கோடை காலம் வந்தாலே பழங்களின் வசீகரிக்கும் மணம், சுவை, தோற்றத்தின் பக்கம் மக்கள் திரும்பிவிடுவர். அதில் முக்கிய இடம் வகிக்கிறது தர்பூசணிப் பழங்கள். விலை மலிவாகவும், வெயிலின் தாக்கத்தில் இருந்து ஆறுதல் தரவும் தர்பூசணிகள் உதவுகின்றன. இந்த நேரத்தில் தர்பூசணிப் பழங்களில் நிறச்சாயம் சேர்க்கப்படுவதாக அதிர்ச்சி செய்திகள் வெளியாகின.
நிறச்சாயம் சேர்க்கப்படுவது ஒருபக்கம் இருந்தாலும், இதற்காக எரித்ரோசின் (Erythrosine) போன்ற வேதிப் பொருட்கள் கலக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இதனால் புற்றுநோய் ஏற்படும் அபாயம் இருப்பதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களே கூறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால், மாநிலத்தில் தர்பூசணிப் பழங்களின் விற்பனை சரிந்து தேக்கமடைந்தது. இது தொடர்பான காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஜெயா பிளஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டிருந்த ஒரு சமூக வலைத்தள நியூஸ் கார்டில், உஷார் மக்களே உஷார் எனத் தலைப்பிட்டு, “கோடை காலங்களில் மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடும் பழம் தர்பூசணி. பழத்தின் நிறத்தை வைத்தே மக்கள் வாங்கும் நிலை உள்ளதால், தர்பூசணி பழங்களில் சிவப்பு நிறத்தை அதிகமாக்க ஊசி மூலம் இரசாயன நிறமூட்டியை செலுத்துகின்றனர்; இந்த இரசாயன நிறமூட்டி கலந்த தர்பூசணியை சாப்பிடும்போது தலைவலி, காய்ச்சல் மற்றும் புற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். உஷார் மக்களே... உஷார்... தர்பூசணி பழத்தை வாங்கும்போது நிறத்தை பார்த்து வாங்குங்கள்,” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதுபோன்றே பெரும்பாலான ஊடகங்கள், காணொளி வடிவிலும் செய்திகள் வடிவிலும் இதே தகவல்களை வெளியிட்டிருந்தன.
ஒன் இந்தியா வெளியிட்டிருந்த ஒரு செய்தியில், “தர்பூசணி ஆய்வில் ரசாயனம், நிறமிகள் சேர்க்கப்பட்டுள்ளனவா என பார்த்தோம். இதை பொதுமக்கள் கண்டுபிடிப்பது எளிதுதான். தர்பூசணி பழத்தை வாங்கும் போதோ அல்லது தர்பூசணி பழத்துண்டுகளை வாங்கும் போதோ அதில் டிஸ்யூ பேப்பரை கொண்டு ஒத்தி எடுத்தல் வேண்டும். அப்போது நிறமிகள் இருந்தால் அந்த பேப்பரில் ஒட்டிக் கொள்ளும் அதை வைத்து இந்த பழத்தில் நிறமி கலந்திருக்கிறார்கள் என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்,” என்று கூறப்பட்டிருந்தது.
வைரல் பதிவின்
இணைப்பை இங்கே காணலாம்.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி உணவு பாதுகாப்பு அலுவலர்கள் கொடுத்த சீரற்ற விளக்கத்தால் தவறான கண்ணோட்டத்துடன் பரவிவருவது கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் விற்கப்படும் தர்பூசணி பழங்களில் நிறச்சாயங்கள் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதை அறிய, ‘தர்பூசணி பிரச்சினை குறித்து விவசாய சங்கங்கள்’ என்று இணைய உலாவியில் தேடினோம். அப்போது, ‘தர்பூசணி விவசாயிகளுக்கு இழப்பீடு வேண்டும்’ என்ற தலைப்பில் ‘
தினமலர்’ ஒரு செய்தி வெளியிட்டிருந்தது.
அதில், “'தர்பூசணி பழத்தில் செயற்கை சாயம் ஏற்றப்படுவதாக தவறான தகவல் பரப்பிய உணவுப்பாதுகாப்புத்துறை அதிகாரிகளால் விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதற்கான இழப்பீடு வழங்க வேண்டியது அரசின் பொறுப்பு' என தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் வலியுறுத்தியுள்ளனர்,” என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், ‘
தி இந்து’ ஆங்கில செய்தித் தளத்தில், விவசாயிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில் ஆஜரான தமிழ்நாடு அரசின் சிறப்பு வழக்கறிஞர், விவசாயிகளுக்கு தர்பூசணி விதைகளை தோட்டக்கலைத் துறை தான் விநியோகித்தது என்றும், சமீபத்தில் துறை மேற்கொண்ட ஆய்வுகளில் இப்போது வெளிச்சந்தையில் விற்கப்படும் பழங்களில் எந்தவிதமான ரசாயனங்களும் செலுத்தப்பட்டிருப்பதைக் கண்டறிய முடியவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை கேட்ட நீதிபதிகள், விவசாயிகளுக்கு இழப்பு ஏற்படாமல் இருக்க, தர்பூசணி பழத்தின் நம்பகத்தன்மை குறித்து அரசு விளம்பரம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டது.
தமிழ் இந்து செய்தித் தளத்தில், ‘இந்த வழக்கு நீதிபதி டி.பரத சக்ரவர்த்தி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.கேசவன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசுத் தரப்பில், ‘தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட ஆய்வில் எங்கும் தர்பூசணியில் ரசாயனம் கலக்கப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. அது தொடர்பாக பொதுமக்களிடம் நேர்மறையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது’ என அரசு தெரிவித்ததாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் ‘தர்பூசணியில் எந்த கலப்படமும் இல்லை’ என்பதை அரசு கூறி, அந்த கூற்றை உறுதி செய்தது. இது தொடர்பான செய்திகளும் முதன்மை தமிழ் செய்தி நிறுவனங்களின் யூடியூப் பக்கத்தில் பதிவேற்றப்பட்டிருந்தது. அதிலிருந்து நியூஸ் தமிழ் 24x7 வீடியோவை கீழே இணைத்துள்ளோம்.
இதுமட்டுமில்லாமல், தர்பூசணி பழம் தொடர்பாக கருத்து தெரிவித்த உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சதீஷ் குமாருக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதில், வழக்கை விசாரித்த நீதிமன்றம் மனுதாரர் கூறும் குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தகவலை ‘
ஈடிவி பாரத் தமிழ்நாடு’ செய்தித் தளத்தில் பார்க்க முடிந்தது.
மேற்கொண்ட ஆய்வுகளின்படி, தர்பூசணியில் நிறச்சாயம் சேர்க்கப்பட்டுள்ளதாக பரவும் செய்திகள் உண்மையல்ல என்பதை தமிழ்நாடு அரசே உறுதி செய்துள்ளது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.