உண்மை சரிபார்ப்பு: தமிழ்நாட்டில் தமிழ் பாடம் கட்டாயமில்லை?
தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயமில்லை என்று கூறும் தவறான தகவல் கொண்ட காணொளிக்கு பதிலளிக்கும் விதமாக, 2006 ஆம் ஆண்டு தமிழ் கற்றல் சட்டம் தமிழக அரசால் இயற்றப்பட்டு, படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் கட்டாயப் பாடமாக செயல்படுத்தப்பட்டு வருவதாக அரசு பதிலளித்துள்ளது.
தேசியக் கல்விக் கொள்கை 2020, பல மாநிலங்களில் அமல்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அதை நிறுவினால், மும்மொழிக் கொள்கை கடைபிடிக்கும் சூழலுக்கு பள்ளிகள் தள்ளப்படும் என ஆளும் கட்சி முதல் பெரும்பாலான கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. இதற்கிடையில், தமிழ்நாட்டிற்கு ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டமான சமக்ரா ஷிக்ஷா அபியான் திட்டத்தின் கீழ் வழங்க வேண்டிய ரூ.2,152 கோடி நிதி இன்னும் மாநிலத்திற்கு வழங்கப்படவில்லை. மாணவர்களின் நலன்கருதி உடனடியாக இந்த தொகையை விடுவிக்க வேண்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ முழுமையாக அமல்படுத்தி, மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை, தமிழ்நாட்டிற்கான ‘சமக்ர சிக்ஷா’ திட்டத்தின்கீழ் நிதி விடுவிக்கப்பட மாட்டாது என ஒன்றிய கல்வித்துறை அமைச்சர் சமீபத்தில் தெரிவித்திருப்பது குறித்த கவலையை வெளிப்படுத்தும் விதமாகத் தான் முதலமைச்சர் பிரதமர் மோடிக்கு அக்கடிதத்தை எழுதியிருந்தார் என தினமணி செய்தி வெளியிட்டிருக்கிறது.
இந்த சூழலில், தமிழ்நாட்டில் ஏன் ‘தமிழ்’ பாடம் இதுவரை கட்டாயமாக்கப்படவில்லை என்று கோரும் ஒரு காணொளி சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
முத்துக்குமார் சுப்பையா (@smkumarlakshmi) எனும் எக்ஸ் பயனர், “தெலங்கானாவில் அமலுக்கு வந்த தேசிய கல்விக் கொள்கை.! அதனால் தெலுங்கானாவில் அவர்கள் தாய்மொழி தெலுங்கு கட்டாயமாகியது. இதை சொல்வதற்கு தமிழக ஊடகங்கள் ஏன் தயங்குகிறது,” எனக் கேள்வியெழுப்பி, ‘தமிழ் ஜனம்’ செய்திச் சேனலின் வீடியோ ஒன்றை பதிவிட்டிருந்தார்.
அந்த காணொளியில், “தெலங்கானாவில் தேசிய கல்விக் கொள்கை உள்ளது. ஆனால், அங்கு தெலுங்கு பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயமாக்கினால், இங்கு மும்மொழிக் கொள்கை வந்துவிடும். தமிழ்நாட்டில் ஏன் தமிழை இன்னும் கட்டாயப்படுத்தவில்லை. அப்படி செய்தால் மும்மொழிக் கொள்கை, இந்தி திணிப்பை வைத்து அரசியல் செய்ய முடியாது,” என்று கூறுகிறார்.
வைரல் பதிவின் இணைப்பு இங்கே உள்ளது.
பகிரப்படும் தகவலின் ஸ்கிரீன்ஷாட்டை கீழே காணலாம்.
உண்மைத் சரிபார்ப்பு:
மேற்கூறப்பட்ட தகவல்கள் குறித்து TeluguPost உண்மை கண்டறியும் குழு விசாரணை நடத்தியதில், இந்த செய்தி தவறாக பரப்படுவது கண்டுபிடிக்கப்பட்டது.
முதலில் பகிரப்படும் காணொளி உண்மையா என்பதை அறிய, ‘தெலங்கானாவில் அமலுக்கு வந்த தேசிய கல்விக் கொள்கை ஜனம்’ என்று தேடியபோது, அவர்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அந்த காணொளி கிடைத்தது. அதில் மேற்கூறியபடி உள்ள தகவல்களை அவர் பேசியிருக்கிறார்.
எனவே, தமிழ்நாட்டில் தமிழ் பாடம் கட்டாயம் இல்லையா, அது தொடர்பாக அரசு நடவடிக்கை எடுக்கவில்லையா அல்லது தற்போதைய அரசின் கொள்கை தான் என்ன என்பதை ஆராய, “தமிழ்நாட்டில் தமிழ் கட்டாயப் பாடம்” என்ற வார்த்தைகளுடன் தேடலைத் தொடங்கினோம். அப்போது, 'பிபிசி தமிழ்' செய்தித் தளத்தில், “தமிழ் மொழி கற்றல் சட்டம் 2006-ன் படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழை ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கற்றுக் கொடுக்க வேண்டும். அதன் படி, 2024-2025-ம் ஆண்டில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் தமிழ் கற்றுக் கொண்டிருப்பதை பள்ளிகள் உறுதி செய்திருக்க வேண்டும் என்று அரசு கூறுகிறது,” என்று குறிப்பிடப்பட்டிருந்த செய்தி கிடைத்தது.
மேலும், தமிழ்நாட்டின் எல்லையோர பகுதிகளில் இருக்கும் அரசுப் பள்ளிகளில் தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன. உருது கற்று தரப்படும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இயங்கி வருகின்றன என்றும் கூறப்பட்டிருந்தது.
தமிழ் பாடம் தமிழ்நாட்டில் கட்டாயம் என்பது உறுதியானதையடுத்து, இந்த காணொளிக்கு மறுப்புத் தெரிவித்து அரசு தரப்பில் ஏதேனும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளதா என்பதை தேடிப் பார்த்தோம். அப்போது, தமிழ்நாடு அரசின் உண்மை கண்டறியும் குழு, இது தொடர்பான ஒரு சமூக வலைத்தளப் பதிவை வெளியிட்டிருந்தது.
அந்த பதிவிலும், தமிழ்நாடு தமிழ் கற்றல் சட்டம் கடந்த 2006-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் இயற்றப்பட்டது. அனைத்து வகையான பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்புவரை தமிழைக் கட்டாயப்பாடமாக்க வேண்டும் என்று இச்சட்டம் கூறுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், கடந்த 2015-2016 கல்வியாண்டில் இச்சட்டம் ஒன்றாம் வகுப்பில் அமல்படுத்தப்பட்டு ஒவ்வொரு வகுப்பாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. 2024-2025 கல்வியாண்டில் 10-ஆம் வகுப்புவரை சி.பி.எஸ்.சி, ஐ.சி.எஸ்.இ உள்ளிட்ட அனைத்து தனியார் பள்ளிகளிலும் தமிழ் கட்டாயம் என்று பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டிருந்தது என்று அந்த பதிவில் பகிரப்பட்ட விளக்கக் குறிப்பில் கூறப்பட்டிருந்தது.
முடிவு:
மேற்கொண்ட தணிக்கையின்படி, தமிழ்நாட்டில் ‘தமிழ்’ பாடம் கட்டாயமாக்கப்படவில்லை எனப் பரவும் செய்திகள் தவறாக சித்தரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது எனவும், மாநிலத்தில் வரும் கல்வியாண்டு முதல் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் தமிழ் பாடம் கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்திருப்பதும் உறுதி செய்யப்பட்டது. எனவே, செய்திகளை பகுப்பாய்வு செய்த பின் பகிரும் படி TeluguPost உண்மை கண்டறியும் குழு இதன் வாயிலாக கேட்டுக்கொள்கிறது.
Claim : தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் தமிழ் கட்டாயப் பாடமாக அறிவிக்கப்படவில்லை என ஒருவர் பேசும் காணொளி
Claimed By : Social Media Users
Fact Check : Unknown