பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்களை போலீஸ் நடுரோட்டில் இழுத்துச் சென்றதா?
பாகிஸ்தான் ஜிந்தாபாத் என முழக்கம் எழுப்பிய நபர்களை காவல் துறை அடித்து நடுரோட்டில் இழுத்து வந்ததாக பரவும் வீடியோ தவறானது. உண்மையில் அது போபாலில் குற்றச் செயலில் ஈடுபட்ட ரவுடிகளை கைது செய்து அழைத்துச் சென்ற வீடியோ.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 26 பேர் உயிரிழந்தனர். நாட்டையே கொந்தளிக்க வைத்த இந்த கொடூரத்திற்கு பாகிஸ்தான் மறைமுகமாக உதவியது என குற்றம்சாட்டிய இந்தியா, அந்நாட்டுக்கு எதிராக சிந்து நதிநீர் ஒப்பந்தம், விசா ரத்து உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
மேலும் ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் மே 7ஆம் தேதி பாகிஸ்தான் பயங்கரவாத நிலைகள் மீது ஏவுகணை மூலம் வான் வழித் தாக்குதல் நடத்தி அவற்றை தகர்த்தது. இதற்கு பதிலடியாக எல்லையோர கிராமங்கள் மீது பாகிஸ்தான் பீரங்கித் தாக்குதல் நடத்தியது. ஆனால், இந்திய ராணுவம் அதற்கு தக்க பதிலடி கொடுத்து விரட்டி அடித்தது. எனினும் இரு நாடுகள் இடையே மே 10ஆம் தேதி சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.
பரவும் தகவல்
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவி வந்த சூழலில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர்களுக்கு போபால் காவல் துறை நடுரோட்டில் தண்டனை கொடுத்ததாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
K.Ashok adv என்ற எக்ஸ் பயனர் மே 12ஆம் தேதி இந்த வீடியோவை பதிவிட்டு “பாகிஸ்தானை ஆதரித்து 'பாகிஸ்தான் ஜிந்தாபாத்' கோஷங்களை எழுப்பிய உள்நாட்டு தேச துரோகிகளுக்கு போபால் காவல்துறையினர் தர்ம அடிகொடுத்து கைது செய்து ரோட்டில் இழுத்து வந்தனர்” என்று குறிப்பிட்டு இருந்தார்.
Praveen Kumar G.L என்ற பதிவரும், சிறப்பான சம்பவம் என்று குறிப்பிட்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.
மேலும் இணைப்பு 1, இணைப்பு 2, இணைப்பு 3 ஆகிய எக்ஸ் பக்கங்களிலும் இதே கருத்துடன் இதே வீடியோ பகிரப்பட்டு இருந்தது. தீவிரவாதத்தை வளர்க்கும் பாகிஸ்தானின் நலனை விரும்புபவர்கள் பாகிஸ்தானுக்கே அனுப்பி விட வேண்டும் என்றெல்லாம் கருத்து தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரல் வீடியோவின் உண்மை தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவலுடன் பகிரப்படுவது தெரியவந்தது.
முதலில் வைரல் வீடியோவின் கீ ப்ரேம்களை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் முறைக்கு உட்படுத்தினோம். VK News என்ற யூட்யூப் பக்கத்தில் மே 12ஆம் தேதி வெளியான வீடியோ நமக்கு கிடைத்தது. அதில், “தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்த ரவுடி ஜுபைர் மவுலானா மற்றும் அவனது கூட்டாளிகள் மூவரை ஆறு மாத தேடுதல் வேட்டைக்குப் பிறகு போபால் காவல் துறையினர் கைது செய்தனர். ஜுபைர் மவுலானா மீது 55 குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.
வாகனங்களை சேதப்படுத்தியும், பொது இடங்களில் துப்பாக்கிச் சூடு நடத்தியும் போபாலில் பீதியை ஏற்படுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து சட்டவிரோதமாக வைத்திருந்த துப்பாக்கிகள் மற்றும் பிற ஆயுதங்களை காவல் துறையினர் மீட்டனர். கைது செய்யப்பட்ட அனைவரையும் போபால் நகரில் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து gangster Zuber Maulana arrested என்ற கீ வேர்டு துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம். டைம்ப் ஆப் இந்தியா, ப்ரீ ப்ரஸ் ஜர்னல் மற்றும் பாஸ்கர் இங்க்லீஸ் ஆகிய இணையதளங்களில் வெளியான செய்திகள் நமக்கு கிடைத்தன.
டைம்ஸ் ஆப் இந்தியா மே 10ஆம் தேதி வெளியிட்ட செய்தியில், “போபாலைச் சேர்ந்த தொடர் குற்றங்களில் ஈடுபட்ட கேங்ஸ்டர் ஜுபைர் மவுலானா மற்றும் மூவரை காவல் துறை கூட்டுக் குழு கைது செய்துள்ளதாகத் தெரிவித்தது. ஜுபைர் கடந்த ஆறு மாதங்களாக தலைமறைவாக இருந்து வந்தார். அண்மையில் நடைபெற்ற இரு துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் அவருக்கு தொடர்பு இருந்தது.
போபாலில் உள்ள பல்வேறு காவல் நிலையங்களில் 53க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள ஒரு சரித்திர பதிவேடு குற்றவாளி ஜூபர் மவுலானா. கைது செய்யப்பட்ட அவர்களை அதே பகுதியில் காவல் துறையினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர்” என்று தெரிவித்துள்ளது.
ப்ரீ ப்ரஸ் ஜர்னல் வெளியிட்ட செய்தி அறிக்கையில், “தொடர் குற்றச் செயல்களில் ஈடுபட்ட கேங்க்ஸ்டர் ஜுபைர் மவுலானா தனது பண்ணை வீட்டில் மறைந்திருக்கும் போது போலீஸ் கூட்டுக் குழுவால் அதிரடியாக கைது செய்யப்பட்டார். ஜுபைரை போபால் போலீஸார் தெருக்களில் ஊர்வலமாக இழுத்துச் சென்றனர்.
தப்பி ஓட முயன்றபோது ஜுபைரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருப்பினும், அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. வைரல் வீடியோவும் டைம்ஸ் ஆப் இந்தியா, ப்ரீ ப்ரஸ் ஜர்னல் வெளியிட்ட புகைப்படமும் ஒன்றாக பொருந்திப் போனது.
இதே தகவலை பாஸ்கர் இங்க்லீஷ், பன்சால் நியூஸ் ஆகிய ஊடகங்களும் வெளியிட்டு உள்ளன. அவற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக முழக்கம் எழுப்பியதாக எந்த தகவலும் இல்லை.
இதன்மூலம் பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியதால் அவர்கள் கைது செய்யப்பட்டு சாலையில் இழுத்துச் செல்லப்படவில்லை என்பதையும், தொடர் குற்றங்களில் ஈடுபட்டதால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படுவதையும் TeluguPost உண்மை சரிபார்ப்புக் குழு உறுதி செய்துகொண்டது.
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியதற்காக யாராவது கைது செய்யப்பட்டுள்ளனரா என்பது குறித்து தேடியதில் நமக்கு சில செய்தி அறிக்கைகள் கிடைத்தன.
ஈடிவி பாரத் அறிக்கையின் படி, உத்தரபிரதேசத்தின் பரேலி மாவட்டத்தில் டைலர் முகமது சஜித் என்பவர், பேஸ்புக்கில் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று ஆதரவாக பதிவிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கைதுக்குப் பிறகு இந்துஸ்தான் ஜிந்தாபாத், பாகிஸ்தான் முர்தாபாத் என்று அவர் முழக்கமிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
news18 hindi இணையதளம் வெளியிட்ட செய்தியில், பிரதமர் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துக்களை தெரிவித்ததற்காகவும் பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்ற கோஷங்களை எழுப்பியதற்காகவும் முசாபர்நகரில் சாவேஜ் மற்றும் அன்வர் ஜமீல் ஆகிய இருவர் தேசத்துரோக குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டனர் என்று குறிப்பிட்டுள்ளது.
முடிவு
பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பியவர்கள் சில இடங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது உண்மைதான். ஆனால், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கம் எழுப்பிய நபர்களை கைது செய்து நடுரோட்டில் ஊர்வலமாக போலீசார் அழைத்து வரப்படுவதாக பரவும் வீடியோ தவறானது. அது ரவுடிகளை கைது செய்து ஊர்வலமாக அழைத்து வந்த வீடியோ. ஆகவே, செய்திகளை வெளியிடும் போது பகுப்பாய்வு செய்து வெளியிடுமாறு Telugu Post உண்மை சரிபார்ப்புக் குழு கேட்டுக்கொள்கிறது.