குஜராத் மாநிலத்தில் மிதக்கும் சோலார் பேனல்கள் என பரவும் வீடியோ - உண்மை என்ன?
சீனாவில் உள்ள மிதக்கும் சோலார் பேனல்கள் தொடர்பான வீடியோ, குஜராத் மாநிலம் என்று தவறான தகவலுடன் வைரலாகிறது.
பிரதமர் மோடி 2014ஆம் ஆண்டு முதல்முறையாக பிரதமராக பொறுப்பு ஏற்றார். அதற்கு முன்பாக 2001 முதல் 2014 வரை குஜராத் முதலமைச்சராக பதவி வகித்து வந்தார். 2014 மக்களவைத் தேர்தலில் குஜராத் வளர்ச்சி பெற்றுவிட்டதாக ‘குஜராத் மாடல்’ என்ற பெயரில் முன்வைக்கப்பட்ட பரப்புரை பாஜகவுக்கு வெற்றியைத் தேடித் தந்தது. இதனிடையே 2021ஆம் ஆண்டு தமிழகத்தில் ஆட்சி அமைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட மாடல் முழக்கத்தை முன்வைத்தார்.
கடந்த சில ஆண்டுகளாக பாஜக மற்றும் திமுகவினரிடையே குஜராத் மாடலில் அதிக வளர்ச்சி கிடைத்துள்ளதா அல்லது திராவிட மாடலில் அதிக வளர்ச்சி கிடைத்துள்ளதா என கடுமையான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. அதே சமயம் குஜராத் மாநிலத்தில் நிறைவேற்றப்பட்ட திட்டங்கள் தொடர்பான குஜராத் மாடல் என்ற பெயரில் சமூக வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகின்றன.
பரவும் தகவல்
இந்த நிலையில் குஜராத்தில் மிதக்கும் சோலார் பேனல்கள் திட்டம் என்று ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்துத்துவம் என்ற எக்ஸ் பக்கத்தில், “வளர்ச்சி நோக்கி குஜராத் மாடல். குஜராத்தில் பாஜக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் Floating Solar plant. வருடம் தோறும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அது திராவிட மாடல்” என்று குறிப்பிட்டு வீடியோ பகிரப்பட்டு இருந்தது.
வளர்ச்சி நோக்கி குஜராத் மாடல்!!
— இந்துத்துவம் 🚩 (@VVR_Krish) July 23, 2025
குஜராத்தில் பாஜக அரசு ஏற்ப்படுத்தி இருக்கும் Floating Solar plant...!!
வருடம் தோறும் மின் கட்டணத்தை உயர்த்தினால் அது திராவிட மாடல்..! pic.twitter.com/8nlEc1ywBc
பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக வலைதளப் பக்கங்களிலும் இதே கருத்துடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது.
Full View
உண்மை சரிபார்ப்பு
வைரல் காணொலியின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில் அது சீனாவில் உள்ள சோலார் பேனல் என்படத தெரியவந்தது.
முதலில் வைரல் காணொலியின் முக்கிய ப்ரேம்களை தனித் தனியாக ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். அதில், சீனா அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள China Youth Daily என்ற ஊடகத்தில் அதே வீடியோ ஜூலை 7ஆம் தேதி பதிவேற்றப்பட்டுள்ளதை கண்டுபிடித்தோம்.
அதில், “நீங்கள் பார்க்கும் சோலார் பேனல்கள் சீனாவில் உள்ளவை. சீனா தொடர்ந்து திறமையான, நம்பகமான மற்றும் உலகிற்கு பயனளிக்கும் வகையிலான சூரிய தயாரிப்புகளை வழங்குகிறது, உலகளாவிய பசுமை மாற்றத்திற்கு உத்வேகம் அளிக்கிறது” என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
முன்னதாக இதே வீடியோவை சீன வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் மா நியோங் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜூலை 3ஆம் தேதி இதே வீடியோவை பகிர்ந்து இருப்பதையும் கண்டுபிடித்தோம். அதில், “நகர மின் கட்டமைப்புகள் முதல் கடலோர நீர்நிலைகள் வரை, பசுமையான எதிர்காலத்திற்கு மின்சாரம் வழங்க சீனா சூரியனைப் பயன்படுத்துகிறது” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Full View
இதன்மூலம் வைரலாகும் வீடியோவில் இருப்பது சீனாவில் அமைக்கப்பட்டுள்ள மிதக்கும் சோலார் பேனல்கள் என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
அதே சமயம் இந்தியாவில் இதுபோன்ற மிதக்கும் சோலார் நிலையங்கள் உள்ளதா என்பது குறித்து தொடர்புடைய கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். hartek.com என்ற இணையப் பக்கத்தில் இந்தியாவில் உள்ள மிதக்கும் சோலார் நிலையங்கள் குறித்த பட்டியலை வெளியிட்டுள்ளது. அதன்படி, தெலங்கானா மாநிலம் ராமகுண்டம் (100 மெகாவாட்), கேரளா மாநிலம் காயங்குளம் (92 மெகாவாட்), உத்தரபிரதேச மாநிலம் ரிஹாண்ட், சண்டிகர், ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் அருகேயுள்ள சிம்ஹாத்ரி ஆகிய இடங்களில் மிதக்கும் சோலார் நிலையங்கள் உள்ளன.
மேலும் நமது தேடலில் 2022ஆம் ஆண்டு மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு நமக்கு கிடைத்தது. அதில், “இந்தியாவின் மிகப்பெரிய மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி பிரிவு செயல்பாட்டுக்கு வந்தது. தெலங்கானாவின் ராமகுண்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 100 மெகாவாட் மிதக்கும் சூரியசக்தி மின்உற்பத்தி நிலையத்தின் கடைசி பகுதியான 20 மெகாவாட் பிரிவின் வணிக ரீதியான உற்பத்தி தொடங்கிவிட்டது” என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
ஆக, இந்தியாவில் மிதக்கும் சோலார் பேனல்கள் திட்டம் அமலில் உள்ளது உண்மைதான்.. ஆனால், வைரலாகும் வீடியோ சீனாவில் எடுக்கப்பட்டது என்பது தெரியவருகிறது.முடிவு
குஜராத்தில் மிதக்கும் சோலார் பேனல்கள் என சமூக வலைதளங்களில் தவறான தகவல்களுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் அது சீனாவில் நிறுவப்பட்ட சோலார் பேனல்கள் என்பது தகுந்த ஆதாரங்களுடன் உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது உண்மைத் தன்மையை ஆராய்ந்து வெளியிடும்படி, வாசகர்களுக்கு TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.