துணை முதல்வர் உதயநிதி கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்தாரா?
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்ததாக தவறான தகவல் பரவி வருகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. வங்கக் கடலில் நிலை கொண்ட டிட்வா புயல் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. மழையை எதிர்கொள்ள தமிழக அரசு பல்வேறு வகையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. ரெட் அலர்ட், ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்ட மாவட்டங்களில் பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் இருந்தனர்.
நிவாரண முகாம்கள் உள்ளிட்டவை தயார் நிலையில் இருந்தன. சென்னையில் 24 மணி நேரமும் இயங்கும் அவசரகால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டு மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டன. அதே சமயம் மழை தொடர்பாகவும், அரசின் நடவடிக்கைகள் குறித்தும் பல்வேறு போலித் தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பரவும் தகவல்
அவசரகால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்பியூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு நடத்தியதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதனை பகிர்ந்த பலரும் கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்து நாடகம் நடத்துவதாக தமிழக அரசின் மீது விமர்சனங்களை முன்வைத்தனர்.
Blazzy Rajesh என்ற பேஸ்புக் பயனர், systemஐ ஆன் செய்ய கூட நேரமில்லாமல் தீவிர கண்காணிப்பில் துணை முதல்வர் என்று குறிப்பிட்டு இருந்தார்.
tvk_vijay_2026 என்ற இன்ஸ்டாகிராம் பயனர், கம்யூட்டரை ஆன் செய்யாமல் எப்படி ஆய்வு செய்ய முடியும் என்று கேட்டிருந்தார்.
மேலும் இதே கருத்துடன் பதிவு 1, பதிவு 2 சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரலாகின.
உண்மை சரிபார்ப்பு
வைரல் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. செயல்பாட்டில் உள்ள கம்யூட்டரிலேயே உதயநிதி ஆய்வு செய்துள்ளார்.
முதலில் ஆய்வு தொடர்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புகைப்படம் பதிவு செய்துள்ளாரா என்பதை சரிபார்த்தோம். நவம்பர் 30ஆம் தேதி தனது எக்ஸ் பக்கத்தில், “சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு மையத்துக்கு சென்று மழை பாதிப்பு புகார்கள், அதன் மீதான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தோம்” என்று குறிப்பிட்டு வைரல் புகைப்படத்தை பதிவிட்டு இருந்தார்.
அந்த புகைப்படம்தான் கம்யூட்டரை ஆன் செய்யாமல் உதயநிதி ஆய்வு செய்தார் என்ற தகவலுடன் பரவி வருகிறது. எனினும், அந்த புகைப்படம் பக்கவாட்டில் இருந்ததால், கம்யூட்டர் ஆனில் உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை.
இதனையடுத்து துணை முதல்வர் ஆய்வு செய்த வேறு ஏதேனும் வீடியோ ஆதாரங்கள் கிடைக்குமா என அவரது சமூக வலைதளப் பக்கத்திலேயே மீண்டும் தேடினோம். நவம்பர் 30ஆம் தேதியே மழை பாதிப்பு ஆய்வு தொடர்பான தனது நடவடிக்கைகளின் வீடியோ தொகுப்பை உதயநிதி வெளியிட்டார்.
அதில் 2.16 நிமிடத்தில் இருந்து 2.28 நிமிடங்கள் வரை ஒளிபரப்பாகும் காட்சியில் வைரல் புகைப்படத்தில் உள்ள காட்சிகளும் இடம்பெற்றிருந்தன. அதில் கம்யூட்டர் ஆனில் இருப்பதும், அதனை உதயநிதி இயக்கி ஆய்வு செய்வதும் மக்களின் குறைகளைக் கேட்பதும் தெளிவாக உள்ளது.
நியூஸ் தமிழ் தொலைக்காட்சி நவம்பர் 30 வெளியிட்ட வீடியோவிலும், ஆனில் இருந்த கம்யூட்டர் வாயிலாக மக்களின் புகார்களை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கேட்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் நமது தேடலில் வைரல் புகைப்படம் தவறான தகவலுடன் பரவி வருவதாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் விளக்கம் அளித்திருந்ததைக் கண்டறிந்தோம். அதில், துணை முதல்வர் கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்வதாக வதந்தி பரவுகிறது என்று குறிப்பிடப்பட்டு இருந்தது. மேலும், ஆன் செய்யப்பட்டுள்ள கம்யூட்டரை துணை முதல்வர் இயக்கி அதில் உள்ளவற்றை ஆய்வு செய்வதும் தெளிவாகவே இருந்தது.
துணை முதல்வர் கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்வதாகப் பரவும் வதந்தி!@CMOTamilnadu @TNDIPRNEWS https://t.co/ydwr8Mtg3g pic.twitter.com/FkNIUgW6o7
— TN Fact Check (@tn_factcheck) November 30, 2025
இந்த ஆதாரங்கள் மூலம் புகைப்படம் தொடர்பாக வைரலாகும் தகவல் பொய்யானது என்பதை TeluguPost உண்மை கண்டறியும் குழு உறுதி செய்தது.
முடிவு
சென்னை அவரச கால கட்டுப்பாட்டு மையத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கம்யூட்டரை ஆன் செய்யாமல் ஆய்வு செய்ததாக தவறான தகவலுடன் புகைப்படம் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் உதயநிதி இயக்கத்தில் உள்ள கம்யூட்டரையே பயன்படுத்தி மக்கள் குறைகளை கேட்டார் என்பது தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. ஆகவே, செய்திகளை வெளியிடும்போது அதன் உண்மைத் தன்மையை சரிபார்த்து பகிரும்படி வாசகர்களை TeluguPost உண்மை கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.