கோவையில் பட்டப் பகலில் கத்தி காட்டி வழிப்பறி என பரவும் வீடியோ - உண்மை இதுதான்

கோவை மாவட்டத்தில் பட்டப் பகலில் வழிப்பறி என தற்போது பரவுவது 2022ஆம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ.

Update: 2025-04-23 07:45 GMT

தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளதாகவும், நாள்தோறும் கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமைகள் நடந்து வருவதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் தமிழகத்தில் மற்ற மாநிலங்களை விட சட்டம் - ஒழுங்கு சிறப்பாக பராமரிக்கப்படுவதாக தமிழ்நாடு அரசு விளக்கம் அளித்து வருகிறது.

அதே சமயம் நாள்தோறும் கொலைகள் நடப்பது தொடர்பாக நாளேடுகளில் வரும் செய்திகளை முன்வைத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சனம் செய்கின்றன. அதற்கு, முன் விரோதத்திற்காக செய்யப்படும் கொலைகளை தடுக்க முடியாது என்றும் அதிமுக ஆட்சியில் இருந்ததை விட தற்போது குற்றங்கள் குறைவுதான் என்றும் அமைச்சர்கள் விளக்கம் அளிக்கின்றனர்.

தற்போது சமூக வலைதளங்களின் பயன்பாடு அதிகரித்துவிட்ட நிலையில் கொலை, கொள்ளை, வழிப்பறி தொடர்பான வீடியோக்கள், புகைப்படங்கள் உடனுக்குடன் பரவி நெஞ்சத்தை பதற வைக்கின்றன.

பரவும் தகவல்

கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் வங்கியில் இருந்து வந்த வியாபாரியிடம் பட்ட பகலில் பணம் கொள்ளையடித்துச் சென்றதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் சில நாட்களாக அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அதில் இரு சக்கர வாகனத்தில் வந்தரிடம் கத்தியைக் காட்டி மிரட்டும் சிலர், மக்கள் கூடியதும் அங்கிருந்து தப்பிக்கிறார்கள்.

Joaquin Phoenix என்ற எக்ஸ் பயனர் இந்த வீடியோவை பகிர்ந்து, “பீகாரோ,உத்திரப்பிரதேசமோ இல்ல நம்ம கோவை மேட்டுபாளையம் தான். வங்கியில் இருந்து வந்த வியாபாரியிடம் பட்ட பகலில் இளைஞர்கள் இருவர் பணம் கொள்ளை” என்று தெரிவித்து இருந்தார்.

Virtual_Warriors 4 TN என்ற யூட்யூப் பக்கத்திலும் இதே வீடியோ பகிரப்பட்டு இருந்தது.

Full View

இதே கருத்துடன் இணைப்பு 1, இணைப்பு 2 ஆகிய கணக்குகளிலும் வீடியோ ஷேர் செய்யப்பட்டு இருந்தது.




 


உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகம் எழுந்த நிலையில், அதுகுறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், அது பழைய வீடியோ என்பது தெரியவந்தது.

சமீபத்திய நாட்களில் அதுபோன்ற ஒரு சம்பவம் நடந்தால் பரபரப்பு செய்தியாக மாறி இருக்கும். ஆகவே, கூகுளில் மேட்டுப்பாளையம் வழிப்பறி என்ற கீ வேர்டு துணையுடன் தேடல் நடத்தினோம். அதில், அப்படியான எந்த செய்தியும் வெளியாகவில்லை என்பதை உறுதி செய்துகொண்டோம்.

இதற்கு முன்பு இந்த வீடியோ எங்கேயாவது பகிரப்பட்டுள்ளதா என கூகுள் லென்ஸ் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் மூலம் தேடினோம். Nisar Ahmed Irani என்ற பேஸ்புக் பயனர் இதே வீடியோவை 2022ம் ஆண்டு நவம்பர் 1ஆம் தேதி பகிர்ந்துள்ளதை கண்டறிந்தோம்.

Full View

மேலும் நமது தேடலில் தீக்கதிர் யூட்யூப் பக்கத்தில் அதே நாளில் (2022 நவம்பர் 1) ‘டாஸ்மாக் ஊழியரிடம் கத்திமுனையில் பணம் பறிக்க முயன்ற வழிப்பறி கொள்ளையர்கள்' என்ற தலைப்பில் இதே வீடியோ வெளியாகி இருப்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்தது.

Full View

அதில், “மேட்டுப்பாளையம் - சிறுமுகை பகுதியில் டாஸ்மாக் ஊழியரிடம் கத்தி முனையில் கலெக்‌ஷன் பணத்தை பறிக்க முயற்சித்த இளைஞர்கள். பொதுமக்கள் கூடியதால் வழிப்பறி கொள்ளையர்கள் தப்பி ஓட்டம்” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.

மேலும் டாஸ்மாக் வழிப்பறி, சிறுமுகை வழிப்பறி உள்ளிட்ட கீ வேர்டுகள் துணையுடன் 2022 நவம்பர் மாதம் வெளியான செய்திகளைத் தேடினோம். அதில் நமக்கு சில செய்தி இணைப்புகள் கிடைத்தன.

புதிய தலைமுறை இணையதளம் 2022 நவம்பர் 6ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “அக்டோபர் 31ம் தேதி மதியம் சிறுமுகை டாஸ்மாக் ஊழியர் விஜய் ஆனந்த் என்பவர் கடையின் விற்பனை தொகையான ரூபாய் பத்து லட்சத்தை இந்தியன் வங்கியில் செலுத்த தனது இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார்.


அவரை வழிமறித்த ஒரு கும்பல், அவரது வாகனத்தை மறித்து கீழே சாய்த்துவிட்டு கையில் இருந்த பட்டாக்கத்தியை காட்டி பணத்தை வழிப்பறி செய்ய முயற்சி செய்தது. மக்கள் ஒன்றுகூடியதால் பணத்தை பறிக்க முடியாமல் அக்கும்பல் தங்களது இரு சக்கர வாகனங்களில் தப்பிச்சென்றனர். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதுதொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்” என்று தெரிவித்துள்ளது.

இதேபோல ஏபிபி நாடு வெளியிட்ட செய்தியில், “சிறுமுகை டாஸ்மாக் ஊழியர்களிடம் கத்தியை காட்டி மிரட்டிய வழக்கில் 5 தனிப் படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டதில் 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், ஐவரை கைது செய்துள்ளோம். இவர்கள் மேலும் பல வழக்குகளில் தொடர்பு உள்ளவர்கள் என கோவை எஸ்.பி விளக்கம் அளித்துள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



 


இதுதொடர்பாக தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகமும் விளக்கத்தை அளித்துள்ளது. அதில், "கடந்த 31.10.2022 ஆம் தேதி சிறுமுகை அருகே நடைபெற்ற வழிப்பறி முயற்சி சம்பவத்தினை தற்போது நடைபெற்றதுபோல் சிலர் சமூக வலைத்தளங்களில் தவறாகப் பதிவு செய்து வருகின்றனர். இது தொடர்பாக 2022 ஆம் ஆண்டே வழக்குப் பதிவு செய்யப்பட்டு அனைத்து குற்றவாளிகளும் 24 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்" என்று கோவை மாவட்ட காவல்துறை விளக்கமளித்துள்ளது” என்று தெரிவித்துள்ளது.

நமக்கு கிடைத்த ஆதாரங்கள் மூலமாக சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ, 2022ஆம் ஆண்டு நடந்த வழிப்பறி சம்பவத்தில் தொடர்புடையது, அப்போதே வைரலானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு கண்டுபிடித்துள்ளது. ஆனால், மிக சமீபத்தில் வழிப்பறி நடந்தது போல பரப்பி, தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்ற ரீதியில் விமர்சனம் செய்து வருகிறார்கள்.

முடிவு

கோவை சிறுமுகை வழிப்பறி என சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ 2022 நவம்பர் மாதம் எடுக்கப்பட்ட பழைய வீடியோ என்பது உறுதியானது. ஆனால், தற்போது நடைபெற்ற குற்ற சம்பவம் போல பரப்பி வருகிறார்கள். ஆகவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  சமீபத்தில் கோவை மேட்டுப்பாளையம் வியாபாரியிடம் பட்ட பகலில் வழிப்பறி என பரவும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News