நயினாரை சந்தித்த பின் அண்ணாமலையை விமர்சித்தாரா சி.வி.சண்முகம்?

நயினார் நாகேந்திரனை சந்தித்த பிறகு அண்ணாமலையை சி.வி.சண்முகம் விமர்சனம் செய்ததாக பரவும் தகவல் தவறானது.

Update: 2025-06-21 08:19 GMT

சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்வதற்காக அதிமுகவும் பாஜகவும் கடந்த ஏப்ரல் 11ஆம் தேதி கூட்டணி அமைத்தன. கூட்டணி அமைத்ததற்கு அதிமுக வைத்த நிபந்தனை, அண்ணாமலையை தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் என்பதுதான். ஏனெனில் ஜெயலலிதா, அண்ணா குறித்து அண்ணாமலை பேசியதை காரணம் காட்டியே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து 2023ஆம் ஆண்டு அதிமுக விலகியது. இதனால் கூட்டணி அறிவிப்புக்கு சிறிது நேரம் முன்பு பாஜகவின் புதிய மாநிலத் தலைவராக நயினார் நாகேந்திரன் நியமிக்கப்படுவார் என்று அமித்ஷா அறிவித்தார். அதன்பிறகே அதிமுக - பாஜக கூட்டணி அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டது.

ஆனாலும் அதிமுக கூட்டணி குறித்து அண்ணாமலை அண்மையில் பேசியது சர்ச்சையானது. அதாவது, தான் அதிமுக - பாஜக கூட்டணி ஆட்சி என்று சொல்ல மாட்டேன் என்றும், ‘பாஜக ஆட்சி’ என்றுதான் கூறுவேன் எனவும் அவர் கூறியிருந்தார். கூட்டணி ஆட்சி என்ற பாஜகவின் கருத்தையே அதிமுக இன்னும் ஏற்காத நிலையில், பாஜக ஆட்சி என்று அண்ணாமலை சொன்னது கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்தது.

இதற்கு அதிமுக தரப்பில் இருந்து அண்ணாமலை மீது விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. எனினும், அண்ணாமலையின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்து என பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், தமிழிசை சவுந்தரராஜன், வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

பரவும் தகவல்


இந்த நிலையில் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனை நேரில் சந்தித்த பிறகு அண்ணாமலையை அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் விமர்சனம் செய்து பேட்டியளித்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாஜகவில் நயினார் நாகேந்திரன் - அண்ணாமலை இடையே பூசல் நிலவி வருவதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் நயினார் நாகேந்திரன் தூண்டுதலின் பேரில் அண்ணாமலை மீது சி.வி.சண்முகம் விமர்சனம் வைத்ததாக பொருள்படும்படி வீடியோ வைரலாகி வருகிறது.

ASA (சாணக்கியன்) என்ற எக்ஸ் பயனர், “நைனாரை சந்தித்த பின் ஆடு அண்ணாமலையை கழவி ஊற்றிய சரக்கு சண்முகம்” என்று குறிப்பிட்டு வீடியோவைப் பகிர்ந்தார்.

Archive 

செந்தூர் என்ற பேஸ்புக் பயனரும் இதே வீடியோவைப் பகிர்ந்து சி.வி.சண்முகத்தை விமர்சனம் செய்திருந்தார்.



Full View




 உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது பழைய வீடியோ என்பது தெரியவந்தது.

முதலில் நயினார் நாகேந்திரனை சி.வி.சண்முகம் சந்தித்துள்ளாரா என்பது குறித்து பாஜகவின் சமூக வலைதளப் பக்கங்களில் தேடினோம். அதில் மதுரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆலோசனைக் கூட்டத்திற்காக ஜூன் 15ஆம் தேதி நயினார் நாகேந்திரன் விழுப்புரம் சென்றதும், அங்கு அவரை மரியாதை நிமித்தமாக அதிமுக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சந்தித்ததும் தெரியவந்தது.

இதுதொடர்பாக பாஜக தனது சமூக வலைதளப் பக்கத்தில், “இன்று மதியம், முன்னாள் அஇஅதிமுக அமைச்சரும், ராஜ்ய சபா உறுப்பினருமான C.Ve. சண்முகம் அவர்களை சந்தித்ததில் மகிழ்ச்சி- மாநில தலைவர் திரு நயினார் நாகேந்திரன்” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. அதில், வைரலாகும் புகைப்படமும் இடம்பெற்றதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துகொண்டது.


Full View

அண்மையில் அண்ணாமலையை சி.வி.சண்முகம் விமர்சனம் செய்துள்ளாரா என்பது குறித்து தேடினோம். அதில் அப்படியான எந்த தகவல்களும் நமக்கு கிடைக்கவில்லை. வைரல் வீடியோவில் ABP நாடு ஊடகத்தின் லோகோ இருந்ததால், அதன் சமூக வலைதளப் பக்கத்தின் தேடல் பகுதியில் சி.வி.சண்முகம், அண்ணாமலை என்று குறிப்பிட்டு சர்ச் செய்தோம். 2023ஆம் ஆண்டு ஜூன் 13ஆம் தேதி வெளியான வீடியோ நமக்கு கிடைத்தது.

அதில், “ஜெயலலிதா பற்றி பேச அண்ணாமலைக்கு எந்த அருகதையும் கிடையாது. ஊழலைப் பற்றி பேசுவதற்கு எந்த தகுதியும் இல்லாத நபர் அண்ணாமலை. கவுன்சிலராகக் கூட இல்லாத அண்ணாமலை மீது பாஜகவினரே பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளை கூறியுள்ளனர். பிரதமர்கள் வீட்டுக்கே தேடி வந்து சந்தித்த பெருமை உடையவர் ஜெயலலிதா.


ஊழலுக்காக ஒரு தேசியக் கட்சியின் தலைவர் தண்டிக்கப்பட்டார் என்றால் அது பாஜகவின் தலைவர்தான். அதிமுகவுடனான கூட்டணி தொடரும் என்று அமித்ஷாவும், நட்டாவும் கூறியுள்ளனர். அப்போது, அதிமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம் என்று அண்ணாமலை சொல்லியிருக்கலாமே” என்று தெரிவித்தார்.


Full View

சன் நியூஸ், நியூஸ் 18 தமிழ்நாடு, மதிமுகம் யூடியூப் பக்கங்களில் வெளியான வீடியோ வாயிலாகவும் இதனை உறுதி செய்துகொண்டோம்.


இந்த ஆதாரங்கள் மூலமாக நயினார் நாகேந்திரனை சந்தித்த பின்னர் அண்ணாமலையை சி.வி.சண்முகத்தை விமர்சனம் செய்யவில்லை என்பதை TeluguPost உறுதி செய்துகொண்டது.

முடிவு

நயினார் நாகேந்திரனை சந்தித்த பின்னர் அண்ணாமலையை சி.வி.சண்முகம் விமர்சனம் செய்வதாக பரவும் தகவல் தவறானது. வைரலாவது 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் வெளியான பழைய வீடியோ என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்ப்பு பகிரும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  நயினார் நாகேந்திரனை சந்தித்த பிறகு அண்ணாமலையை விமர்சித்த சி.வி.சண்முகம்
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News