உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியால் கேக் வெட்டினாரா? - உண்மை இதுதான்
உதயநிதி ஸ்டாலின் பட்டாக் கத்தியால் கேக் வெட்டியதாக தவறான தகவலுடன் புகைப்படம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டின் துணை முதல்வராகவும், திமுகவின் இளைஞரணிச் செயலாளருமாக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். அரசிலும், திமுகவிலும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அடுத்து அதிகாரம் மிக்க நபராகவும் வலம் வருகிறார். உதயநிதி ஸ்டாலினின் 49வது பிறந்தநாள் நவம்பர் 27ஆம் தேதி திமுகவினரால் கொண்டாடப்பட்டது.
சென்னையில் உள்ள பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்குச் சென்று உதயநிதி மரியாதை செலுத்தினார். பிறகு தனது குறிஞ்சி இல்லத்திலும் திமுக தொண்டர்களின் வாழ்த்துகளைப் பெற்றார். உதயநிதிக்கு பல்வேறு கட்சித் தலைவர்களும் நேரில் சந்தித்து பரிசுகளை வழங்கி பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துவிட்டுச் சென்றனர். அனைவரின் வாழ்த்துகளையும் உதயநிதி நாள் முழுவதுமாக இருந்து ஏற்றுக்கொண்டார். 200 தொகுதிகளில் வெற்றிபெற வேண்டும் என்பதுதான் தனது பிறந்தநாள் பரிசாக இருக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
பரவும் தகவல்
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டியதாக ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தில் உதயநிதி ஸ்டாலின் வாள் ஒன்றை உயர்த்திப் பிடித்தபடி இருக்கிறார். அவருக்கு முன் இருக்கும் மேசையில் பிறந்தநாள் கேக் ஒன்று வெட்டப்படாமல் உள்ளது. புகைப்படத்தை பகிர்ந்து, சாதாரண மக்கள் பட்டா கத்தியால் கேக் வெட்டினால் கைது செய்யப்படுகிறார்கள், அதேபோல உதயநிதி மீது நடவடிக்கை இருக்குமா என்று விமர்சனங்களுடன் கேள்விகள் முன்வைக்கப்பட்டன.
@Karthickrames1 என்ற எக்ஸ் பதிவர், “ரவுடிங்க பெரிய கத்தில கேக் வெட்டினால் கைது பண்றீங்க இப்போ பண்ணுங்க இல்ல அறிவுரை சொல்லுங்க பாப்போம்” என்று கேள்வி எழுப்பினார்.
@Selva_AIADMK/ என்ற எக்ஸ் பயனர், “பட்டா கத்தியால் கேக் வெட்டி கொண்டாடினால் பாயும் வழக்கு! உதயநிதிக்கு மட்டும் விதிவிலக்கா?” என்று குறிப்பிட்டு புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.
மேலும், வைரல் புகைப்படத்தை பகிர்ந்து பதிவு 1, பதிவு 2 ஆகிய சமூக ஊடகங்களும் அதே கருத்தை பதிவு செய்திருந்தை காண முடிந்தது.
உண்மை சரிபார்ப்பு
வைரலாகும் புகைப்படத்தின் உண்மைத் தன்மை குறித்து TeluguPost உண்மைக் கண்டறியும் குழு நடத்திய விசாரணையில், அது தவறான தகவல் என்பது தெரியவந்தது. உண்மையில் உதயநிதி ஸ்டாலின் பிளாஸ்டிக் கத்தியால்தான் கேக் வெட்டியுள்ளார்.
முதலில் உதயநிதியுடன் இருப்பவர் யார் என்பதைத் தேடிப் பார்த்தோம். அவர் திமுக இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல் என்பது தெரியவந்தது. அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் உதயநிதியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவிட்டு இருப்பதைப் பார்த்தோம்.
அதில், “திராவிடக் கூர்வாளாய் களமாடும் ஈடு இணையற்ற இளம் தலைவர் பிறந்த நாளில் கொள்கைப் போர்வாள் பரிசளித்த உணர்ச்சிமிகு தருணம்” என்று குறிப்பிட்டு இருந்ததை காண முடிந்தது.
மேலும் நமது தேடலில் உதயநிதி கேக் வெட்டுவது போன்ற மற்றொரு பதிவையும் ஜோயல் வெளியிட்டு இருந்தார். அதில், உதயநிதி வழக்கமாக கேக் வெட்டுவதற்கு உபயோகப்படுத்தும் பிளாஸ்டிக் கத்தியையே பயன்படுத்துவது தெளிவாக இருந்தது.
வேறு ஏதேனும் ஆதாரங்கள் கிடைக்குமா என்று தேடியபோது திமுகவின் அதிகாரப்பூர்வ தொலைக்காட்சியான கலைஞர் டிவியில் வெளியான வீடியோ கிடைத்தது. அதில் உதயநிதி நீல நிற பிளாஸ்டிக் கத்தியால் கேக் வெட்டும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.
நம்முடைய கூற்றை யூடர்ன் உண்மை சரிபார்ப்பு நிறுவனமும் தனது சமூக வலைதளத்தில் உறுதிப்படுத்தியுள்ளது. அதில், “துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டாக்கத்தியால் பிறந்தநாள் கேக்-ஐ வெட்டியதாக பரப்பப்படும் தகவல் வதந்தியே” என்று குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆதாரங்கள் மூலமாக உதயநிதி ஸ்டாலின் தனது பிறந்தநாளின் போது பட்டாக் கத்தியால் கேக் வெட்டவில்லை . திமுக நிர்வாகி ஒருவர் பிறந்தநாளாக அளித்த போர்வாளை தூக்கிப் பிடித்து போஸ் கொடுக்கிறார் என்பது தகுந்த சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளது.
முடிவு
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பட்டா கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டி புகைப்படத்திற்கு போஸ் கொடுத்ததாக தவறான தகவல் பரப்பப்பட்டு வருகிறது. உண்மையில் பிளாஸ்டிக் கத்தி கொண்டே உதயநிதி கேக் வெட்டினார். ஆகவே, தகவல்களை வெளியிடும்போது உண்மைத் தன்மையை சரிபார்த்து வெளியிடும் படி வாசகர்களை TeluguPost உண்மைக் கண்டறியும் குழு கேட்டுக்கொள்கிறது.