்தான் கொடியை எரித்த கேரள மக்கள் என்ற தலைப்பில் சர்ச் செய்தபோது, வைரல் வீடியோவுடன் இணைக்கும் எந்த செய்திகளும் கிடைக்கவில்லை.

இந்த ஆதாரங்கள் மூலம் பாகிஸ்தான் கொடி எதிர்ப்பு போராட்டம் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்றது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.

முடிவு

பாகிஸ்தான் கொடியை எரித்து கேரள மக்கள் போராட்டம் நடத்தியதாக தவறான கருத்துடன் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. உண்மையில் அந்த வீடியோ ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் டோக்ரா முன்னணி நடத்திய போராட்டம் தொடர்புடையது. ஆகவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  பாகிஸ்தான் கொடியை எரித்து கேரள மக்கள் போராட்டம் என பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News