இந்து கோயிலை திமுக அரசு இடித்ததாக பரவும் வீடியோ - உண்மை இதுதான்

திமுக அரசு இந்து கோயிலை இடித்ததாக தவறான தகவல் பரவி வருகிறது. உண்மையில் கோயில் மண்டபத்தை தேசிய நெடுஞ்சாலை ஆணையம்தான் இடித்தது

Update: 2025-12-10 15:18 GMT

இந்துக்களுக்கு எதிராக தமிழக அரசு இருப்பதாக பாஜக மற்றும் இந்து அமைப்புகள் தொடர்ச்சியாக குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால், தமிழகத்தில் ஆயிரக்கணக்கான கோயில்களுக்கு குடமுழக்கு நடத்துவது உள்பட இந்து கோயில்களை சிறப்பாக பராமரித்து வருவதாக தமிழக அரசு விளக்கம் அளித்து வருகிறது.

இந்த சூழலில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபத் தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பான மதுரை உயர்நீதிமன்றக் கிளை தனி நீதிபதி உத்தரவை தமிழக அரசு அமல்படுத்தவில்லை. வழக்கமாக ஏற்றப்படும் உச்சிப்பிள்ளையார் கோயில் அருகே தீபம் ஏற்றப்பட்டுவிட்டதாகக் கூறப்பட்டது. இதற்கு பாஜக மற்றும் இந்து அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இதன் தொடர்ச்சியாக பல்வேறு போலிச் செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன.

பரவும் தகவல்

திமுக அரசு இந்து கோயிலை இடித்துவிட்டதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவில், “சினிமா காட்சிகளை நேரில் பார்ப்பது போல அரங்கேறியுள்ள இந்த சம்பவம் சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது” என்று குரல் பதிவும் இடம்பெற்றது.

வைரல் வீடியோவைப் பகிர்ந்த @ArulkumarBjp என்ற எக்ஸ் பதிவர், “இந்துக்களே...! இனி திமுக விற்கு ஓட்டுப் போடுவாதில்லை என்று முடிவு செய்யுங்கள்...! இந்து விரோத தி.மு.க.வை விரட்டியடிப்போம்” என்று விமர்சனம் செய்திருந்தார்.

Archive 

இதே கருத்துடன் பதிவு 1 (Archive), பதிவு 2 (Archive), பதிவு 3  (Archive) வைரல் வீடியோ பகிரப்பட்டு இருந்தது.

 

உண்மை சரிபார்ப்பு

வைரல் வீடியோவின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost நடத்திய ஆய்வில் அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. இடிக்கப்பட்டது கோயில் அல்ல, கோயில் மண்டபம் என்பதும், இடித்தது தமிழ்நாடு அரசு அல்ல என்பதும் உறுதி செய்யப்பட்டது.

வைரல் வீடியோ வெறும் 14 விநாடிகள் மட்டுமே இருந்த நிலையில், கோயில் முன்பு இருந்த முகப்பு இடிக்கப்படுவது மட்டுமே தெரிகிறது. அதற்கு பின்னால் கோயில் கருவறை பகுதி இருப்பதையும் பார்க்க முடிந்தது. வைரல் வீடியோவின் முக்கிய காட்சிகளை ஸ்க்ரீன் ஷார்ட் எடுத்து கூகுள் லென்ஸ் மூலம் ரிவர்ஸ் இமேஜ் சர்ச் செய்தோம். 2024 நவம்பர் 19ஆம் தேதி பாலிமர் தனது சமூகவலைதள பக்கத்தில் வெளியிட்ட வீடியோ நமக்கு கிடைத்தது.

அதில், “திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் சர்வீஸ் சாலைக்காக சிலம்பாத்தம்மன் கோயில் முகப்பு சாலை இடிக்கும் பணி நடைபெற்றது. பல ஆண்டுகளாக பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில், இடிக்கும் பணிகள் நடைபெற்றன” என்று தெரிவிக்கப்பட்டது

Full View

தேசிய நெடுஞ்சாலையில் சாலை அமைக்கும் பணிகள் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் வரும் நிலையில், பொருத்தமான கீ வேர்டுகள் துணையுடன் கூகுளில் சர்ச் செய்தோம்.


தி இந்து இணையதளத்தில் அதே 2024 நவம்பர் 19 வெளியான செய்தி கிடைத்தது. அதில், “சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஜனப்பன்சத்திரத்தில் உள்ள சிலம்பத்தம்மன் கோயிலின் மண்டபத்தை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) அகற்றியது. கோயிலின் ஒரு பெரிய பகுதி நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்டது.


இதுகுறித்து NHAI அதிகாரிகள் கூறுகையில், இடிக்கப்பட்ட கட்டமைப்பிற்கு ₹29 லட்சம் இழப்பீடும் வழங்கியுள்ளோம் கருவறைக்கு எந்த வகையிலும் இடையூறு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது என்று தெரிவித்தனர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல சிலம்பாத்தம்மன் கோயில் இடிக்கப்பட்டது தொடர்பாக தினமணி, தினகரன் நாளிதழ்களும் இணையப் பக்கத்தில் செய்திகள் பதிவேற்றம் செய்துள்ளன. அதிலும் கிராம மக்கள், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது என்றும், ஆணையமே கோயில் மண்டபத்தை இடித்ததாகவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அதேபோல பேக்ட் செக்கர் முகமது சுபைர், கோயில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால்தான் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக இடிக்கப்படுவதாக குறிப்பிட்டு கடந்த ஆண்டே பதிவிட்டுள்ளார்.

இந்த ஆதாரங்கள் மூலமாக தமிழ்நாடு அரசு கோயிலை இடிக்கவில்லை என்பது தகுந்த ஆதாரங்களுடன் தெரியவருகிறது. ஆனால், வைரல் வீடியோவில் தமிழ்நாடு அரசை இணைத்து தவறான தகவல் பகிரப்படுகிறது.

முடிவு


திமுக அரசு கோயிலை இடித்ததாக தவறான தகவலுடன் வீடியோ பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் சாலை விரிவாக்கப் பணிகளுக்காக தேசிய நெடுஞ்சாலை ஆணையமே கோயில் மண்டபம் பகுதியை மட்டும் இடித்துள்ளது என்பது தகுந்த ஆதாரங்களுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது பகுப்பாய்வு செய்து வெளியிடும்படி TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.

Claim :  திமுக அரசு இந்து கோயிலை இடித்துவிட்டதாக வைரலாகும் வீடியோ
Claimed By :  Social Media Users
Fact Check :  Unknown
Tags:    

Similar News