கல்வியை விட பக்திதான் முக்கியம் என எடப்பாடி பழனிசாமி பேசினாரா?
கல்வியை விட பக்தி முக்கியம் என எடப்பாடி பழனிசாமி பேசியதாக பரவும் நியூஸ் கார்டு போலியானது.
தமிழ்நாட்டில் கோயில்களின் நிர்வாகத்தை இந்து சமய அறநிலையத் துறை கவனித்து வருகிறது. ஆனால், இந்துக்களுக்கு எதிரானது திமுக ஆட்சி என்று விமர்சிக்கும் பாஜக உள்ளிட்ட இந்து அமைப்புகள், கோயில்களை அறநிலையத் துறை சரியாக பராமரிக்கவில்லை என்றும், கோயில் நிதியை அதன் வளர்ச்சிக்கு பயன்படுத்தாமல் முறைகேடாகப் பயன்படுத்துவதாகவும் குற்றம்சாட்டி இருந்தது. பாஜக ஆட்சி அமைந்தால் அறநிலையத் துறையிடம் இருந்து கோயில்கள் விடுவிக்கப்பட்டு, அந்த துறை ஒழிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
அதே சமயம் திமுக ஆட்சியில்தான் இந்து சமய அறநிலையத் துறை சிறப்பாக செயல்படுகிறது என்றும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளன, ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு கும்பாபிஷேங்கள் நடைபெற்று வருகின்றன என்று திமுக விளக்கம் அளித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க கோயில் நிதியில் இருந்து அறநிலையத் துறை கல்லூரிகளைத் தொடங்கி வருகிறது.
பரவும் தகவல்
இந்த நிலையில் கல்வியை விட பக்திதான் பெரிது என எடப்பாடி பழனிசாமி பேசியதாக ஒரு நியூஸ் கார்டு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில், “கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாமென்று பெரியவர்கள் சொல்வார்கள். பள்ளி, கல்லூரி கூட இல்லாமல் இருக்கலாம். கல்வியை விட பக்திதான் முக்கியம். இந்து சமய அறநிலையத்துறை கோயில்கள் தான் கட்ட வேண்டும். பள்ளி, கல்லூரிகளை அல்ல” என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனைப் பகிர்ந்த ஜெகதீஷ் கோ என்ற எக்ஸ் பதிவர், “கல்வியை விட பக்திதான் முக்கியம்.. சூப்பர் சித்தப்பு” என்று கமெண்ட் செய்திருந்தார்.
shanmugam chinnaraj (Archive) என்ற எக்ஸ் பதிவரோ, முதல்வர் சொல்லும் வரிசையில் மோடி, அமித்ஷா, கிண்டி ரவி தற்போது பழனிச்சாமியின் பேச்சுகள் மக்களால் வெறுக்கப்படுகின்றன என்றால் அது மிகையல்ல” என்று விமர்சனம் செய்திருந்தார். மேலும் சில சமூக வலைதளப் பக்கங்களிலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 இந்த நியூஸ் கார்டு பகிரப்பட்டு எடப்பாடி பழனிசாமியை கடுமையாக விமர்சனம் செய்திருந்தனர்
உண்மை சரிபார்ப்பு
வைரல் நியூஸ் கார்டின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் முழு விசாரித்த போது அது போலியான நியூஸ் கார்டு என்பது தெரியவந்தது.
முதலில் வைரல் நியூஸ் கார்டு நியூஸ் தமிழ் 24*7 பெயரில் வைரலாகி வருவதால் அதன் சமூக வலைதளப் பக்கங்களைக் ஸ்கேன் செய்தோம். அதில், அதுபோன்ற கருத்துடைய எந்த நியூஸ் கார்டையும் நியூஸ் தமிழ் வெளியிடவில்லை என்பதை TeluguPost உறுதி செய்தது. இதுதொடர்பாக நியூஸ் தமிழ் டிஜிட்டல் பிரிவு பொறுப்பாளர் சீனிவாசனை தொடர்புகொண்டபோது, வைரல் கார்டை தாங்கள் வெளியிடவில்லை என்றும் அது போலியான உருவாக்கப்பட்டுள்ளதை என்பதையும் விளக்கினார்.
இதனையடுத்து, கோயில் மற்றும் கல்லூரிகளை தொடர்புபடுத்தி எடப்பாடி பழனிசாமி ஏதேனும் கருத்து தெரிவித்துள்ளாரா என்பதை தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் தேடினோம். அதிமுகவின் அதிகாரப்பூர்வ செய்தி சேனலான நியூஸ் ஜே ஜூன் 8ஆம் தேதி வெளியிட்ட வீடியோவைக் கண்டோம்.
அதில், “தமிழகம் முழுவதும் அதிமுக ஆட்சியில் அதிகமான கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. ஏழை மற்றும் கிராமப் புற மாணவர்கள் கல்வி கற்க அதிமுக காரணமாக விளங்கியது. ஆனால், திமுக ஆட்சியில் அறநிலையத் துறையின் கோயில் நிதி இருந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல், அதனை எடுத்து கல்லூரிகளை தொடங்கியுள்ளனர். கோயில்களை கண்டாலே திமுகவுக்கு கண்ணை உறுத்துகிறது. கோயிலுக்கு நல்லது செய்ய வேண்டும் என்பதற்காக பக்தர்கள் அளிக்கும் நிதியை எடுத்து கல்லூரி கட்டுகிறார்கள்.இது எந்தவிதத்தில் நியாயம்? ஏன் அரசுப் பணத்தில் கல்லூரி தொடங்க வேண்டியதுதானே? ஆக மக்கள் இதனை ஒரு சதிச் செயலாகவே பார்க்கிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
கோயில் நிதியில் கல்லூரி கட்டுவதற்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்ததை விகடன், தினமணி இணையதளங்கள் வெளியிட்ட செய்தி ஆதாரங்கள் மூலமாக TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
கோயில் நிதியில் கல்லூரி தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பதில் அளித்துள்ளதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. அதில், “மாணவர்கள் நலனுக்காக கல்லூரி கட்டுவதில் என்ன தவறு உள்ளது?” என்று கேள்வி எழுப்பியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எடப்பாடி பழனிசாமியின் பேச்சு சர்ச்சையான நிலையில், அதற்கு விழுப்புரத்தில் விளக்கமும் அளித்துள்ளார். அதில், “அறநிலையத் துறை நிதி எடுத்து கல்லூரிகள் அமைத்தால் மாணவர்களுக்கு தேவையான வசதிகள் முழுவதுமாக கிடைக்காது. அறநிலையத் துறை நிதியில் இருந்து மட்டும்தான் அதற்கு செலவிட முடியும். ஆகவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக கொண்டு வர வேண்டும் என்று நான் சொன்னதற்கு கண், காது, மூக்கு வைத்து இரண்டு நாட்களாக விவாதம் நடக்கிறது” என்று எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்துள்ளார்.
ஆதாரம் : புதிய தலைமுறை, சன் நியூஸ்
மேலும், அதிமுக ஐடி விங் தரப்பில் கவுரி சங்கர், வைரல் கார்டு போலியானது என்பதை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
கல்வியை விட பக்தி முக்கியம் என்றோ, வைரல் நியூஸ் கார்டில் உள்ள வார்த்தைகளையோ எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திலும் பேசவில்லை என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்தது.
முடிவு
கல்வியை விட பக்தி முக்கியம் என எடப்பாடி பழனிசாமி எந்த இடத்திலும் பேசவில்லை. கோயில் நிதியில் கல்லூரி அமைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி பேச்சு அண்மையில் சர்ச்சையானது. அதனையொட்டி எடப்பாடி பழனிசாமி பேசியதாக போலி கார்டு வைரலாகி வருகிறது. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.